Wednesday 28 July, 2010

பின்னூட்ட சூறாவளியுடன் ஒரு சந்திப்பு!


அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கைபேசி அலைத்தது. யாரென்று பார்த்தால் பின்னூட்ட சூறாவளி ராகவன் அண்ணன். திடீரென்று அவரிடமிருந்து அழைப்பு வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வணக்கம்
என்றேன், சந்தேகத்துடன். மறுமுனையில் நான் நைஜீரியா ராகவன் பேசுறேன் என்றார். எங்கிருந்துண்ணே என்றேன். சென்னையிலிருந்தான் என்றார்.நலவிசாரிப்புகளுக்குப் பிறகு இன்னைக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நாளைக்கு சாயங்காலம் வர்றேன் என்றேன். சரி என்றார்.

ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் (அன்று அவர்களின் உறவினர்கள் வந்துவிட்டதால்) சந்திக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு மறுநாள் அலுவலகம் முடிந்த பிறகு மாலை அண்ணனுக்கு போன் செய்தேன். இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என்றார்.

ஏழேகாலுக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். என்றேன். அவரும் சரியென்றார். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று போன் செய்ததால் சற்று தாமதமாக போகலாம் என்பதற்காகவே அப்படி சொன்னேன்.

அண்ணனின் வீட்டிற்கும் எனது அலுவலகத்திற்கும் நடை தூரம் (என்கிட்ட வண்டி இல்லே. அதனாலே நடைதூரத்தைத்தானே சொல்லமுடியும்) அவ்வளவுதான்.

வீட்டிற்கு சென்றதும் அன்புடன் வரவேற்றார். வீட்டின் கூடத்தில் அரவிந்த் அவரின் மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அரவிந்திடம் இவரைத் தெரிகிறதா என்று கேட்க, சென்றமுறை சந்தித்ததை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். அண்ணியாரும்தான். நல விசாரிப்புகளுக்கு பிறகு அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.

பதிவுலகம் பற்றி பேச்சு வந்தது. முன்புபோல் இடுகையிட முடியவில்லை (முன்பு மட்டும் அதிகமா இடுகையிட்டமாக்கும் என்று) கூறினார். அதோடு பதிவுலக சண்டை சச்சரவினால் மிகவும் வருத்தமாகவே பேசினார். கூகுள் இலவசமாக தரும் வரையில் இவ்வளவு நபர்கள் எழுதிவருவார்கள். ஒருவேளை கட்டணம் என்றால் எத்தனைபேர் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதே நிச்சயமில்லாத நிலையில் இப்படி சண்டை போட்டுக்கொண்டு இருப்பது பற்றி வருத்தமுடன் போசினார். பதிவர் சந்திப்பு வைப்போமா என்றதற்கு,இந்தப்பிரச்சினையால் யாரையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. சென்னையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்ததாகக் கூறினார். அவர்களில் நானும் ஒருவன் என்றபோது மிகவும் மகிழ்வுற்றேன்.

Friday 9 July, 2010

பொள்ளாச்சி நசன்

'பொள்ளாச்சி நசன்'. இவரை 1990-லிருந்து- அதாவது நான் 'நந்தவனம்' என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தி வந்த அத்தருணங்களிலிருந்து தெரியும். நண்பர்கள் மூலம் அவரது அறிமுகம் கிடைத்தது. 'சிற்றிதழ் செய்தி' என்ற இதழை நடத்தி வந்தார். அவருக்கு வரும் சிற்றிதழ்களைப் பற்றி நல்ல அறிமுகத்தோடு நடத்தி வந்தார். அதோடு வரும் சிற்றிதழ்களை எல்லாம் சேமித்து அவணக் காப்பகமாகவும் இன்றளவும் வைத்துள்ளார்.
   தமிழ்மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக தமிழ்ப்பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார். காலமாற்றங்களுக்கு கேற்ப தனது பணியை இப்போது இணையத்திலும் (அவரே இணையத்தை வடிவமைத்து) செய்து வருகிறார். அரிதான பல தமிழ் நூல்களை மின்னூலாக்கும் (நாள் ஒரு நூல் என்ற முறையில்) பெரு முயற்சியில் பல புத்தங்கள் வந்துள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்றுக் கொள்ள இசை வடிவிலான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதனை பதிவிரக்கியும் பயன்படுத்தும் நோக்கில் தந்துள்ளார். இவரைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள அவரது நேர்காணல் படிக்க இங்கு http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=4533&Itemid=212 சுட்டவும்.
அவரது தளத்தினைக் கண்டால் இன்னும் அவரது உழைப்பு, முயற்சி எல்லாம் தெரியவரும். அவரது வலைத்தளம் செல்ல http://www.thamizham.net/

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...