Wednesday 16 September, 2009

உங்களுக்காக...

வாழ்க்கைக்கு தண்ணீர் எவ்வளவு அவசியம் என்பதை நாமறிவோம். நீர்வளம் குறைந்துவருவது கண்டுகூடு. நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டுவரும் ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’. ஏரி,குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பும் படி வேண்டுகோள் விடுக்கிறது. முகவரி-
மக்கள் விழிப்புணர்வு இயக்கம்,
3/20, 16ஆவது குறுக்குத் தெரு, நியூகாலனி,
குரோம்பேட்டை,
சென்னை - 600 044


***********************
நீங்கள் அய்க்கூ எழுதுபவரா?
நீங்கள் எழுதிய சிறந்த பத்து அய்க்கூவை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 1,200 பரிசை பெறலாம்.
கடைசி தேதி- இம்மாதம் இறுதிக்குள். அதாவது செப்டம்பர் 30க்குள்.
முகவரி- கன்னிக்கோயில் ராஜா,
30/8 கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.


**************************

ஆச்சிக்கு பாராட்டுக்கள்!




னைவராலும் அன்புடன் ‘ஆச்சி’ என்றழைக்கப்படும் நடிகை மனோரமா ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்னும் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதனால் குழந்தையின்மையால் வரும் விவகாரத்து, உயிர்க் கொல்லியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படும். ஆச்சியின் இந்த முயற்சி வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.

‘தென்கச்சி’ சுவாமிநாதன் மறைவு




‘தென்கச்சி’ சுவாமிநாதன். இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவரின் ‘இன்று ஒரு தகவல்’ பிரபலம். இப்படி இவர் சொன்ன தகவல்களை வானதி பதிப்பகம் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவராகவும் ஏழு வருடங்கள் (தென்கச்சியில்) இருந்திருக்கிறார். ஊரில் விவசாயமும் செய்தவர். அந்த அனுபவத்தில் வானொலி நிலையத்தில் விவசாய செய்திகளை ஒலிபரப்ப ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வர, அதைப் பார்த்து விண்ணப்பித்து, விவசாயம் தெரிந்ததால் இவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தாம். பின்பு படிப்படியாக வளர்ந்து உதவி ஆசிரியர், ஆசிரியர், உதவி நிலைய இயக்குனர் என்று வளர்ந்து வந்தவர்.‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்பு சன் தொலைக்காட்சியிலும் அந்நிகழ்ச்சியை வழங்கி உலகப் புகழ் பெற்றார்.சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Monday 14 September, 2009

அழகு,காதல்,கடவுள்,பணம்

அழகு,காதல்,பணம், கடவுள் பற்றிய உங்களின் கருத்துகள் என்ன என்று அறிந்து கொள்ள இந்த தொடரை ஹேமா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த தொடர் இடுகைக்கு என்னை நையாண்டி நைனா அழைத்திருந்தார்.

அழகு இருந்தால் காதல் வரும்(!)
அந்த காதல் நிறைவேற-நீடிக்க பணம் நிச்சயம் தேவைப்படும்.
அந்த பணம் அளவுக்கு அதிகமானால்-
நிம்மதிக்காக கடவுளைத் தேடிச் செல்வார்கள்...


அப்பாடி... ஒருவழியா எல்லாத்தையும் ஒண்ணாக் கோர்த்து எழுதியாச்சு என்று எகிறிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும், நம்மைப் பற்றி, நமது கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தானே இந்த இடுகை என்பதால், சற்று விளக்கமாகவும் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

(விரிவா வேற சொல்லப் போறீயா... விளங்கிடும்... என்று சொல்பவர்கள் நேரே கருத்துரை பகுதிக்கு சென்று கருத்துக்களை பதிந்துவிட்டு நகருங்கள். மற்றவர்கள் மேலே படியுங்கள்...

அகோ(ஹலோ-தான் இப்போ தமிழ்ல அகோ... உபயம் பழமைபேசி)... ஒரு நிமிடம்... மேலே என்றால் தொடர்ந்து படியுங்கள்னு சொன்னேன். நீங்க பாட்டுக்கு மேல் நோக்கி கர்சரை நகர்த்துறீங்களே... இஃகி... இஃகி...


அழகு...

அழகு என்பது காண்போர் கண்களில் இல்லை... கண்ணால் காண்பது- புற அழகு. அந்த அழகு கொஞ்ச நேரத்திலோ அல்லது (ஒப்பனை செய்து) ஒப்பேற்றிக் கொண்டிருந்தால் கொஞ்ச காலத்திலோ காணாமல் போய்விடும். நிரந்தரமான அழகு மனதைப் பொறுத்தது. சமீபத்தில் எங்கள் அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பில் ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஒருவர் ‘சொர்க்கமே என்றாலும்...’ என்ற பாடலை கொஞ்சம் மாற்றி...‘சொர்க்கமே என்றாலும் அது என்வீட்டைப் போலாகுமா... கிளியோபாட்ரா ஆனாலும் என் பொண்டாட்டிக்கு ஈடாகுமா...’ என்று பாடினார். அதுதான், அழகு... கருப்பான பெண்ணாக இருந்தாலும், நம் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்புறம் கிளியோபாட்ரா வந்தால்கூட பொண்டாட்டிக்கு ஈடாக மாட்டாள் என்பது விளங்கும்.(விளங்குச்சா... இல்லே விளங்கிடும்ங்கிறீங்களா...?)


