Wednesday 27 January, 2010

விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் வீரியக்காரி கிருஷ்ணம்மாள்


வருடம் தோறும் ஜனவரி மாதம் சமூக தொண்டு செய்யும் சான்றோர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்கிறது. அதுபோல் இந்த வருடமும் திருவள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யன் திருவள்ளுவர் விருது -முனைவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது திரு. நக்கீரன் கோபாலுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது- திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது- முனைவர் திரு. அவ்வை நடராஜனுக்கும், பெருந்தலைவர் விருது- விருதுநகர் திரு. இரா. சொக்கர் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது- திரு. ந. இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது- கவிஞர் திரு. தமிழ்தாசன் அவர்களுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- திரு. அண்ணாமலை (எ) இமையம் அவர்களுக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவாநாதம் விருது- முனைவர் திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதில் அம்பேத்கர் விருது பெற்ற திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கொஞ்சம் வித்தியாசமானவர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யன் கோட்டை கிராமத்தில் வசித்து வந்த ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி- திருமதி நாகம்மாள் தம்பதியிருக்கு ஐந்தாவது குழந்தையாக 12.06.1926-ல் பிறந்தார். இவருக்கு ச. ஜெகநாதன் அவர்களுடன் 6.7.1950-ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் இருவரும் மக்கள் சேவையே மகசேனுக்கு செய்யும் தொண்டு என்பதற்கேற்ப கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்புரிந்து வருகிறார்கள்.
திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் காந்தியடிகளை பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். நாடு விடுதலைப் பெற்றபின் வினோபாஜியின் வழிகாட்டுத-ல் பீமிதான இயக்கத்ல் இணைந்து நாடு முழுவதும் பாதயாத்திரை மேற் கொண்டவர்.
நிலச்சுவான்தார்கள் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த அப்பாவி மக்களுக்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அரும்பணிகளை செய்து வருகிறார். 13,000 ஏக்கர் நிலங்களை பல போராட்டங்களினாலும், அரசின் உதவியாலும் பெற்று ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களுக்கு அளித்துள்ளார். அதிலும் மகளிர் பெயரிலேயே இந்நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாப்டி இயக்கத்தின் மூலம் கிராம பொருளாதரம், கிராம சுயாட்சி அடையும் நோக்கில் படித்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொழிற் பயிற்சி, பெண்களுக்கு கறவை மாடுகள், ஏழை மாணவர்- மாணவியர் தங்கி படிக்க விடுதிகள் அமைக்கவும் உதவி வருகிறார்.
சுவாமி பிரமானந்தா விருது, ஜமன்லால் பஜாஜ் விருது, பத்மஸ்ரீ விருது, பகவான் மகாவீர் விருது, காந்தி கிராமப் பல்கலைக்கழக விருது, உலகப் பெண்கள் விருது, சிறந்த பெண்மணி விருது, இந்திரா ரத்னா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். 2006-ல் நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006-ல் உலகின் சிறந்த 1,000 பெண்மணிகளில் ஒருவராக ஸ்விட்சர்லாந்து அமைதிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ல் வீரியக்காரி விருது, 2008-ல் அமெரிக்க நாட்டின் ஓபஸ் விருது, 2008-ல் ஸ்வீடன் நாட்டின் வாழ்வுரிமை விருது) மாற்று நோபல் பரிசு), 2009-ல் வாழ்நாள் சேவை விருதும் பெற்றவர் 2009-ஆம் ஆண்டிற்கான "அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றுள்ளார்.
இந்த விருது பெறும் நிகழ்ச்சியில் அவர் பேசும் போது "தமிழகத்தில் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க விற்க கூடிய வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டு அதையே மனுவாகவும் முதல்வரிடம் அளித்தார்.
அப்படி அவர் கூறியதற்குரிய பொருளை நம் முதல்வர் அறிந்திருப்பார். அத்தகை சட்ட திருத்த நடவடிக்கையை எடுப்பாரா ?

நமது வலைத்தளத்தில் ஏற்கெனவே திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களைப் பற்றி வந்த செய்திகளைப் படிக்க...

Monday 11 January, 2010

பொங்கல் வாழ்த்துகள்.



