Tuesday, 27 January 2009

சீறும் பாம்பை நம்பு... சிரிக்கும் பெண்ணை நம்பாதே...


ஆட்டோக்களின் பின்புறத்தில் பலரும் தங்களுக்கு பிடித்தமான பொன்மொழிகளையும், தத்துவங்களையும், கவிதைகளையும்கூட எழுதி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்தவரின் ஆட்டோ ஒன்றில் "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்று எழுதியிருந்தது.
"என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள்? பெண்கள் படித்தால் தப்பாக நினைக்க மாட்டார்களா?'' என்றேன்.
"இதில் தப்பாக நினைக்க ஒன்றுமில்லை. இது ஆண்களை எச்சரிக்கக்கூடிய, அர்த்தம் பொதிந்த வாசகம்'' என்று கூறினார்.
எனக்கு ஆர்வம் எல்லை மீறி போய்விட்டது. "கொஞ்சம் விளக்கமாகத்தான் கூறுங்கள்'' என்றேன்.
"சீறும் பாம்பை நம்பு! சாலையில் நண்பர்களுடன் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது பாம்பு ஒன்று குறுக்கிடுகிறது. நீங்கள் திகைத்து நிற்கிறீர்கள். தங்களைக் கண்டதும் பாம்பு படமெடுத்து சீறினால் அப்பாம்பு உங்களைக் கண்டு சீறவில்லை, உங்களுடன் வரும் உங்கள் நண்பரைக் கண்டுதான் சீறுகிறது என்று நீங்கள் சும்மா இருப்பீர்களா என்ன?
ஓட்டமாய் ஓடுவீர்கள். இல்லையென்றால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமில்லை! ஆக சீறும் பாம்பு யாரைப்பார்த்து சீறினாலும் தன்னைப் பார்த்து சீறியதாக நம்ப வேண்டும். அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும்.
அதே போல நண்பர்களுடன் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது கல்லூரிவிட்டு வந்த பெண்கள் அங்கு பஸ்ஸிற்காக நிற்கிறார்கள். அப்பெண்களில் ஒருத்தி உங்கள் பக்கமாக திரும்பி சிரிக்கிறாள். உடனே உங்களைப்பார்த்துதான் சிரிப்பதாக நீங்கள் நம்பிக்கைக் கொள்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் நம்புகிறார்கள். யாரைப்பார்த்து சிரித்தாள் என்று சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைதான். இப்போது புரிகிறதா, "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்பதன் அர்த்தம்'' என்றார் நண்பர்.

Monday, 19 January 2009

வலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு...

முதன் முதலில் வலைப்பதிவர் பட்டறையில் கலந்துகொண்டபோதுதான் இப்படி நமக்கே நமக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கலாம், நமது எண்ணங்களை, கருத்துக்களை, படைப்புக்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, நட்பை வளர்க்க மிகப்பெரிய வாய்ப்புண்டு என்று உணர்ந்தேன். எனக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கியவுடன் முதல் இடுகை கவிதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி கவிதையை நோட்பேடில் டைப் செய்து காப்பி செய்து எடுத்துக்கொண்டு இணைய மையத்திற்கு சென்றேன். இடுகை இட்டபின் அது கவிதையாக இல்லாமல் பாரா கிராபாகவே எடுத்துக்கொண்டது. சரி என்று தேவைப்படும் இடத்தில் கர்சரை வைத்து என்டர் தட்டினேன். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே இடைவெளி அதிகமாகி கவிதை வெளியிடும் என் ஆசையை தடுத்தது. நானும் பலமுறை முயற்சி செய்தேன். முடியவில்லை. வலைத்தளத்திற்கு புதியவன் என்பதால் தெரிந்தவர்கள் அதிகமில்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கேட்டதற்கு எங்களுக்கு அப்படி எதுவும் ஆகவில்லை என்றார்கள். அப்ப இந்த கொடுமை நமக்கு மட்டும்தானா? இதை எப்படி தீர்ப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தேன்.இதற்கிடையில் பதிவர் சந்திப்பு (டிசம்பர்27, 2008) தி.நகர். நேடசன் பூங்காவில் நடைபெறும் என்ற அறிவிப்பு ஆதிசாவின் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அங்கு சென்றேன். நான் செல்லும் முன்பே சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டதால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாமல் அமைதியாக நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன். என்னருகே அமர்ந்திருந்த ஒருவர்(கார்க்கி என்று பின்பு விசாரித்து தெரிந்து கொண்டேன்) என்னிடம் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் என் பிரச்சனையை சொன்னேன். அவர் 'தமிழ் எழுதி' கொண்டு எழுதினால் இந்தப்பிரச்சனை வராது என்றார். சரி, ஒரு புதிய ஐடியா கிடைத்திருக்கிறது என்று சந்தோசமாக சென்றேன். ஆனால் எனக்கு இதிலும் தோல்வியே! சரி இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை நாமே நோண்டிப்பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். இடுகைப்பெட்டியில் இருக்கும் html திருத்து என்றதன் மேல் கிளிக் செய்தேன். ஏதோ மாற்றம் தெரிந்தது. பிறகு கவிதையில் தேவைப்பட்ட இடத்தில் வைத்து என்டர் தட்ட என் முயற்சி வெற்றி பெற்றது.உங்களில் யாருக்கேனும் இந்தச் சிரமம் இருந்ததா?

