Thursday, 31 December, 2009

புத்தாண்டு வாழ்த்துகள்...
என் அன்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு...
என் இனிய தமிழ்மற்றும் ஆங்கில புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்.
வேலைப்பளு காரணமாக வலையுலகம் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. விரைவில் பழையபடி நானே வருவேன்... இங்கும் (இலக்கியாவிற்கும்)... அங்கும்... (உங்கள் வலைத்தளத்திற்கும்)
இந்த இடைப்பட்ட காலத்தில் என் மீது அக்கறை கொண்டு விசாரித்த அன்பு நல் உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, 16 September, 2009

உங்களுக்காக...

வாழ்க்கைக்கு தண்ணீர் எவ்வளவு அவசியம் என்பதை நாமறிவோம். நீர்வளம் குறைந்துவருவது கண்டுகூடு. நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டுவரும் ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’. ஏரி,குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பும் படி வேண்டுகோள் விடுக்கிறது. முகவரி-
மக்கள் விழிப்புணர்வு இயக்கம்,
3/20, 16ஆவது குறுக்குத் தெரு, நியூகாலனி,
குரோம்பேட்டை,
சென்னை - 600 044


***********************
நீங்கள் அய்க்கூ எழுதுபவரா?
நீங்கள் எழுதிய சிறந்த பத்து அய்க்கூவை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 1,200 பரிசை பெறலாம்.
கடைசி தேதி- இம்மாதம் இறுதிக்குள். அதாவது செப்டம்பர் 30க்குள்.
முகவரி- கன்னிக்கோயில் ராஜா,
30/8 கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.


**************************

ஆச்சிக்கு பாராட்டுக்கள்!
னைவராலும் அன்புடன் ‘ஆச்சி’ என்றழைக்கப்படும் நடிகை மனோரமா ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்னும் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதனால் குழந்தையின்மையால் வரும் விவகாரத்து, உயிர்க் கொல்லியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படும். ஆச்சியின் இந்த முயற்சி வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.

‘தென்கச்சி’ சுவாமிநாதன் மறைவு
‘தென்கச்சி’ சுவாமிநாதன். இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவரின் ‘இன்று ஒரு தகவல்’ பிரபலம். இப்படி இவர் சொன்ன தகவல்களை வானதி பதிப்பகம் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவராகவும் ஏழு வருடங்கள் (தென்கச்சியில்) இருந்திருக்கிறார். ஊரில் விவசாயமும் செய்தவர். அந்த அனுபவத்தில் வானொலி நிலையத்தில் விவசாய செய்திகளை ஒலிபரப்ப ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வர, அதைப் பார்த்து விண்ணப்பித்து, விவசாயம் தெரிந்ததால் இவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தாம். பின்பு படிப்படியாக வளர்ந்து உதவி ஆசிரியர், ஆசிரியர், உதவி நிலைய இயக்குனர் என்று வளர்ந்து வந்தவர்.‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்பு சன் தொலைக்காட்சியிலும் அந்நிகழ்ச்சியை வழங்கி உலகப் புகழ் பெற்றார்.சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Monday, 14 September, 2009

அழகு,காதல்,கடவுள்,பணம்

அழகு,காதல்,பணம், கடவுள் பற்றிய உங்களின் கருத்துகள் என்ன என்று அறிந்து கொள்ள இந்த தொடரை ஹேமா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த தொடர் இடுகைக்கு என்னை நையாண்டி நைனா அழைத்திருந்தார்.

அழகு இருந்தால் காதல் வரும்(!)
அந்த காதல் நிறைவேற-நீடிக்க பணம் நிச்சயம் தேவைப்படும்.
அந்த பணம் அளவுக்கு அதிகமானால்-
நிம்மதிக்காக கடவுளைத் தேடிச் செல்வார்கள்...


அப்பாடி... ஒருவழியா எல்லாத்தையும் ஒண்ணாக் கோர்த்து எழுதியாச்சு என்று எகிறிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும், நம்மைப் பற்றி, நமது கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தானே இந்த இடுகை என்பதால், சற்று விளக்கமாகவும் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

(விரிவா வேற சொல்லப் போறீயா... விளங்கிடும்... என்று சொல்பவர்கள் நேரே கருத்துரை பகுதிக்கு சென்று கருத்துக்களை பதிந்துவிட்டு நகருங்கள். மற்றவர்கள் மேலே படியுங்கள்...