"வாங்க ராஜா எப்படி இருக்கீங்க? பொங்கல் வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா?''
"எல்லாம் முடிஞ்சிருச்சு. இன்னும் கரும்பு, காய்கறிகள் மட்டும் வாங்கினா பொங்கலை கொண்டாடிட வேண்டியதுதான்.''
"இந்த வருடம் கரும்பு ஒரு கழி முப்பது ரூபாய் வரைக்கும் விக்கும்னு பேசிக்கிறாங்க. போன வருடம் தமிழக அரசு பொங்கல் பரிசா வெல்லம், பச்சரிசி கொண்ட பை ஒன்னு கொடுத்தாங்க அது இந்த பொங்கலுக்கு கிடையாதாம்.''
"இது பழைய செய்திப்பா. அதுக்குப் பதிலாதான் காய்கறி அதிக விலைக்கு விக்கிறதால 12 விதமான காய்கறிகள் அடங்கிய பை தர்றாங்களாம். அதோட விலை ரூபாய் இருபத்தைந்தாம்.''
"பச்சரி, வெல்லம் கொண்ட பை போன வருடம் கொடுத்துட்டு இந்த வருடம் ஏன் தரலையாம்?''
"போன வருடம்தான் புதுசா தமிழ் புத்தாண்டு பொங்கல் அன்னைக்கிதான்னு அரசு அறிவிச்சுது. அதுக்காக கொடுத்தாங் களாம். இந்த வருடம் மக்களாகவே தமிழ் புத்தாண்டை கொண்டாடிடுவாங்கன்னு அரசு நம்புது போலிருக்கு''
"அதிருக்கட்டும் இன்னைக்கி ராத்திரி போகி கொண்டாட வந்திடுப்பா!''
"நிச்சயமா வந்திடுறேன். ஆனா, பிளாஸ்டிக், டயர் போன்ற எதுவும் எடுத்திட்டு வந்திடாதே. அதை எரிச்சா உடனே நடவடிக்கை எடுக்கறதுக்காக இருபது குழுக்களை அமைச்சிருக்காங்களாம். இரவு முழுவதும் கண்காணிக்க போறாங்களாம்.''
"நானும் படிச்சேன் ராஜா. பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிக்கிறதால மூச்சு திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை எல்லாம் ஏற்படுமாம். ஏற்கெனவே ஏகப்பட்ட நோய்கள் உலாவுது. இதில இதுவேற நாமளா தேடிக்கணுமா என்ன? நான் வீடு சுத்தம் செய்யும்போதே வேண்டாத பொருட்களை பிரிச்சி வைச்சிருக்கேன். அதை வைச்சி போகி கொண்டாடுவோம்.''
"பொங்கலுக்கு வேற எதாவது...?''
"வேற எதாவதுன்னா... தண்ணியடிக்க கூப்பிடுறியா?''
"பாருக்கு எல்லாம் போகவேணாம்... அப்படியே எங்காவது போயி கமுக்கமா சாப்பிட்டு வந்திடலாம்...''
"மவனே உனக்காகத்தான் டில்லி அரசாங்கம் ஒரு சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்காங்க. பொது இடங்களில் மது அருந்திரவங்களுக்கு 50,000 வரைக்கும் அபராதமும், 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கலாம்னு முடிவு செய்திருக்காங்களாம்.''
"ம்... இதுக்கும் கெடுபிடி அதிகமாயிடுச்சா... நம்மெல்லாம் பெரிய பாருக்கு போக முடியுமா?''
"உன்னை மாதிரி ஆளுங்களுக்குத்தானே தமிழக அரசு டாஸ்மாக்கையே நடத்துது. தீபாவளிக்கே 47 கோடி வசூலாம். பொங்கலுக்கு எவ்வளவு பணத்தை கொண்டு போய் கொட்டப் போறீங்களோ? திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொங்கலுக்கு மறுநாள் கடைக்கு விடுமுறையாம்பா.''
"நல்லவேளை தகவல் கொடுத்தே. இல்லைன்னா அதிகமா பணம் கொடுத்து கள்ள மார்க்கெட்ல வாங்க வேண்டியிருக்கும். நம்ம சம்பாத்தியத்தில அப்படியெல்லாம் செய்ய முடியாதுப்பா..''
"இதைப் பத்திதான் இன்டர்நேசனல் லிவிங் பத்திரிகை ஒரு ஆய்வு செய்திருக்காங்க.''
"எதை... குடிக்கிறது பத்தியா?''
"இல்லப்பா.... வாழ்க்கைச் செலவு, கலாச்ôரம், ஓய்வு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுதந்திரம், ஆரோக்கியம், உள்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு, அபாயங்கள், பருவநிலை ஆகிய ஒன்பது அம்சங்கள் பற்றி 194 நாடுகளை வகைப்படுத்தியிருக்காங்க. அதில் தொடர்ந்து 5-ஆவது முறையா எல்லாவற்றிலும் சிறப்புபெற்று முத-டத்தில பிரான்ஸ்தான் இருக்கு. அதற்கடுத்து ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனியாம். அமெரிக்காவுக்கு 7-வது இடம்தான் கிடைச்சிருக்கு.''
"அமெரிக்காவுக்கே 7-வது இடம்னா, நம்ம இந்தியாவுக்கு வாய்பே இருந்திருக்காது''
"அதுதான் இல்ல... நம்ம அப்துல்கலாம் கண்ட கனவு நாடான இந்தியா 100 மேல இருந்து மெல்ல முன்னேறி 88-வது இடத்துக்கு வந்திருக்காம். அதுவே சந்தோசம் தரும் விசயம்தானே... சரிப்பா நான் கிளம்புறேன். அதுக்கு முன்னாலே ஒரு விசயத்தை சொல்லிடுறேன்...''
"போய்ட்டு வர்றேன்கிறீயா?''
"ஹே... இது பழைய ஜோக்குப்பா... நான் தினமலர் நெட் அட்ரஸ் தர்றேன். அந்த அட்ரஸை க்ளிக் பண்ணி பாரு. ஒரு புது விசயம் உனக்கு விளங்கும். நோட் பண்ணிக்க... http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=733 சரி இராத்திரி போகி கொண்டாட்டத்தில பார்ப்போம் வரட்டா...''
"சரிப்பா...''


