Tuesday 27 January, 2009

சீறும் பாம்பை நம்பு... சிரிக்கும் பெண்ணை நம்பாதே...


ஆட்டோக்களின் பின்புறத்தில் பலரும் தங்களுக்கு பிடித்தமான பொன்மொழிகளையும், தத்துவங்களையும், கவிதைகளையும்கூட எழுதி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்தவரின் ஆட்டோ ஒன்றில் "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்று எழுதியிருந்தது.
"என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள்? பெண்கள் படித்தால் தப்பாக நினைக்க மாட்டார்களா?'' என்றேன்.
"இதில் தப்பாக நினைக்க ஒன்றுமில்லை. இது ஆண்களை எச்சரிக்கக்கூடிய, அர்த்தம் பொதிந்த வாசகம்'' என்று கூறினார்.
எனக்கு ஆர்வம் எல்லை மீறி போய்விட்டது. "கொஞ்சம் விளக்கமாகத்தான் கூறுங்கள்'' என்றேன்.
"சீறும் பாம்பை நம்பு! சாலையில் நண்பர்களுடன் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது பாம்பு ஒன்று குறுக்கிடுகிறது. நீங்கள் திகைத்து நிற்கிறீர்கள். தங்களைக் கண்டதும் பாம்பு படமெடுத்து சீறினால் அப்பாம்பு உங்களைக் கண்டு சீறவில்லை, உங்களுடன் வரும் உங்கள் நண்பரைக் கண்டுதான் சீறுகிறது என்று நீங்கள் சும்மா இருப்பீர்களா என்ன?
ஓட்டமாய் ஓடுவீர்கள். இல்லையென்றால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமில்லை! ஆக சீறும் பாம்பு யாரைப்பார்த்து சீறினாலும் தன்னைப் பார்த்து சீறியதாக நம்ப வேண்டும். அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும்.
அதே போல நண்பர்களுடன் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது கல்லூரிவிட்டு வந்த பெண்கள் அங்கு பஸ்ஸிற்காக நிற்கிறார்கள். அப்பெண்களில் ஒருத்தி உங்கள் பக்கமாக திரும்பி சிரிக்கிறாள். உடனே உங்களைப்பார்த்துதான் சிரிப்பதாக நீங்கள் நம்பிக்கைக் கொள்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் நம்புகிறார்கள். யாரைப்பார்த்து சிரித்தாள் என்று சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைதான். இப்போது புரிகிறதா, "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்பதன் அர்த்தம்'' என்றார் நண்பர்.

Monday 19 January, 2009

வலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு...

முதன் முதலில் வலைப்பதிவர் பட்டறையில் கலந்துகொண்டபோதுதான் இப்படி நமக்கே நமக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கலாம், நமது எண்ணங்களை, கருத்துக்களை, படைப்புக்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, நட்பை வளர்க்க மிகப்பெரிய வாய்ப்புண்டு என்று உணர்ந்தேன். எனக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கியவுடன் முதல் இடுகை கவிதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி கவிதையை நோட்பேடில் டைப் செய்து காப்பி செய்து எடுத்துக்கொண்டு இணைய மையத்திற்கு சென்றேன். இடுகை இட்டபின் அது கவிதையாக இல்லாமல் பாரா கிராபாகவே எடுத்துக்கொண்டது. சரி என்று தேவைப்படும் இடத்தில் கர்சரை வைத்து என்டர் தட்டினேன். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே இடைவெளி அதிகமாகி கவிதை வெளியிடும் என் ஆசையை தடுத்தது. நானும் பலமுறை முயற்சி செய்தேன். முடியவில்லை. வலைத்தளத்திற்கு புதியவன் என்பதால் தெரிந்தவர்கள் அதிகமில்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கேட்டதற்கு எங்களுக்கு அப்படி எதுவும் ஆகவில்லை என்றார்கள். அப்ப இந்த கொடுமை நமக்கு மட்டும்தானா? இதை எப்படி தீர்ப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தேன்.இதற்கிடையில் பதிவர் சந்திப்பு (டிசம்பர்27, 2008) தி.நகர். நேடசன் பூங்காவில் நடைபெறும் என்ற அறிவிப்பு ஆதிசாவின் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அங்கு சென்றேன். நான் செல்லும் முன்பே சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டதால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாமல் அமைதியாக நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன். என்னருகே அமர்ந்திருந்த ஒருவர்(கார்க்கி என்று பின்பு விசாரித்து தெரிந்து கொண்டேன்) என்னிடம் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் என் பிரச்சனையை சொன்னேன். அவர் 'தமிழ் எழுதி' கொண்டு எழுதினால் இந்தப்பிரச்சனை வராது என்றார். சரி, ஒரு புதிய ஐடியா கிடைத்திருக்கிறது என்று சந்தோசமாக சென்றேன். ஆனால் எனக்கு இதிலும் தோல்வியே! சரி இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை நாமே நோண்டிப்பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். இடுகைப்பெட்டியில் இருக்கும் html திருத்து என்றதன் மேல் கிளிக் செய்தேன். ஏதோ மாற்றம் தெரிந்தது. பிறகு கவிதையில் தேவைப்பட்ட இடத்தில் வைத்து என்டர் தட்ட என் முயற்சி வெற்றி பெற்றது.உங்களில் யாருக்கேனும் இந்தச் சிரமம் இருந்ததா?