அகோ(ஹலோ-தான் இப்போ தமிழ்ல அகோ... உபயம் பழமைபேசி)... ஒரு நிமிடம்... மேலே என்றால் தொடர்ந்து படியுங்கள்னு சொன்னேன். நீங்க பாட்டுக்கு மேல் நோக்கி கர்சரை நகர்த்துறீங்களே... இஃகி... இஃகி...


அழகு...

அழகு என்பது காண்போர் கண்களில் இல்லை... கண்ணால் காண்பது- புற அழகு. அந்த அழகு கொஞ்ச நேரத்திலோ அல்லது (ஒப்பனை செய்து) ஒப்பேற்றிக் கொண்டிருந்தால் கொஞ்ச காலத்திலோ காணாமல் போய்விடும். நிரந்தரமான அழகு மனதைப் பொறுத்தது. சமீபத்தில் எங்கள் அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பில் ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஒருவர் ‘சொர்க்கமே என்றாலும்...’ என்ற பாடலை கொஞ்சம் மாற்றி...‘சொர்க்கமே என்றாலும் அது என்வீட்டைப் போலாகுமா... கிளியோபாட்ரா ஆனாலும் என் பொண்டாட்டிக்கு ஈடாகுமா...’ என்று பாடினார். அதுதான், அழகு... கருப்பான பெண்ணாக இருந்தாலும், நம் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்புறம் கிளியோபாட்ரா வந்தால்கூட பொண்டாட்டிக்கு ஈடாக மாட்டாள் என்பது விளங்கும்.(விளங்குச்சா... இல்லே விளங்கிடும்ங்கிறீங்களா...?)


காதல்...

காதலும் அதுபோலதாங்க...

‘மௌனம் பேசியதே’ படத்தில் வரும் இந்த பாடலைக் கேட்டிருக்கிறீர்களா... ‘அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடிதான். இருபதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலையே நம்மோட லவ் ஸ்டோரிதான்’ -இதுதாங்க உண்மையான காதல்...

ஆயிரம் சண்டைகள் ஆயிரம் அடிதடிகள் இருந்தாலும் ஓ...மை சுவீட்டி... ஐ லவ்யூடா செல்லம் என்று உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லிப்பாருங்கள்... போயே போச்சு... இட்ஸ்கான்... அப்புறம் என்ன ஜமாய்...


பணம்...

பணம் இல்லைன்னா பிணம்னு சொல்வாங்க. வாழ்க்கையை வாழ பணம் தேவைதான். அதற்காக பணத்துக்காக ஓடிக்கிட்டே இருக்க கூடாது. அப்படி பணத்திற்கு பின்னாடி ஓடினவங்கயோட கதையை அன்றாடம் செய்தித்தாளில்(கள்ளக் காதல், லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் பட்டியல் இப்படி...) பார்க்கலாம். இதுக்குமேல இதற்கு விளக்கம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.


கடவுள்...

இதற்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது. உதவிக்கு கண்ணதாசனத்தான் கூப்பிடணும்...

‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலைதான்...’
இன்னொன்றையும் இங்க சொல்லணும்...
எங்கு ஆடம்பரம் பெருகுகிறதோ அங்கு கடவுள் இருக்கமாட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். இது ஆலயங்களுக்கும் பொருந்தும்தானே...


விதிமுறைப்படி மூன்றுமுதல் ஐந்து நண்பர்களை அழைக்கலாமாம்...
மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதற்காக நான் மூன்று நண்பர்களை மட்டும் அழைக்கிறேன்...


அய்யனார் பற்றிய கனவுகளில் இருக்கும், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்...


அழகை பாதுகாப்பது பற்றியும்,காதலர்களுக்கும் டிப்ஸ் தந்துகொண்டிருக்கும் நம்ம தேவா சார்...


கவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த(ரொம்ப காலமாக வலைப்பதிவிடாமல் இருக்கும்)நண்பர் ஆ.முத்துராமலிங்கம். ஆகியோரை அன்புடன் இடுகையிட அழைக்கிறேன்.

Friday, 11 September, 2009

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக...