அன்பு நண்பர்களுக்கு இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Sunday 10 January, 2010

சுயபுராணம் பகுதி-2

சுயபுராணம் முதல் பகுதியில் தஞ்சையிலிருந்து குடந்தைக்கு வீடு மாறிச் செல்வது பற்றி எழுதியிருந்தேன். முதல் பகுதியில் தஞ்சாவூரைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று உங்களில் சிலர் நினைத்திருக்கலாம். அந்த வயதில் எனக்கு தெரிந்ததெல்லாம்- முன்பு சொன்னது போலவே தஞ்சை கோயிலும், சிவகங்கை பூங்கா, அரண்மனை போன்றவைதான். அதற்குப் பிறகு தஞ்சைப் பகுதிக்கும் எனக்குமான தொடர்பு விட்டுப் போயிற்றா என்றால் இல்லை. அங்கும் பல நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்களைப் பற்றி பிறகு காண்போம்.

இப்போது கும்பகோணம் பற்றி...
கும்பகோணத்தில் உள்ள பள்ளியொன்றில் என்னைச் சேர்த்தார்கள். அப்போது எங்கள் வகுப்பாசிரியராக இருந்தவர் சந்திரசேகர். அவர் பாதி நாள் வகுப்புக்கு வரமாட்டார். அவர் ரியல் எஸ்டேட் பிஸினஸை செய்து வருகிறார் என்பது பிற்பாடுதான் தெரிந்தது. ஏற்கெனவே தஞ்சையில் நான் படித்த பள்ளியில் என் படிப்பு சுமார் ரகமாகத்தான் இருந்தது. அதோடு அந்தப் பள்ளியில் அடிக்கடி திருமணம் போன்ற விழாக்கள் நடைபெறும். அதற்காக பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள். என் அப்பாவோட நண்பரின் மனைவிதான் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். அதனால் எனக்கு பல சலுகைகள். படிப்பு விசயத்தில் இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நான் படிக்கவே இல்லையென்றாலும் எனக்கு மதிப்பெண் போட்டு எனக்கு நல்லது செய்வதாக நினைத்து என் ஆரம்பப் படிப்புக்கு தடைக்கல்லாக இருந்துவிட்டார் அவர். அப்போது சிறு வயது என்பதால் எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. அதன் பாதிப்பு குடந்தைக்கு வந்தபிறகுதான் புரிந்தது. இப்போது எதற்கு இதை எழுதுகிறேன் என்றால் இதைப் படிக்கும் ஆசிரியர்கள் இப்படி ஒரு சலுகையை யாருக்கும் கொடுத்து, என்னைப் போன்ற இன்னொரு மாணவனின் வாழ்க்கையை கெடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