Monday 12 January, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்.




மற்ற திருவிழாக்கள் போலி(த்தனமி)ல்லாமல் பொங்கல் திருவிழா தமிழர் திருநாள். இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாள். ஆமாம். மற்ற திருவிழாக்கள் சடங்குகளால் நிரம்பியது. ஆனால் பொங்கல் திருவிழா உழைப்புக்கும், உழைப்பிற்கு உதவிய விலங்கினங்களுக்கும் நன்றி சொல்லும் திருவிழா! கிராமங்கள் இந்தியாவின் இதயம். அந்த இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. தொழிற்சாலைகள் பெருகினாலும், நாகரீகம் மாறினாலும், நகரங்கள் பெருகினாலும் எண்சான் உடம்பிற்கு வயிறே பிரதானம்! அந்த வயிற்றுக்கு சோறிடுவது விவசாயிகள்தான். அந்த விவசாயிகளை நாம் மறந்துவிட்டதன் விளைவுதான் இன்று விலைவாசி விண்ணை முட்டி நிற்கின்றன.விளைநிலங்களை தொழிற்சாலைகள் ஆக்கிவிடுவதன் மூலம் சில பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்.விளைநிலங்களை அழிப்பதால் அத்துணை பேருக்கும் சோறில்லாமல் போகும்!தமிழனுக்கு எப்போதுமே தும்பைவிட்டு வாலை பிடிப்பது என்ற பழமொழிப்படி நடப்பதுதான் பிடிக்கும். ஆமாம்,முதலிலேயே யோசித்து முடிவெடுத்திருந்தால் சோழநாடு சோறுடைத்த நாடு என்ற முதியோர் கூறியது இன்று பொய்யாகுமா? தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை உணர்வுபூர்வமாக பலர் வரவேற்றாலும், பலர் இதிலும் அரசியல் ரீயாகவே பார்க்கின்றனர். சிலர் ஒரு விடுமுறைநாள் (ஏப்ரல் 14)இழக்கப்படுவதாக வருந்துகிறார்கள்.தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் வாக்கு! ஆடி மாதம் தன்னிடம் உள்ள கையிருப்பை எல்லாம் விளைநிலத்தில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் விவசாயி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநாள்தான் பொங்கல். நாம் பழமொழிகளை மறந்தாலும், முதுமொழிகளை மறந்தாலும் வழிவழியாக கொண்டாடப்படும் திருவிழாக்களை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் இந்த பொங்கலையும் கொண்டாடிவிட்டு போவோம்!