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ள நம்மால் அவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பு இப்பொழுது... ஒரு கை தட்டினால் ஒசை எழாது தோழர்களே... கரம் கோர்த்து இப்பொழுதாவது அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம். ஒன்றுமில்லை ஒரு 20 வினாடிகள் செலவு செய்யுங்கள் போதும். அவ்வளவே... விபரங்களுக்கு தங்கமணி அவர்களின் இடுகையை படியுங்கள்...

க. தங்கமணி பிரபு அவர்கள் ஒரு இடுகை இட்டுள்ளார்.

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து இங்கு சென்று பாருங்கள்.


அல்லது


இங்கு இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெயில் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புனித செயலில் ஈடுபடுத்துங்கள்.

Sunday, 6 September, 2009

பயணத்தில் ஓர் நாள்...

யிலில் நல்ல கூட்டம். அடித்துப் பிடித்து எப்படியோ ஏறி இடம் கிடைத்த நிம்மதியில் பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் ராஜாராமன். முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு நிமிர்ந்தவர் ஆச்சரியப்பட்டார்.

“அடடே... சதா எப்படி இருக்கே வா... வா... உட்காரு” என்றவாறு சற்று நகர்ந்து இடம் கொடுத்தார்.

“நல்லா இருக்கேன்டா...” என்று புன்னகைத்தவாறு அமர்ந்தார் சதா என்கிற சதாசிவம். ராஜாராமனின் பால்ய கால நண்பர்.

“எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. ஆமா வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க...” என்று ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.பேச்சு குழந்தைகள் பற்றி திரும்பியது.

“உனக்கு பெண் குழந்தைதானே... கல்யாணம் ஆகிடுச்சா?”

“அதை ஏன்டா கேட்கிற நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் அமையல... நீ ஏதாவது நல்ல இடமாயிருந்தா சொல்லேன். இருபது பவுன் போடலாம். கல்யாண செலவை பாதி செய்யுறேன். நகையெல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டேன். எல்லாம் தாயாராத்தான் இருக்கு. மாப்பிள்ளை மட்டும் அமைஞ்சிட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாம்.”

“அவ்வளவுதானே... கவலையை விடு. உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான். நீ எதிர்பார்த்த மாதிரியே ஒரு நல்ல இடம் இருக்கு. அவங்களும் பொண்ண தேடிக்கிட்டிருக்காங்க. நீ சரின்னு சொன்னா, வர்ற ஞாயிற்றுக் கிழமையே அழைச்சிட்டு வர்றேன். போதுமா?”

“ரொம்ப சந்தோஷம்டா சதா... வர்ற ஞாயிற்றுக்கிழமை வேண்டாம். சனிக்கிழமை நாங்க குடும்பத்தோட திருப்பதி போறோம். திங்கட்கிழமைதான் வருவோம். அதனால அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லு. உன் மூலமா இந்த வரன் அமைச்சா அதைவிட பெரிய சந்தோசம் வேற இல்ல...”

“சரி உன் அட்ரஸ், போன் நம்பர் சொல்லு. முன்னாடியே தகவல் கொடுத்துட்டு அழைச்சிட்டு வர்றேன்” என்றார்.ராஜாராமன் சொல்ல, சதாசிவம் குறித்துக்கொண்டார்.

“சரி நான் வர்றேன் ராஜா. இங்க பல்லாவரத்தில ஒரு நண்பரை பார்க்க வேண்டியிருக்கு”என்று இறங்கிக் கொண்டார்.


திங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன்.

Thursday, 3 September, 2009

குருவே சரணம்

குரு என்பவர்கள் நமக்கு கற்றுத் தருபவர்கள். அம்மா அப்பாவுக்கு அடுத்து குருதான். அதற்குப் பிறகுதான் தெய்வம். மாதவும் பிதாவும், குருவும்தான் நமக்குத் தெய்வம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். குரு என்பவர்தான் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள். நாம் கல்வி கற்கும் பருவங்களில் எத்தனையோ ஆசிரியர்களைச் சந்தித்தாலும் ஒரு சிலர்தான் நம்மால் மறக்க முடியாதவர்களாகி விடுகின்றனர்.

அந்த வகையில் எனக்கு அமைந்த தமிழாசிரியரையும் உடற்கல்வி ஆசிரியரையும் நான் இன்றளவும் மதிக்கிறேன்.

தமிழாசிரியர் திரு.பர்னபாஸ்.