அடித்தளமே சரியில்லததால் குடந்தையில் படிப்பதற்கு நிறையவே சிரமப்பட்டேன். என் தந்தைக்கு பணி நேரம் முடிந்தாலும் அவர் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் வீட்டிற்கு வரும் நேரம் முன்பின்னாகத்தான் இருக்கும். என் அம்மா படிப்பு வாசனை அற்றவர். என் சகோதரனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். பின் என் படிப்பு எப்படி இருக்கும்?
எப்படியோ தத்தி தத்தி ஆறாம் வகுப்பு சென்றாயிற்று. அங்கு சென்றவுடன் பாடப்பிரிவுகளை பார்த்ததும் எனக்கு தலை சுற்றத் தொடங்கிவிட்டது. எங்களுக்கு கணக்கு வாத்தியாராக வந்தவர் முருகையன் என்பவர். அவர் பாடம் நடத்தும் போது கவனமாக கவனித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் எல்லாரும் அசட்டையாக இருப்பதையும் நான் கவனித்துக் கொண்டிருப்பதையும் கண்ட ஆசிரியர் என்னை எழுப்பி, இவனைப் பாருங்கள் எவ்வளவு கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறான் இவனைப்போல எல்லாரும் கவனமாக இருங்கள் என்றார். அந்த மாதம் வந்த முதல் திருப்புத் தேர்வு முடிந்து விடைத்தாளை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அவர்களின் மதிமப்பெண்களையும் கூறி வந்தார் கணக்கு வாத்தியார். என் முறையும் வந்தது. என் மதிப்பெண்ணை கண்டவர் உடனடியாக பிரம்பை எடுத்துக் கொண்டு என்னை விளாச ஆரம்பிக்க, வகுப்பில் சிரிப்பொ- ஆரம்பித்தது. இன்னமுமா உங்களுக்கு காரணம் தெரியவில்லை... கணக்குப் பாடத்தில் கீழே சிவப்பு கோடு கிழிக்கும் அளவுக்கு அய்யா அப்படி ஒரு மார்க் வாங்கியிருந்தேன்...

(தொடரும்)

Saturday 9 January, 2010

பயணங்கள் தொடரும்...

பயணங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது நண்பர்களுடன் என்றாலும் சரி, தனியாக சென்றாலும் சரி. தனியாக சென்றால் போரடிக்காதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக எனக்கு அப்படி நேர்ந்ததில்லை. நண்பர்களுடன் செல்லும்போது அரட்டை, அமர்க்களம் என்று செல்லும் பயணம் ஒரு தனி மகிழ்ச்சிதான். அதுவே தனியாக செல்லும்போது என்னை நானே திரும்பிப் பார்த்துக் கொள்வதற்கும், எந்தவித தொந்தரவும் இல்லாமல் இயற்கை அழகை ரசிப்பதற்கும், புதிதாக கவிதைகள் எழுதுவதற்கும் அந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்வையே தரும்.

படிப்பு முடியும்வரை ரயில் பயணம் என்பதே அபூர்வமாக இருந்தது. விடுமுறைக்கு சென்னையில் உள்ள அக்கா வீட்டுக்கு வருவதற்கு மட்டுமே ரயில் பயணம் வாய்ப்பாக அமையும். ஆனால் இப்போது தினசரி வேலைக்கு செல்வதற்கு நம்பகமான, பாதுகாப்பான, நேரத்திற்கு செல்லக்கூடிய ஒரு பயணத்திற்கு ரயில் பயணத்தை விட்டால் வேறு வழியில்லை என்பது நிதர்சனம். பேருந்து பயணத்தைவிடவும் ரயில் பயணம் ஒருவிதத்தில் அலாதியானது. பேருந்தில் எல்லோரும் முன் பக்கம் பார்த்தபடி உட்கார்ந்தே ஆகவேண்டிய கட்டாயம். ஆனால் ரயில் பயணத்தில் எதிரே இருப்பவர்களை பார்த்தபடி அல்லது நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி செல்வதற்கும், அடுத்தவர்கள் படிக்கும் நாளிதழ்களை கடன் வாங்கியோ அல்லது எட்டிப்பார்த்தபடி படிப்பதற்கும் உகந்தது. அதோடு ஒரு கம்பார்ட்மெண்ட் முழுவதும் உள்ள மனிதர்களை கவனிக்க முடியும். அதில் பலதரப்பட்ட குணாம்சமுள்ள மனிதர்களை காணலாம்.

