Thursday 25 December, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்


2009ஆம் ஆண்டு விரைவில் பிறக்க இருக்கிறது. புத்தாண்டு பிறப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போதும் இந்த ஆண்டாவது எல்லாருக்கும் நல்லவிதமாக அமையாதா? என்ற ஆசை அனைவருக்குமே தோன்றத்தான் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை நமக்குத் தந்துவிட்டே செல்கிறது. சென்ற ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடந்த விபத்து இன்னும் கண்ணில் நிற்கிறது. காவல் துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல நிபந்தனைகள் விதித்து வருகின்றனர். அதை ஒழுங்காக கடைப்பிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே குடியும் கும்மாளமுமாகத்தான் கொண்டாட வேண்டுமா?சேவையுள்ளம் கொண்டோருடன் இணைந்து அன்னதானம் செய்வது, மரக்கன்றுகள் நடுவது, கண்தானம், ரத்த தானம் பற்றிய பரப்புரைகள் செய்வது, கவிராத்திரி நடத்துவது, நகைச்சுவை கிளப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று எவ்வளவோ மகிழ்ச்சியான வழிகளில் ஏதேனும் ஒன்றிணை மேற்கொள்ளலாம். அதை விடுத்து அன்னிய நாடுகளை பின்பற்றி நாமும் குடி, கூத்து என கும்மாளமிட்டு, சிலர் போதை மிகுதியால் விழுந்து அடிபட்டு இறந்து போவதும், சிலர் கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தேவையா?நீங்கள் சிரித்தால் பக்கத்தில் இருப்பவர்களின் முகத்திலும் சிரிப்பு பற்றிக் கொள்ளும். இந்த ஆண்டு புன்னகை பூக்கும் புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!

Friday 19 December, 2008

தர்ம சிந்தனை


பொதுமக்களைவிட பிச்சைக்காரர்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவே இருப்பதாக பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் அமைத்திருப்பார்கள். நீங்களும் அப்படிப் பட்டவர்களை நேரிலும் பார்த்திருக்கலாம். பத்திரிகைகளிலும் அவ்வப்போது சில புள்ளி விவரங்களை வெளியிடுகின்றன. "பாத்திரமறிந்து பிச்சையிடு' என்பது பழமொழி. (இந்த பாத்திரம் என்பது அவர்களின் கதாபாத்திரம் அதாவது கேரக்டர்) ஆனால் இப்போது யாரையும் கணிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்.இதையெல்லாம் படிக்கும்போதும், புகைப்பிடிப்பது, மது அருந்துவதுமாக அவர்களைப் பார்க்கும் போதும் இவர்களுக்கு ஏன் பிச்சையிட வேண்டும் என்று எண்ணியிருக்க கூடும். நானும் அவ்வாறுதான் எண்ணிணேன். ஆனால் சமீபத்தில் விவேகானந்தர் கூறியிருந்ததைப் படிக்க நேர்ந்து. அதன்பிறகு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அவர் கூறியதாவது...""நீங்கள் கொடுக்கும் ஓரிரு பைசாவை ஒரு பிச்சைக்காரன் எப்படி செலவுடுகிறான் என்பது குறித்து ஏன் மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டும்? எதுவுமே தராமல் அவனைத் திருடனாக்குவதைவிட, வசதியுள்ளவர்கள், தங்களால் முடிந்ததைப் பிச்சையிடுவது நல்லதல்லவா? நீங்கள் தருகிற அற்ப காசைக் கொண்டு அவன் கஞ்சா வாங்கிட செலவிட்டால் அது அவனை மட்டும்தான் பாதிக்கும். ஆனால் அவன் திருடனாகவோ, அதைவிட கேவலமானத் தொழில் செய்பவனாகவோ மாறிவிட்டால் அது சமுதாயத்தையே பாதிக்கும் அல்லவா?'' என்கிறார்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

Saturday 13 December, 2008

துரித உணவும் பிரபுதேவாவும்


நடனப்புயல் என்று அழைக்கப்படும் நடிகர் # இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (வயது 13) சமீபத்தில் (4.12.08) புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். கடந்த ஓரிரு வருடங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.


பெற்றோர்களின் எதிர்ப்புக்கிடையில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவை மீண்டும் குடும்பத்துடன் இணைத்து வைத்தவன் என்ற வகையில் மூத்தமகன் விஷால் மீது இருவருக்கும் அதீதசெல்லம். புத்திசா-த்தனமும் எல்லாருடனும் அன்புகாட்டுவதென துறுதுறுப்பாக திரிந்த விஷாலுக்கு, பிடித்தது ஃபாஸ்ட் ஃபுட் உணவாம். அந்த உணவே அவனுக்கு எமனாக அமைந்ததுதான் சோகம்!