தமிழ் நம் தாய் மொழிதான் என்றாலும் அதையும் சுவைபட நடத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். இலக்கணத்தையும் கவனிக்க வைத்தவர் அவர். திருக்குறளாகட்டும், சிலப்பதிகாரமாகட்டும் எதையும் தன் இனிய குரலால் பாடியவாறு பாடம் எடுப்பார். மாணவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவார். பாடம் சம்பந்தப்பட்டவற்றை மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவர்.

இயல்பாக மாணவர்களிடம் பழகும் அதே நேரத்தில் கண்டிப்பாகவும் நடந்து கொள்வார். தன் கைப்பையில் அடக்கமாக அரையடி நீளமுள்ள சிறிய பிரம்பு வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களுக்கு கையின் மணிக்கட்டு எலும்பில்தான் அடிவிழும். எங்களுக்கு ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அவரே தமிழ் ஆசிரியராக இருந்ததால் அவரை பற்றி நாங்களும் எங்களைப் பற்றி அவரும் தெரிந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் பிரம்புக்கு வேலையில்லாமல் போனது.

இன்று தமிழ் எழுத்துகளை (கூடியவரையில்) பிழையின்றி நான் எழுதுகிறேன் என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் அவரே.

அடுத்து உடற்கல்வி ஆசிரியர். திரு. தன்ராஜ்.

இந்த "உடல் + கல்வி' என்பதற்கு அர்த்தமே அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அந்த அளவுக்கு உடல் நலம் பேணுதல் பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். தலைமுடி அதிகமாக இருந்தாலோ, விரல்களில் நகம் அதிகமாக இருந்தாலோ, பள்ளி சீருடை அழுக்காக இருந்தாலோ , சீருடையில் பட்டன் இல்லாமல் இருந்தாலோ தொலைந்தோம். சட்டை அழுக்காக இருந்தால் தன் பையிலிருந்து காசு கொடுத்து எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் குளத்தில் துவைத்து, காயவைத்து அவரிடம் காண்பித்துவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.

இதற்காகவே அவர் வகுப்பு என்றால் எல்லாரும் தங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி மட்டும் சொல்லித் தராமல் இந்த அளவுக்கு எங்கள் நலனில் அக்கறை கொண்ட அவரை அந்த நேரத்தில் வெறுப்பாக பார்த்தாலும் இப்போது அவரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

எனது பள்ளிக் காலத்திலேயே திரு தன்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற விழாவில் அவர் கண்கலங்கி “நான் பணிக்காலத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றபோது அத்தனை மாணவர்களும் கலங்கித்தான் போனார்கள்.

எங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திட்ட திரு.பர்னபாஸ் அவர்களையும் திரு.தன்ராஜ் அவர்களையும் இந்த தினத்தில் (செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்) நினைவு கூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் பூரண ஆயுளுடன் நிறைவான வாழ்க்கை வாழவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

Tuesday, 25 August, 2009

"And Now....."

பள்ளிப் பருவத்தில்
எதிர்காலம் பற்றிய
சில கனவுகளை
சேமித்து வைத்திருந்தேன்.

கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...

ஆச்சியின் "And Now....."
ஆயில்யனின் "And Now....."
நிஜம்ஸின் "And, Now..."
தமிழ் பிரியன் “And, Now..."
அதிரை ஜமாலின் “And Now..."
ஹரிணி அம்மாவின் "And Now....."

Monday, 24 August, 2009

காது கொடுத்துக் கேட்டேன்...தினசரி பணிக்கு ரயிலில் பயணம் செய்வது என் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படிச் செல்லும்போது புத்தகங்கள் படிப்பது வழக்கம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது புத்தகம் படிப்பது இயலாமல் போய்விடும். அப்போது வேடிக்கை பார்த்தவாறு வருவேன். சில சமயம் மற்றவர்களின் செயல்களை, உரையாடல்களை காதில் வாங்குவதும் உண்டு. அப்படி காதுகொடுத்து கேட்டவைதான் இவை...

காட்சி-1


ஒரு இளைஞன் செல்போனில் தன் நண்பனுடன் பேசுபவை...

‘நேத்து அவளை அழைச்சிக்கிட்டு பரங்கிமலை ரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தேன் மச்சி. அப்ப பார்த்து ஒரு போலீஸ்காரன் வந்து எங்களை எழுப்பி விசாரிச்சான்.’

‘............’

‘நாங்க ரயில்வே பிளாட்பாரத்திலதான் உட்கார்ந்திருந்தோம்.’