Saturday 10 January, 2009

கவிதை


குண்டுமழை
தேம்பிஅழும்மனசு
எதிரிநாட்டிலும் குழந்தைகள்
-பாரதிஜிப்ரான், செங்கை

அழுகுரல்கேட்டு
ஆறுதல்
குழிக்குள் குழந்தை
-எஸ்.முத்துவேல், கல்பாக்கம்.

கவிதைக்கு நன்றி-கன்னிக்கோவில் ராஜா
படங்கள் உதவி- நட்புடன் ஜமால்.

Friday 9 January, 2009

உங்கள் கருத்தை பதிவு செய்து விட்டீர்களா?


லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் மீதான அரசின் நடவடிக்கை பற்றிய உங்கள் கருத்து என்ன?
உங்கள் கருத்தை பதிவு செய்து விட்டீர்களா?

Wednesday 7 January, 2009

ரயில் பயணத்தில்...


தாம்பரத்தில் இருந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன். மின்சார (ரயில்) தொடர்வண்டியில்தான் செல்வது வழக்கம். என்னுடைய அலுவலக நேரத்திற்கு செல்ல வேண்டுமானால் காலை எட்டு மணிக்கு வண்டி ஏறினால்தான் சரியாகச் சென்று சேரமுடியும்.இன்றும் அப்படித்தான் வண்டி ஏறினேன். வண்டி கிளம்பி மெதுவாக நகரத்தொடங்கியது. பள்ளி/கல்லூரி மணாவர்கள் எப்போதும் ஓடி வந்து ஏறித்தான் தன் வீரத்தை காட்டுவார்கள். (இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதனால் ஏற்படும் ஆபத்தை உணராமல்.) அப்போது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடி வந்து தட்டுத்தடுமாறி ஏறினார். அவர் ஏறியதை பார்த்து வண்டியில் இருந்தவர்கள் எல்லாம் பதறிப் போனார்கள். சிலர் வாய்விட்டு திட்டவும் செய்தார்கள். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் என் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தார்.நான் எப்போதுமே வண்டியின் வலது பக்கச் சாளரத்தின் (ஜன்னல்) அருகே அமர்வது வழக்கம். (ஏன் தெரியுமா? காதைக் கொண்டாங்க... வலது பக்கமே பிளாட்பாரம் வரும். வண்டி ஏற நிற்பவர்களை பார்த்துக் கொண்டே வருவதற்காகத்தான். அவ்வளவுதானா என்று கேட்பவர்களை என்ன சொல்ல.... பார்த்து என்பதற்கு சைட் என்று சொன்னால்தான் டக்கென்று புரியுமோ? ஹி...ஹி...) என்னருகில் அமர்ந்தவர் சார், நீங்க கொஞ்சம் இப்படி மாறி உட்கார்ந்துகிறீங்களா? என்றார்.ஓடி வந்ததில் அவருக்கு ஏராளமாக வியர்திருந்தது. நானும் பெரிய மனது பண்ணி மாறி அமர்ந்தேன். சாளரத்தின் அருகில் அமர்ந்தவர், ஒவ்வொரு ரயில் நிலைய நிறுத்தம் வந்ததும் முடிந்தவரை சாளரத்தின் பக்கம் நெருங்கி எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தார். நாம எவ்வளவோ தேவலாம் போ-ருக்கே, சரியான காட்டானா இருப்பான் போ-ருக்கு என்று நினைத்துக் கொண்டேன். வெளியில் வேடிக்கைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு, அவரையே பார்த்துக் கொண்டு வந்தேன். அவர் எதற்கும் ச-க்கவில்லை. சென்னை பூங்கா ரயில் நிலையம் வந்ததும் அவசரமாக இறங்கி ஓடினார். நானும் இறங்க வேண்டிய நிறுத்தம் அதுதான். அவரின் பின்னாலேயே இறங்கி, ஆர்வம் மிகுதியால் அவரின் மீதே பார்வையை ஒடவிட்டேன். வேகமாகச் சென்றவர் அங்கு பயணச்சீட்டு எடுக்க நின்றிருந்த ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தார். அந்தப் பெண் பதறித் திரும்பினாள். இவரைப் பார்த்ததும் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள். அவர் ஏதோ பேச, பதிலுக்கு அந்தப் பெண்ணும் பேசினாள். ஓகோ. இது குடும்ப பிரச்சினை போ-ருக்கு என்று அப்போதுதான் எனக்கு தோன்றியது.அப்புறம் என்னாச்சுங்கிறீங்களா?எனக்கு அலுவலகத்துக்கு நேரமாச்சு. அதனால நான் கிளம்பிட்டேங்க. என்ன ஆச்சுன்னு எனக்கும் தெரிஞ்சுக்க ஆர்வமாத்தான் இருக்கு. என்ன பண்றது.....