காதல்...

காதலும் அதுபோலதாங்க...

‘மௌனம் பேசியதே’ படத்தில் வரும் இந்த பாடலைக் கேட்டிருக்கிறீர்களா... ‘அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடிதான். இருபதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலையே நம்மோட லவ் ஸ்டோரிதான்’ -இதுதாங்க உண்மையான காதல்...

ஆயிரம் சண்டைகள் ஆயிரம் அடிதடிகள் இருந்தாலும் ஓ...மை சுவீட்டி... ஐ லவ்யூடா செல்லம் என்று உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லிப்பாருங்கள்... போயே போச்சு... இட்ஸ்கான்... அப்புறம் என்ன ஜமாய்...


பணம்...

பணம் இல்லைன்னா பிணம்னு சொல்வாங்க. வாழ்க்கையை வாழ பணம் தேவைதான். அதற்காக பணத்துக்காக ஓடிக்கிட்டே இருக்க கூடாது. அப்படி பணத்திற்கு பின்னாடி ஓடினவங்கயோட கதையை அன்றாடம் செய்தித்தாளில்(கள்ளக் காதல், லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் பட்டியல் இப்படி...) பார்க்கலாம். இதுக்குமேல இதற்கு விளக்கம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.


கடவுள்...

இதற்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது. உதவிக்கு கண்ணதாசனத்தான் கூப்பிடணும்...

‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலைதான்...’
இன்னொன்றையும் இங்க சொல்லணும்...
எங்கு ஆடம்பரம் பெருகுகிறதோ அங்கு கடவுள் இருக்கமாட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். இது ஆலயங்களுக்கும் பொருந்தும்தானே...


விதிமுறைப்படி மூன்றுமுதல் ஐந்து நண்பர்களை அழைக்கலாமாம்...
மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதற்காக நான் மூன்று நண்பர்களை மட்டும் அழைக்கிறேன்...


அய்யனார் பற்றிய கனவுகளில் இருக்கும், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்...


அழகை பாதுகாப்பது பற்றியும்,காதலர்களுக்கும் டிப்ஸ் தந்துகொண்டிருக்கும் நம்ம தேவா சார்...


கவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த(ரொம்ப காலமாக வலைப்பதிவிடாமல் இருக்கும்)நண்பர் ஆ.முத்துராமலிங்கம். ஆகியோரை அன்புடன் இடுகையிட அழைக்கிறேன்.

Friday 11 September, 2009

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக...

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ள நம்மால் அவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பு இப்பொழுது... ஒரு கை தட்டினால் ஒசை எழாது தோழர்களே... கரம் கோர்த்து இப்பொழுதாவது அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம். ஒன்றுமில்லை ஒரு 20 வினாடிகள் செலவு செய்யுங்கள் போதும். அவ்வளவே... விபரங்களுக்கு தங்கமணி அவர்களின் இடுகையை படியுங்கள்...

க. தங்கமணி பிரபு அவர்கள் ஒரு இடுகை இட்டுள்ளார்.

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து இங்கு சென்று பாருங்கள்.


அல்லது


இங்கு இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெயில் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புனித செயலில் ஈடுபடுத்துங்கள்.

Sunday 6 September, 2009

பயணத்தில் ஓர் நாள்...

யிலில் நல்ல கூட்டம். அடித்துப் பிடித்து எப்படியோ ஏறி இடம் கிடைத்த நிம்மதியில் பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் ராஜாராமன். முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு நிமிர்ந்தவர் ஆச்சரியப்பட்டார்.

“அடடே... சதா எப்படி இருக்கே வா... வா... உட்காரு” என்றவாறு சற்று நகர்ந்து இடம் கொடுத்தார்.

“நல்லா இருக்கேன்டா...” என்று புன்னகைத்தவாறு அமர்ந்தார் சதா என்கிற சதாசிவம். ராஜாராமனின் பால்ய கால நண்பர்.

“எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. ஆமா வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க...” என்று ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.பேச்சு குழந்தைகள் பற்றி திரும்பியது.

“உனக்கு பெண் குழந்தைதானே... கல்யாணம் ஆகிடுச்சா?”

“அதை ஏன்டா கேட்கிற நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் அமையல... நீ ஏதாவது நல்ல இடமாயிருந்தா சொல்லேன். இருபது பவுன் போடலாம். கல்யாண செலவை பாதி செய்யுறேன். நகையெல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டேன். எல்லாம் தாயாராத்தான் இருக்கு. மாப்பிள்ளை மட்டும் அமைஞ்சிட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாம்.”