‘.............’

‘இல்லடா... எக்ஸ்பிரஸ் ரயில் போகும்ல அந்தப் பிளாட்பாரத்தில...’

‘.....’

‘அங்கதான் யாரும் இருக்கமாட்டேங்களேன்னு...’

‘......’

‘அவ மாம்பலத்திலதான் வேலை பார்க்கிறா. நான்தான் பேசிக்கிட்டிருக்கலாம்னு அங்க அழைச்சிட்டு போனேன். ரொம்ப நேரம்கூட இல்லடா. பத்துநிமிசம் பேசிக்கிட்டிருப்போம். வழக்கமா நடக்கிறதுதான். ஆனா நேத்துதான் அப்படி வந்து விசாரிச்சாங்க போலீஸ்.’

‘......’
‘பேசிக்கிட்டிருக்கும் போதே அந்த போலீஸ் அடிச்சிட்டான்டா.’

‘.....’

‘ஏன்சார் அடிக்கிறீங்கன்னு நான் கேட்டேன். அவன் திரும்பவும் அடிக்க வந்தான். நான் கையைப் பிடிச்சிட்டேன். அப்புறம் விசாரிச்சிட்டு விட்டுட்டான். பாவம் அவதான் ரொம்ப பயந்துட்டா.’

‘.....’

‘இனிமே நான் கூப்பிட்டா அவ வருவாளான்னு தெரியலை... சரி நான் அப்புறம் பேசுறேன் மச்சி.’


(பயணம் செய்த அனைவரும் அவனை கவனித்ததால் பேச்சை முடித்துக் கொண்டான் என்று நினைக்கிறேன்.)


காட்சி-2


‘ஹலோ... இன்னைக்கு ராத்திரி சரக்கு அங்கிருந்து மூவ் ஆகிடும். ராத்திரியே இங்க வந்திடும். ஆனா நாம காலையில மாத்திகிடலாம். கோயம்பேடு வெங்காய மண்டிக்கு வந்திடுங்க. காலைல ஆறரை மணிக்கு மாத்திக்கலாம். நிச்சயம் வந்திடும்.எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு போன் பண்ணிச் சொல்றேன்.


(பேசறதைப் பார்த்தா கள்ளக்கடத்தல் பண்ணுறவங்க மாதிரியே பேசுறாரே... ஒருவேளை அப்படியும் இருக்குமோ...)


காட்சி-3

ஒரு ஜோடியை ரயில்வே போலீஸ்காரர் அழைத்துக் கொண்டு செல்ல, என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு கூட்டம் பின் தொடர்ந்து வந்தது. (நீயும்தானே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.... இல்லங்க... நான் அந்த போலீஸ்காரர்கள் அறைக்கு வெளியே நின்றுதான் ரயில் ஏறுவது வழக்கம்.)


உள்ளே அழைத்துச் சென்ற போலீஸ்காரர் சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தார்.

‘என்ன சார்?’ ஒரு ஆர்வம் விரும்பி கேட்டார்.

‘ரொம்ப நேரம் அங்க உட்கார்ந்திக்கிட்டு இருந்தாங்க. என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்கன்னு கேட்டா ஃப்ரண்ட்ஸாம். அந்தப் பெண் கழுத்தில தாலி கிடக்கிது. வேலைக்கு வந்தா வேலை முடிஞ்சதும் வீட்டுக்குப் போகாம இங்க என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது. இது என்ன பார்க்கா? வந்து கூத்தடிக்கிறதுக்கு’ என்றார் சிரித்துக் கொண்டே.

(ஒருவேளை அன்னைக்குத்தான் அந்த போலீஸ்காரர் நிம்மதியா தூங்கியிருப்பாரோ... எனக்கு விதி படம் ஞாபகத்துக்கு வந்தது... வேறொண்ணும் இல்லீங்க.)

அப்புறம்..படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். எனது மற்றொரு வலைத்தளமான தகவர்மலர் பார்த்தீங்களா?

Thursday, 20 August, 2009

புதுசோ புதுசு!

வலையுலக தோழர்களுக்கு வணக்கம்.