Saturday 3 January, 2009

வாய்பை தவறவிடுபவரா நீங்கள்?


ஜனவரி மாதம் பிறந்தாலே கொண்டாட்டம்தான். ஆங்கில புத்தாண்டு, அதைத்தொடர்ந்து பொங்கல். இப்போது தமிழக முதல்வரின் உத்தரவால் தமிழ்புத்தாண்டும் சேர்ந்துகொண்டது.அதோடு வருடம்தோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெறும். தீவுத் திடலில் சுற்றுலாப் பொருட்காட்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் முதல் சங்கமம் நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. இதில் எந்த வாய்பையும் தவற விடாதீர்கள். புத்தக கண்காட்சியில் அனைத்துப் பதிப்பகங்களும் 10% கழிவு தரும். ஒவ்வொரு வருடம் பல புதிய புத்தகங்களை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுவது வழக்கம்.பல பதிப்பகங்கள் புத்தகக் கண்காட்சியை மையமாக வைத்தே புத்தகங்களை வெளியிட்டு லாபம் பார்க்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே பதிப்பக வேலைளை ஆரம்பித்து ஜனவரியில் வெளியிட்டு போட்ட முதலை எடுத்துவிடுவார்கள். பிறகு நூலகத்திற்கென அரசு வாங்கிங்கொள்ளும் புத்தகங்கள் முலம் லாபமே அவர்களுக்கு. சில பிழைக்கத் தெரியாத பதிப்பகத்தார் அல்லது ஆர்வம்மிக்க நண்பர்கள்தான் நினைத்த போது புத்தகங்களை வெளியிட்டுவிட்டு விற்பனை ஆகவில்லையே என்று புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.சமீபத்தில் நைஜீரியா ராகவன் அவர்களின் வலைத்தளத்திற்கு சென்று வந்தேன். அவர் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தது பற்றியும், அங்கு ரூபாய் 700க்கு புத்தகங்கள் வாங்கியபிறகு கிரெடிட் கார்டு கொடுத்திருக்கிறார்.அவர்கள் கிரெடிட் கார்டுக்கு கழிவு கிடையாது என்று கூறியிருக்கிறார்கள், அதற்குப்பிறகு நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பாளர்களிடம் புகார் செய்தபிறகே ஏற்றுக்கொண்டார்கள்.700 ரூபாய்க்கு ரூ70 கழிவு அதற்காக நான்அவர்களிடம் வாதம் செய்தது சரியா என்று வருத்தப்பட்டிருந்தார். புத்தகத்திற்கு கழிவு 10% என்று அறிவித்துவிட்டு கிரெடிட் கார்டுக்கு கிடையாது என்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.அவருக்கு பலரும் ஆறுதலும், நீங்கள் செய்ததுதான் சரி என்று (நான்உட்பட) கூறியிருந்தோம்.நாமாக கழிவு கேட்கவில்லை.அவர்களின் விற்பனைக்காகத்தான் கழிவு கொடுக்கிறார்கள். அதை கேட்டு பெறுவதில் தயக்கம் கூடாது. அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்... புத்தக கண்காட்சியின் போது மட்டுமல்ல நிரந்தரமாக 10% கழிவு பெறும் வகையில் சென்னை கன்னிமாரா நூலகத்தின் பின்புறம் நிரந்தர புத்தக கண்காட்சி நடைபெறுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...