உணவுகள் மனிதன் உயிர்வாழ உதவுபவை. அவையே உயிர்துறக்க காரணமாகுமா? ஆகும் என்கிறார்களே! சத்தான உணவு வகைகளை மனிதன் உட்கொள்வது போக, இப்போது மக்கள் நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார்கள். போட்டி நிறைந்த உலகத்தில் உண்பதற்குகூட நேரமின்றி கிடைத்த உணவுகளை விழுங்கிவைக்கிறோம். அது சத்தானதா, உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் பசி மறக்க வேண்டும், அவ்வளவுதான். அதற்கு மக்கள் ஃபாஸ்ட்புட் மற்றும் “பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை நாடுகின்றனர். அவற்றினால் வரும் தீங்கினை அறியாமல்! ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு வகைகளால் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது என்பதால் விஷாலுக்கு தரக்கூடாது என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். சுவைக்காக இவ்வகை துரித உணவுகளில் அஜினமோட்டோ எனும் பொருள் கலக்கப்படுவதே இதற்குக் காரணம். இவை நாளடைவில் உயிரையே குடிக்கக்கூடிய அளவுக்கு கொடுமையானது என்கிறார்கள். (அஜினமோட்டோ பல நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கிறதாம்.)


உணவு விஷயத்தில் நீங்க எப்படி? என்ன பண்ணப் போறீங்க?

Monday 8 December, 2008

தமிழின் நவீன சூழலும் புதிய பாதைகளும்

இன்றைய சூழலில் தமிழோ தமிழ்க்கவிதையோ சாகவில்லை. கூர்மையான சிந்தனையும் மொழி வன்மையும் கொண்ட தாகமுள்ள இளைஞர்கள் தங்கள் மெய் வருத்தம் பாராமல் புதிய நவீன கவிதைகளை அயராமல் எழுதியும், பொருள் விளக்கம் பாராமல் பிரசுரித்தும் வருகிறார்கள்.ஒவ்வொரு நவீன கவிதையும் அதற்கே உரிய அனுபவங்களின் பலத்தையும் வெளிப்பாட்டு நியாயங்களையும் உள்ளமைத்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள நந்தவனப்பூக்கள் போல் மிக வித்தியாசமான திகைக்க வைக்கும் வண்ணக்கலைகளுடன் வகைப்படுத்த முடியாத ஏராளமான தனித்தன்மைகளுடன் இன்றைய இளைய நவீன கவிதைகள் வாசகனை எதிர்கொள்கின்றன.நாற்பது வருட காலங்களுக்கு முன்பாக்கத்தி-ருந்து வேறுபட்டு புதிய பார்வையை கவிதைக்கு தரவேண்டுமென்று நினைத்தவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். அவர் படைப்புகளும் ஒரு பொதுவான ஒரு மதிப்பீட்டுக்குள் அடக்கும் தன்மை படைத்ததாக வாழ்க்கையைப் பற்றி தத்துவ பார்வையில் ஒரு பொதுவான வேறுபாட்டை முன்வைப்பதாக அமைந்திருந்தன என்று நினைக்கிறேன்.இப்படிப்பட்ட பொதுவான ஒரு வேறுபாடு ஒரு பத்து இருபது ஆண்டுகள் கவிதை படைப்புகளின் ஒரு குறிப்பிட்ட லட்சணமான அடையாளம் கொண்டிருந்தன. தொண்ணூற்றுக்குப்பிறகு நவீன கவிதைகளின் உலகம் புரட்சிகரமான வித்தியாசங்களுடன் பரவிப் பெருகி வளர்ந்துக் கொண்டு வருகிறது.ஒன்றுக்கொன்று அடிப்படையாக வேறுபட்டு மிக சுதந்திரமான சுயத்தன்மையுடன் மொழியை அசாத்திய துணிச்சலுடன் கையாண்டு வருகிறது.இப்படிப் பொங்கிப் பெருகிவரும் உற்சாகமான சிருஷ்டி உணர்வுகளை தமிழ்க் கவிதைகளின் எல்லைகளை மிகத் துணிச்சலாக விரிவுப்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தரிகெட்ட வெள்ளம்போல் பரவும் இன்றைய நவீனக் கவிதை பற்றி பாரபட்சமற்ற ஒட்டுமொத்தமான கூர்மையான மதிப்பீடுகளும், அவைகளின் அடிநாதமாக தென்படக்கூடும் ஒரு அடிப்படையான வாழ்க்கைத் தத்துவம் உண்டா? இல்லையா? என்ற ஆய்வும் நமக்கு இன்று மிக அவசியம். கவிதையின் வயது பௌதீக வயதைச் சார்ந்ததல்ல. அருமையான கவிதைகளை சிறந்த கவிஞர்கள் அவர்களின் இளம் வயதிலேயே அநேகமாக எழுதி முடித்துவிடுகிறார்கள். ஆகையால் இளம் கவிஞர்களின் சங்கம கூட்டமும், பரஸ்பர கருத்தும் பரிமாற்றமும், அதற்கும் மேலாக அவர்களுக்கிடையே ஒரு உயர்வான மனிதநேசம் கொண்ட நட்பின் தொடக்கமும் இன்றைய ம-னமாகி சிதறுண்டது போல் தோற்றம் கொள்ளும் இலக்கிய நிலமைகளை சீராக்க உதவும் என்ற ஆசையுடன் நம்புகிறோம். அத்தகைய மலர்ச்சியையே நெகிழ்ச்சியுடன் விரும்புகிறேன்.
கட்டுரை: எஸ்.வைத்தீஸ்வரன்

Sunday 7 December, 2008

மீண்டும் காதலிப்பேன்...