இதுவரை ‘இலக்கியா’, ‘கவிதைகுரல்’ மூலம் உங்களை சந்தித்து வந்த இந்த குடந்தை அன்புமணி இப்போது ‘தகவல்மலர்’ என்ற புதிய வலைப்பக்கம் மூலமும் சந்திக்கவிருக்கிறேன். இந்த வலைப்பக்கத்திற்கான அவசியம் என்ன? அங்கு வாருங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

Tuesday, 18 August, 2009

இது பைத்தியக்காரனின் பதிவுக்கு எதிர்பதிவு அல்ல...

முன் குறிப்பு- இந்த இடுகை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.
பல பிளாக்கர்கள் ஒன்றுகூடி கடந்த 2007-ஆம் ஆண்டு ‘வலைப்பதிவர் பட்டறை’ நடத்தினார்கள். அந்த வலைப்பதிவு பட்டறை மூலம்தான் நான் வலையுலகிற்கு அறிமுகமானேன். பல பதிவர்கள் இணைந்து நடத்திய அந்த பட்டறைக்கு யாரிடமும் பணம் கேட்கவில்லை. அவர்களே ஆர்வமாக நடத்தினார்கள். அதோடு குறிப்பு புத்தகம், எழுதுபொருள், பிளாக் தொடங்குவது, பதிவிடுவது, எழுத்துருக்களை பயன்படுத்துவது, தரவிரக்குவது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய குறுவட்டுடன் (சி.டி) கூடிய கிழக்கு பதிப்பகத்தின் சிறு கையேடும் அடங்கிய பை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.அதோடு காலை, மாலை தேநீர் மற்றும் மதிய சைவ சாப்பாடும் வழங்கப்பட்டது.

அதேபோல் தங்களையும் செய்யச் சொல்லவில்லை. ஆனால் சிறுகதைப் பட்டறைக்கு தாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ 400 என்பது அதிகமாகவே படுகிறது.
சிறுகதைப் பயிற்சி பட்டறைப் பற்றிய பதிவுக்கு இங்கு க்ளிக்கவும்.

எம்.எம்.அப்துல்லா said...
//ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //

is it enough anna?? என்ற கேள்விக்கு

யுவகிருஷ்ணா said...
//is it enough anna??//

ஹலோ! துவரம்பருப்பு கிலோ நூறு ரூபாய்க்கு விற்குது :-( - என்று பதிலளித்துள்ளார்.

முரளிகண்ணன் said...
சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

400 போதுமா என சந்தேகமாகவே இருக்கிறதண்ணா. என்கிறார்

புருனோ Bruno said...
////ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //

is it enough anna??//

கண்டிப்பாக போதாது ..... அரங்க வாடகை + உணவு ஒரு நபருக்கு அதற்கு மேல் வரும் என்று நினைக்கிறேன். இது தவிர கோப்பு, தாள்கள் போன்ற செலவுகள் இருக்கின்றன

சிவராமன் சார்

இதில் சமரசம் செய்து கொள்ள அவசியம் இல்லை

உங்கள் கைக்காசை போட்டு நீங்கள் நடுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்

குறைந்த பட்சம் 600 ரூபாயாவது வைத்துக்கொள்ளுங்கள்

என் கருத்தை மற்றவர்களும் வழிமொழிவார்கள் என்றே நினைக்கிறேன்.

பிளாக் நடத்துவது இலவசம் என்பதால்தான் இன்று இத்தனை பேர் பிளாக் நடத்துகிறார்கள். இதுவே நாளை கட்டணம் என்றால் முக்கால்வாசி பேர் காணாமல் போய்விடுவார்கள். பிளாக் நடத்துபவர்கள் அனைவரும் பெரிய வேலைவாய்ப்பில் உள்ளவர்கள், பெரிய சம்பளம் பெறுபவர்கள் இல்லையென்பது மறுக்கமுடியாத உண்மை. இதே கருத்தைத்தான் நண்பர் பாலபாரதியும் கூறியிருக்கிறார்.


♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
என்னால் ஆன முயற்சிகளை..செய்கிறேன். எப்படியும் கலந்துகொள்ளவேண்டும் என்பதே ஆசை!

பணவிசயத்தைப் பொருத்தமட்டில் மற்றவர்கள் சொல்லுவது போல.. நான் சொல்ல மாட்டேன். அகநாழிகை ஆலோசனையின் படி ஏதாவது பள்ளிகளில் இடம் பிடித்திருந்தால்.. இதைவிட குறைவான செலவுகளியேலே பட்டறையை நிச்சயம் நடத்தலாம்.

