Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Sunday, 9 August 2009

இயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த சந்திப்பு.

மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ‘ஓ பக்கங்கள்’ ஞானி அவர்களின் வீட்டுக் கிணற்றடியில் எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களின் எழுத்து அனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த மாத நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தவர் ‘கேமராக் கவிஞர்’ என்று போற்றப்படும் இயக்குனர் பாலுமகேந்திரா.


படைப்புகள் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டார். பலரும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக, காலத்தை பதிவு செய்வதாக, உருவமும் உள்ளடக்கமும் கொண்டதாக, செய்தியை (மெஸேஜ்) கொண்டிருப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். வரவேற்ற பாலுமகேந்திரா அவர்கள் உருவமும் உள்ளடக்கமும் முக்கியம் என்றார். அது பற்றி விளக்கவும் செய்தார்.


பாட்டி வடை சுட்ட கதையை ஒராயிரம் வருடங்களாக சொல்லி வருகிறோம். இன்னும் ஒரு கோடி ஆண்டுகளாயினும் சொல்லுவோம். ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்றார்.


எல்லாச் சிறுகதைகளுக்கும் முடிவுகளை நாமே சொல்லிவிட முடியாது. சில கதைகளின் முடிவுகளை வாசகனின் பார்வைக்கே விட்டுவிட வேண்டியதிருக்கும் என்றார். நெருங்கிய நண்பனின் தாய் இறந்துவிடுகிறாள். அந்த நண்பனின் தாயின் கையால் இவனும் பலமுறை சாப்பிட்டிருக்கிறான். அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டிற்கு செல்கிறான். அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.


ஒரு சிறுகதையை குறும்படமாக எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி கூறினார். உதாரணத்திற்கு பாட்டி வடை சுட்ட கதை எடுத்துக் கொண்டு விளக்கினார். ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். இதில் ஒரு ஊர் அடங்கியிருக்கிறது. அந்த ஊர் எப்படிப்பட்டது. கிராமமா, நகரமா, மலைப்பிரதேசமா என்பது போன்றவை கவனிக்க வேண்டும். பாட்டி- பாட்டி என்றால் எந்த மாதிரி பாட்டி? சுமங்கலியான பாட்டியா? விதவைப் பாட்டியா? காதில் பாம்படம் மாட்டியிருக்கும் பாட்டியா? போன்றவை இதுபோல் கவனிக்க வேண்டும் என்றார்.இந்த மூன்று வார்த்தைகளிலேயே இவ்வளவு கவனிக்க வேண்டியிருப்பதென்றால் முழுக்கதைக்கும் எவ்வளவு மெனக்ககெட வேண்டியிருக்கும் என்பதை விளக்கினார்.


தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளைஞர்களிடம் கடைசியாக படித்த நாவல் என்ன? சிறுகதை என்ன? என்று கேள்வி கேட்பதாகவும், அவர்கள் படிக்கவில்லையென்றால் படிக்க சொல்வதாகவும் அதன்பிறகே அவர்களுக்கு திறமை இருந்தால் சேர்த்துக் கொள்வதாகவும் கூறினார். தனது உதவி இயக்குனர்களிடமும் தினசரி ஒரு கதையை படித்து அதை அவர்கள் எப்படி சீன் பிரிக்கிறார்கள், குறிப்பு எடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


பதேர் பாஞ்சாலி நாவலைப் படித்த பிறகே அதை படமாக பார்த்ததாகவும், நாவலைவிட சத்யஜித்ரே படமாக்கியிருந்த விதம் அருமையாக இருந்ததாகவும் தெரிவித்தார். பிரபல தொலைக்காட்சி அவரிடம் 52 வாரங்களுக்கு தொடர் எடுத்து தரும்படி கூறியபோது தான் படித்து மகிழ்ந்த சிறுகதைகளை தொடராக எடுத்ததாக தெரிவித்தார். அப்படி எடுக்கப்பட்ட எழுத்தாளர் ‘மாலன்’ அவர்களின் சிறுகதையை (ஞானி அருமையாக வாசித்தார்.) வாசிக்கச் செய்து, அந்த சிறுகதையை தான் படமாக மாற்றிய போது தான் செய்த மாற்றங்களை கண்டுணர செய்தார். (நிகழ்ச்சி முடிவில் அந்தப் படம் திரையிடப்பட்டது.)


எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் ‘பிரசாதம்’ கதையை படமாக மாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாக பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலாக கூறினார். யுவசந்திர சேகரன், மாலன் கதைகளை படிக்க தான் பரிந்துரைப்பதாக ஒரு கேள்விக்கு தெரிவித்தார். இதனால் ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளை தான் மதிக்கவில்லை என்று பொருளல்ல என்றும் கூறினார்.


மூன்றாம்பிறை படம் பார்த்த பலர் இப்படி படம் எடுப்பது சுலபம். கமர்ஷியலாக உங்களால் படம் எடுத்து வெற்றிபெற முடியுமா என்று (நீங்கள்) கேட்டதற்காகவே அந்தப் படத்தின் பெயரையும்) ‘நீங்கள் கேட்டைவை’ என்று வைத்ததாகவும் சொல்லி கலகலப்பூட்டினார்.


இந்நிகழ்வில் நமது பதிவர்கள் லக்கிலுக், பைத்தியக்காரன், அக்னி, அதிஷா,ஆ.முத்துராமலிங்கமும், பொன்.வாசுதேவன், முத்துவேல் ஆகியோரும் வந்திருந்தனர்.


பின்பு முத்துராமலிங்கம் சொன்னார்- தமயந்தி மற்றும் உமாஷக்தி அவர்களும் வந்திருந்ததாக...

இந்த இடுகையில் இன்னும் சில விடயங்கள் விடுபட்டிருக்கலாம். வந்திருந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அல்லது இடுகைகளாகவும் போடலாம்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...