தபால்காரர் விட்டெறிந்துவிட்டுவிட்டுப் போன தபால்களை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தமர்ந்தான் ராஜா. ஒவ்வொன்றாக புரட்டிப்பார்த்துக் கொண்டு வந்தவன், கல்யாணப்பத்திரிகையை கண்டதும் அதிர்ந்தான். மணமக்கள் சாந்தி, கணேஷ்... என்றிருந்தது. சாந்தி என்ற பெயரைப் பார்த்ததும், பரபரப்பாகி பத்திரிகையை பிரித்தவன் உள்ளே மணமக்கள் புகைப்படத்தைக் கண்டதும், பத்திரிகையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான். அங்கே சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அசோக்கின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவன் முகத்துக்கெதிரே பத்திரிகையை நீட்டினான்.


"என்னடா இது.... என்னாச்சு உங்களுக்குள்ளே...'' என்று அதட்டினான்.


"எல்லாம் முடிஞ்சிடுச்சு...'' என்றவாறு முகத்தை திருப்பிக் கொண்டான்."எல்லாமேன்னா.... என்ன அர்த்தம்.... நீங்க காத-ச்சது எல்லாம் அவ்வளவுதானா... சே... நீ என் நண்பன்னு சொல்லவே வெட்கமா இருக்கு... நீ எதுவும் பேசவேணாம். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நான் பார்க்கிறேன்...'' என்றவாறு திரும்பியவனை அசோக் தடுத்து நிறுத்தினான்.


"இரு ராஜா.... அவசரப்படாதே... கல்யாணம் நல்லபடியா நடக்கனும். நீ என் நண்பன்னா எந்தவித இடைஞ்சலும் செய்யமாட்டேன்னு சத்தியம் பண்ணு...'' என்றவாறு கையை நீட்டினான்.


"எதுக்குடா சத்தியம் பண்ணணும்.... உன்னை காத-ச்சுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ சந்தோஷமா இருப்பா. நீ தாடி வளர்த்துக்கிட்டு தேவதாசா திரிவியா...


"இந்த கல்யாணத்துக்கு அவளை சம்மதிக்க வைச்சதே நான்தான்டா....''"என்னடா சொல்ற... ''


"ஆமா ராஜா... ஏதோ இளமை வேகத்துல நாங்க காத-க்க ஆரம்பிக்கல. எனக்கு பிடிச்ச எல்லாமும் அவளுக்கும், அவளோட எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் எனக்கும் எவ்வளவோ ஒத்துப்போச்சி. அதுவே அவ மேல ஒரு ஈர்ப்பை உண்டாக்குச்சி. ஆனா கல்யாணம்னு வரும்போது.... ஒத்துவரலடா... எனக்கு கீழே ஒரு தங்கை இருக்கிற மாதிரி, அவளுக்கும் ஒரு தங்கை இருக்கா. எனக்கு இன்னமும் சரியான வேலை அமையல இந்த நேரத்தில அவங்க வீட்ல கல்யாணப்பேச்சை எடுப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை. அவளுக்கு சீக்கிரம் முடிஞ்சாதான் அவ தங்கைக்கு வரன் தேட முடியும்கிறதால அவங்க வீட்ல எடுத்த முடிவை எங்களால தடுக்க முடியலை. தண்டச்சோறு பட்டம் வாங்கிட்டு திரியுற என்னால என்ன செய்யமுடியும்.. எங்க காதல்தான்னு பெரிசுன்னு சுயநலம் எங்களுக்குள்ளே ம-ஞ்சகிடந்தா, நாங்க ஊரைவிட்டு ஓடிப்போயிருப்போமோ என்னவோ.... ஆனா நல்ல குடும்ப சூழ்நிலையிலே பாசத்தில வளர்ந்த எங்களுக்கு எங்க ரெண்டு குடும்பத்தையும் எதிர்க்க தோணலை... எங்களோட காதலால எங்களோட தங்கைகளோட வாழ்க்கை கேள்விக்குறியா மாற நாங்க காரணமா இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணோம். அதனால மனசொத்து பிரிஞ்சிட்டோம். அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நிச்சயம் அவளையே கல்யாணம் செய்துக்க அந்த ஆண்டவன் ஒத்துழைப்பான்னு நம்பிக்கையோட இருக்கேன்...'' என்றவாறு கண்களில் வழியும் நீரைக் கட்டுப்படுத்த முயன்றான்.


"அழுடா.... நல்லா அழு... உன் சோகம் நெஞ்ச விட்டு போறவரைக்கும் அழுது தீர்த்திடு. உன்னையும் சாந்தியையும் தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுடா. அடுத்த ஜென்மம் உனக்காக நிச்சயம் இருக்கனும்டா... அப்பவும் உன் நண்பனாவே நானும் பிறக்கனும்டா...'' என்றவாறு அசோக்கை இழுத்து அணைத்துக் கொண்டான் ராஜா.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...