“அவ்வளவுதானே... கவலையை விடு. உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான். நீ எதிர்பார்த்த மாதிரியே ஒரு நல்ல இடம் இருக்கு. அவங்களும் பொண்ண தேடிக்கிட்டிருக்காங்க. நீ சரின்னு சொன்னா, வர்ற ஞாயிற்றுக் கிழமையே அழைச்சிட்டு வர்றேன். போதுமா?”

“ரொம்ப சந்தோஷம்டா சதா... வர்ற ஞாயிற்றுக்கிழமை வேண்டாம். சனிக்கிழமை நாங்க குடும்பத்தோட திருப்பதி போறோம். திங்கட்கிழமைதான் வருவோம். அதனால அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லு. உன் மூலமா இந்த வரன் அமைச்சா அதைவிட பெரிய சந்தோசம் வேற இல்ல...”

“சரி உன் அட்ரஸ், போன் நம்பர் சொல்லு. முன்னாடியே தகவல் கொடுத்துட்டு அழைச்சிட்டு வர்றேன்” என்றார்.ராஜாராமன் சொல்ல, சதாசிவம் குறித்துக்கொண்டார்.

“சரி நான் வர்றேன் ராஜா. இங்க பல்லாவரத்தில ஒரு நண்பரை பார்க்க வேண்டியிருக்கு”என்று இறங்கிக் கொண்டார்.


திங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன்.

Thursday 3 September, 2009

குருவே சரணம்

குரு என்பவர்கள் நமக்கு கற்றுத் தருபவர்கள். அம்மா அப்பாவுக்கு அடுத்து குருதான். அதற்குப் பிறகுதான் தெய்வம். மாதவும் பிதாவும், குருவும்தான் நமக்குத் தெய்வம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். குரு என்பவர்தான் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள். நாம் கல்வி கற்கும் பருவங்களில் எத்தனையோ ஆசிரியர்களைச் சந்தித்தாலும் ஒரு சிலர்தான் நம்மால் மறக்க முடியாதவர்களாகி விடுகின்றனர்.

அந்த வகையில் எனக்கு அமைந்த தமிழாசிரியரையும் உடற்கல்வி ஆசிரியரையும் நான் இன்றளவும் மதிக்கிறேன்.

தமிழாசிரியர் திரு.பர்னபாஸ்.

தமிழ் நம் தாய் மொழிதான் என்றாலும் அதையும் சுவைபட நடத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். இலக்கணத்தையும் கவனிக்க வைத்தவர் அவர். திருக்குறளாகட்டும், சிலப்பதிகாரமாகட்டும் எதையும் தன் இனிய குரலால் பாடியவாறு பாடம் எடுப்பார். மாணவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவார். பாடம் சம்பந்தப்பட்டவற்றை மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவர்.

இயல்பாக மாணவர்களிடம் பழகும் அதே நேரத்தில் கண்டிப்பாகவும் நடந்து கொள்வார். தன் கைப்பையில் அடக்கமாக அரையடி நீளமுள்ள சிறிய பிரம்பு வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களுக்கு கையின் மணிக்கட்டு எலும்பில்தான் அடிவிழும். எங்களுக்கு ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அவரே தமிழ் ஆசிரியராக இருந்ததால் அவரை பற்றி நாங்களும் எங்களைப் பற்றி அவரும் தெரிந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் பிரம்புக்கு வேலையில்லாமல் போனது.

இன்று தமிழ் எழுத்துகளை (கூடியவரையில்) பிழையின்றி நான் எழுதுகிறேன் என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் அவரே.

அடுத்து உடற்கல்வி ஆசிரியர். திரு. தன்ராஜ்.

இந்த "உடல் + கல்வி' என்பதற்கு அர்த்தமே அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அந்த அளவுக்கு உடல் நலம் பேணுதல் பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். தலைமுடி அதிகமாக இருந்தாலோ, விரல்களில் நகம் அதிகமாக இருந்தாலோ, பள்ளி சீருடை அழுக்காக இருந்தாலோ , சீருடையில் பட்டன் இல்லாமல் இருந்தாலோ தொலைந்தோம். சட்டை அழுக்காக இருந்தால் தன் பையிலிருந்து காசு கொடுத்து எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் குளத்தில் துவைத்து, காயவைத்து அவரிடம் காண்பித்துவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.

இதற்காகவே அவர் வகுப்பு என்றால் எல்லாரும் தங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி மட்டும் சொல்லித் தராமல் இந்த அளவுக்கு எங்கள் நலனில் அக்கறை கொண்ட அவரை அந்த நேரத்தில் வெறுப்பாக பார்த்தாலும் இப்போது அவரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

எனது பள்ளிக் காலத்திலேயே திரு தன்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற விழாவில் அவர் கண்கலங்கி “நான் பணிக்காலத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றபோது அத்தனை மாணவர்களும் கலங்கித்தான் போனார்கள்.

எங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திட்ட திரு.பர்னபாஸ் அவர்களையும் திரு.தன்ராஜ் அவர்களையும் இந்த தினத்தில் (செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்) நினைவு கூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் பூரண ஆயுளுடன் நிறைவான வாழ்க்கை வாழவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...