இன்றும் ஒரு மனிதரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. என் எதிரே உள்ள இருக்கையில் மூன்று பேர் அமைர்ந்திருந்தார்கள். அவர்கள் மூவருக்குமே வயது முப்பதுக்குள்தான் இருக்கும். இருக்கையின் முனையில் உட்கார்ந்திருந்தவர் ஜன்னல் கண்ணாடி இறக்கப் பட்டிருப்பதைக் கண்டதும் ஜன்னலோரம் அமர்ந்திருப்பவரிடம் அந்த கண்ணாடியை ஏற்றிவிடும்படி கூறினார். அதற்கு அந்த ஜன்னலோர இருக்கை வாசி நீங்களே திறந்து கொள்ளுங்கள் என்றார். அதை காதில் வாங்காத அந்த இளைஞர் மீண்டும் கண்ணாடியை ஏற்றிவிடும்படி சொல்ல, ஜன்னலோர இருக்கை இளைஞர் நீங்களே திறந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் கொஞ்சம் சப்தமாக கூறினார். உடனே அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே எழுந்து ஜன்னல் கண்ணாடியை திறந்துவிட்டு, அந்த ஜன்னலோர இருக்கை வாசியின் முதுகில் தட்டிவிட்டு அமர்ந்தார். அதற்கு அந்த ஜன்னலோர இருக்கைவாசி மேலே கைவக்கிற வேலை வைச்சிக்காத என்று கூற, அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே எங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே அமர்ந்துவிட்டார். அவ்வளவுதான் நடந்தது.

ஆனால் என் மனசுக்குள் அந்த இளைஞர் ஏன் அப்படி கூறினார்? ஜன்னல் கண்ணாடியை அவரே ஏற்றியிருந்தால் என்ன? அந்த நபர் வீட்டில் ஏதும் பிரச்னையாக இருக்குமோ? அல்லது அவரவர் வேலையை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாரா? இப்படியாக யோசித்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.
உங்களால் ஏதாவது யோசிக்க முடிகிறதா?

Tuesday 5 January, 2010

சுயபுராணம்- பகுதி 1

அவரவர்களுக்கு தனது சொந்த ஊரின் பெருமையைச் சொல்லிக் கொள்ள ஆயிரம் இருக்கும். அதிலும் சொந்த ஊரைவிட்டு (வயிற்றுப் பொழைப்புக்காக) வேலைக்காக வெளியூர்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வளர்ந்த வாழ்ந்த ஊரைப்பற்றி பேசுவது/ எழுதுவது என்றால் தனி கொண்டாட்டம்தான். அப்படித்தான் நானும்... ஏதோ நானறிந்தவரையில் எங்கள் ஊரைப்பற்றியும், அங்கு எனக்கேற்பட்ட, நான் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான எனது அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...

எங்கள் ஊரைப்பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆமாம். எங்கள் ஊர் புகழ்வாய்ந்த ஊராயிற்றே! புலிக்கொடி பறந்த ஊர் எங்கள் ஊர். சோழ மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் ஆண்ட பூமி எங்களுடையது. நெற்களஞ்சியம் என்று பேர் பெற்ற ஊர் எங்கள் ஊர். தமிழ்ப் பல்கலைகழகங்கள், அரண்மனை, பெரிய கோயில் அமைந்த ஊர். காவிரி பாயும் நதிக்கரையில் அமைந்த ஊர் எங்கள் ஊர். தமிழகத்துக்கு பல தலைவர்களை தந்த ஊர் எங்கள் ஊர். பல தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர் எங்கள் ஊர். அந்த ஊர்... தஞ்சாவூர்!



ஆம்! நான் பிறந்தது தஞ்சையில்தான். தஞ்சையில் கரந்தட்டான்குடி (கரந்தை) என்ற பகுதியில்தான் நான் பிறந்தேன். எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் கோயில் இன்னும் என் மனதில் நிற்கிறது. தஞ்சை அரண்மனையின் கிழக்குப் பகுதியில்தான் எங்கள் குடியிருப்பு. விவரமறியாத வயதுதான் என்றாலும் வியந்திருக்கிறேன்- தஞ்சை பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா போன்றவற்றைப் பார்த்து... நான்காம் வகுப்புவரை தஞ்சையில்தான் படிப்பு. அதற்குப் பிறகு என் அப்பாவுக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. மாற்றல் வந்த இடம் தஞ்சையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லையென்றாலும், பிரிய மனமில்லாமல்தான் அந்த ஊரைவிட்டு பிரிந்து பயணமானோம்... எங்களின் அடுத்த வாழ்விடமாக மாறிப்போனது கோவில் நகரமாம் கும்பகோணம் என்ற குடந்தைக்கு!
(தொடரும்)

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...