Monday, 12 January 2009

பொங்கல் வாழ்த்துக்கள்.




மற்ற திருவிழாக்கள் போலி(த்தனமி)ல்லாமல் பொங்கல் திருவிழா தமிழர் திருநாள். இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாள். ஆமாம். மற்ற திருவிழாக்கள் சடங்குகளால் நிரம்பியது. ஆனால் பொங்கல் திருவிழா உழைப்புக்கும், உழைப்பிற்கு உதவிய விலங்கினங்களுக்கும் நன்றி சொல்லும் திருவிழா! கிராமங்கள் இந்தியாவின் இதயம். அந்த இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. தொழிற்சாலைகள் பெருகினாலும், நாகரீகம் மாறினாலும், நகரங்கள் பெருகினாலும் எண்சான் உடம்பிற்கு வயிறே பிரதானம்! அந்த வயிற்றுக்கு சோறிடுவது விவசாயிகள்தான். அந்த விவசாயிகளை நாம் மறந்துவிட்டதன் விளைவுதான் இன்று விலைவாசி விண்ணை முட்டி நிற்கின்றன.விளைநிலங்களை தொழிற்சாலைகள் ஆக்கிவிடுவதன் மூலம் சில பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்.விளைநிலங்களை அழிப்பதால் அத்துணை பேருக்கும் சோறில்லாமல் போகும்!தமிழனுக்கு எப்போதுமே தும்பைவிட்டு வாலை பிடிப்பது என்ற பழமொழிப்படி நடப்பதுதான் பிடிக்கும். ஆமாம்,முதலிலேயே யோசித்து முடிவெடுத்திருந்தால் சோழநாடு சோறுடைத்த நாடு என்ற முதியோர் கூறியது இன்று பொய்யாகுமா? தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை உணர்வுபூர்வமாக பலர் வரவேற்றாலும், பலர் இதிலும் அரசியல் ரீயாகவே பார்க்கின்றனர். சிலர் ஒரு விடுமுறைநாள் (ஏப்ரல் 14)இழக்கப்படுவதாக வருந்துகிறார்கள்.தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் வாக்கு! ஆடி மாதம் தன்னிடம் உள்ள கையிருப்பை எல்லாம் விளைநிலத்தில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் விவசாயி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநாள்தான் பொங்கல். நாம் பழமொழிகளை மறந்தாலும், முதுமொழிகளை மறந்தாலும் வழிவழியாக கொண்டாடப்படும் திருவிழாக்களை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் இந்த பொங்கலையும் கொண்டாடிவிட்டு போவோம்!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...