உங்களுக்கும் பளு குறையும்.

400 ரூபாய் எனக்கு பொருட்டு அல்ல. அது கூட செலுத்தமுடியாதவர்கள் இங்கு உண்டு!( மூன்று வருடங்களுக்கு முன் நான் வலை உலகிற்குள் வந்தபோது என் மாத சம்பளமே ஐந்தாயிரம் தான்) அவர்களின் நிலை!


ஆண்மை குறையேல்.... said...
நுழைவுக் க‌ட்ட‌ண‌ம் குறைத்தால் ப‌ர‌வாயில்லை..400/‍ அதிக‌ம்...ஏசி ஹால் தேவையா? யோசிக்க‌வும்.

karpaka said...
//இந்த ரிஸார்ட்டிலுள்ள செண்ட்ரலைஸ்டு ஏஸி பொருத்தப்பட்ட கான்ஃப்ரன்ஸ் ஹாலை புக் செய்திருக்கிறோம்.//

ஏ.சி. ஹால்... இந்த மழை நேரத்தில்... தேவையா... ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பாடு செய்திருக்கலாம். செலவு குறையும்.

//காலை தேனீர் அல்லது காபி, மதியம் சைவ - அசைவ உணவுகள் (பப்பே சிஸ்டம்), மாலை தேனீர் அல்லது காபி ஆகியவற்றுக்காக கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 வசூலிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. //

அசைவ உணவுகள் தேவையில்லை. மற்றவை ஓ.கே. முடிந்தவரை தொகையினை குறைத்தால் நிறைய பேர் கலந்து கொள்ள முடியும். கூட்டத்தை குறைப்பதற்கான முயற்சியாக இந்தக் கட்டணத்தை எண்ணுகிறேன். என் எண்ணம் சரிதான் என்றால்... இந்த பட்டறை நிகழ்ச்சி பற்றிய பதிவுகளைத்தான் (என்னைப் போன்ற சம்பளம் குறைவாக பெறுவோர்கள்) படித்து தெரிந்து கொள்ள முடியும்.

தங்களின் முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மேலே உள்ள கருத்துக்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இல்லாவிடில் நிகழ்ச்சிகளின் தொகுப்பை குறுவட்டாக குறைந்த செலவில் வெளியிட முடியுமா என்றாவது பாருங்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அவ்வசதியையாவது செய்து கொடுங்கள். நன்றிக்குரியவர்களாக இருப்போம்.

Friday, 14 August, 2009

உயிர்காப்போம் தோழர்களே...சக பதிவர் நையாண்டி நைனா அவர்களின் பதிவை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. அதில் உயிருக்கு போராடும் நம் பதிவுலகைச் சேர்ந்த செந்தில்நாதன் பற்றி எழுதியதைப் படித்ததும் மனம் கலங்கிப் போனேன். அவருக்கு நம்மால் ஆனதை அது சிறு தொகையாக இருந்தாலும் செலுத்தி அவர் உயிரை காப்பாற்ற உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுதுளி பெருவெள்ளம். தங்களால் முடிந்ததை அது நூறு ரூபாயானாலும் சரி, அதை உடனே செய்யுங்க்ள் தோழர்களே...

நையாண்டி நைனா அவர்களின் பதிவில் இருந்ததை அப்படியே கீழே உங்கள் பார்வைக்காக கொடுத்திருக்கிறேன்...

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்

எனது செல்பேசி எண்: +966 508296293
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261


சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.

Sunday, 9 August, 2009

இயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த சந்திப்பு.

மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ‘ஓ பக்கங்கள்’ ஞானி அவர்களின் வீட்டுக் கிணற்றடியில் எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களின் எழுத்து அனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த மாத நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தவர் ‘கேமராக் கவிஞர்’ என்று போற்றப்படும் இயக்குனர் பாலுமகேந்திரா.


படைப்புகள் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டார். பலரும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக, காலத்தை பதிவு செய்வதாக, உருவமும் உள்ளடக்கமும் கொண்டதாக, செய்தியை (மெஸேஜ்) கொண்டிருப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். வரவேற்ற பாலுமகேந்திரா அவர்கள் உருவமும் உள்ளடக்கமும் முக்கியம் என்றார். அது பற்றி விளக்கவும் செய்தார்.


