பதிவர் கோமா அவர்கள் ஒரு படத்தை தன்பதிவில் போட்டு அதை கண்டுபிடியுங்கள் பார்கலாம்னு சொன்னாங்க. சரி, நாமளும் அப்படி ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சப்ப, இந்த கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. இந்த கதைக்கு முடிவை நான் எழுதலை. அதை சொல்லப்போவது நீங்கள் தான். என்ன தயாரா?
இந்த கதை, பல வருடங்களுக்கு முன் நடந்தது. (இந்த வரி, நீங்கள் சொல்லப்போகும் முடிவிற்கும் சம்பந்தப்பட்ட ஒரு க்ளுவாகவும் இருக்கும்) அந்தக்காலத்திலும் வேலைதேடி அண்டை நாடுகளுக்கு பயணம் செல்வது வாடிக்கையான விடயம்தான். அந்த மாதிரி ஒரு நான்கு நண்பர்கள் பயணம் தொடர்ந்தார்கள்.முதல் நபருக்கு சிற்பம் செய்யும் வேலையும், 2-ம் நபருக்கு தையல் வேலையும், 3-ம் நபருக்கு ஆபரணத்தொழிலும், 4-ம் நபருக்கு மந்திர தந்திர வேலைகளும் தெரியும்.
நால்வரும் பயணக் களைப்பில் ஒரு இடத்தில் கூடாரமடித்து தங்கினார்கள். வழி செலவுக்காக அவர்கள் கையில் விலை மதிப்பற்ற பொருட்கள் பலவும் வைத்திருந்ததால், அப்பொருட்டகள் களவுப் போகாமல் இருக்க, இந்த இரவுப் பொழுதில் ஒவ்வொருவரும் மாற்றி காவல் இருப்பது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். அதன்படி முதலில் சிற்பத் தொழில் தெரிந்தவன் காவல் இருந்தான். அவனுக்கு தூக்கம் வராமல் இருக்க தன் கைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெண் சிற்பத்தை செய்ய ஆரம்பித்தான். அவனின் காவல் நேரம் முடிவதற்குள் சிலையை செய்து முடித்தான்.
பின்பு, தையல் தொழில் செய்பவன் காவலுக்கு வந்தான். அவன் சிற்பி செய்த சிலையைப் பார்த்தான். அந்த சிலைக்கு ஆடைகள் தைத்து, அவன் காவல் நேரத்தை பூர்த்தி செய்தான்.
பின்பு காவல் பொறுப்பை ஆபரணத் தொழில் செய்யபவனிடம் ஒப்படைத்தான். அவன் சிலையையும், அதற்குத் தைக்கப்பட்ட ஆடைகளையும் கண்டு, இதற்கு ஆபரணம் செய்து போட்டால் அழகாக இருக்கும் என்று தோன்ற, அப்படியே செய்து முடித்தான். அடுத்து, காவல் பொருப்பு மந்திர, தந்திர தொழில் தெரிந்தவனிடம் சென்றது.
அவன் தனக்கு தெரிந்த மந்திரத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த சிலைக்கு உயிர் கொடுத்தான். பொழுது விடிந்தது.
அனைவரும் கண்விழித்தனர். அழகுமிக்க பெண்ணெருத்தி அங்கிருப்பதைக் கண்டு அதிசயத்தனர்.
இப்பொழுது அவர்களுக்குள் ஒரு சண்டையே மூண்டது. சண்டைக்கு காரணம் அந்த உயிர்பெற்ற பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வது என்பதுதான். சண்டை முற்றி ஒரு தீர்வு பெறமுடியாமல் தடுமாறினார்கள். அதற்காக அந்த நாட்டு அரசனை அணுகுவது என்று முடிவு செய்தனர்.
அரசனும் நடந்தவற்றை எல்லாம் கேட்டு, ஒரு தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.
அந்த தீர்ப்பு என்னவாக இருக்கும்.
நீங்கள் சொல்லுங்கள்!