பாட்டி வடை சுட்ட கதையை ஒராயிரம் வருடங்களாக சொல்லி வருகிறோம். இன்னும் ஒரு கோடி ஆண்டுகளாயினும் சொல்லுவோம். ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்றார்.


எல்லாச் சிறுகதைகளுக்கும் முடிவுகளை நாமே சொல்லிவிட முடியாது. சில கதைகளின் முடிவுகளை வாசகனின் பார்வைக்கே விட்டுவிட வேண்டியதிருக்கும் என்றார். நெருங்கிய நண்பனின் தாய் இறந்துவிடுகிறாள். அந்த நண்பனின் தாயின் கையால் இவனும் பலமுறை சாப்பிட்டிருக்கிறான். அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டிற்கு செல்கிறான். அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.


ஒரு சிறுகதையை குறும்படமாக எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி கூறினார். உதாரணத்திற்கு பாட்டி வடை சுட்ட கதை எடுத்துக் கொண்டு விளக்கினார். ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். இதில் ஒரு ஊர் அடங்கியிருக்கிறது. அந்த ஊர் எப்படிப்பட்டது. கிராமமா, நகரமா, மலைப்பிரதேசமா என்பது போன்றவை கவனிக்க வேண்டும். பாட்டி- பாட்டி என்றால் எந்த மாதிரி பாட்டி? சுமங்கலியான பாட்டியா? விதவைப் பாட்டியா? காதில் பாம்படம் மாட்டியிருக்கும் பாட்டியா? போன்றவை இதுபோல் கவனிக்க வேண்டும் என்றார்.இந்த மூன்று வார்த்தைகளிலேயே இவ்வளவு கவனிக்க வேண்டியிருப்பதென்றால் முழுக்கதைக்கும் எவ்வளவு மெனக்ககெட வேண்டியிருக்கும் என்பதை விளக்கினார்.


தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளைஞர்களிடம் கடைசியாக படித்த நாவல் என்ன? சிறுகதை என்ன? என்று கேள்வி கேட்பதாகவும், அவர்கள் படிக்கவில்லையென்றால் படிக்க சொல்வதாகவும் அதன்பிறகே அவர்களுக்கு திறமை இருந்தால் சேர்த்துக் கொள்வதாகவும் கூறினார். தனது உதவி இயக்குனர்களிடமும் தினசரி ஒரு கதையை படித்து அதை அவர்கள் எப்படி சீன் பிரிக்கிறார்கள், குறிப்பு எடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


பதேர் பாஞ்சாலி நாவலைப் படித்த பிறகே அதை படமாக பார்த்ததாகவும், நாவலைவிட சத்யஜித்ரே படமாக்கியிருந்த விதம் அருமையாக இருந்ததாகவும் தெரிவித்தார். பிரபல தொலைக்காட்சி அவரிடம் 52 வாரங்களுக்கு தொடர் எடுத்து தரும்படி கூறியபோது தான் படித்து மகிழ்ந்த சிறுகதைகளை தொடராக எடுத்ததாக தெரிவித்தார். அப்படி எடுக்கப்பட்ட எழுத்தாளர் ‘மாலன்’ அவர்களின் சிறுகதையை (ஞானி அருமையாக வாசித்தார்.) வாசிக்கச் செய்து, அந்த சிறுகதையை தான் படமாக மாற்றிய போது தான் செய்த மாற்றங்களை கண்டுணர செய்தார். (நிகழ்ச்சி முடிவில் அந்தப் படம் திரையிடப்பட்டது.)


எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் ‘பிரசாதம்’ கதையை படமாக மாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாக பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலாக கூறினார். யுவசந்திர சேகரன், மாலன் கதைகளை படிக்க தான் பரிந்துரைப்பதாக ஒரு கேள்விக்கு தெரிவித்தார். இதனால் ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளை தான் மதிக்கவில்லை என்று பொருளல்ல என்றும் கூறினார்.


மூன்றாம்பிறை படம் பார்த்த பலர் இப்படி படம் எடுப்பது சுலபம். கமர்ஷியலாக உங்களால் படம் எடுத்து வெற்றிபெற முடியுமா என்று (நீங்கள்) கேட்டதற்காகவே அந்தப் படத்தின் பெயரையும்) ‘நீங்கள் கேட்டைவை’ என்று வைத்ததாகவும் சொல்லி கலகலப்பூட்டினார்.


இந்நிகழ்வில் நமது பதிவர்கள் லக்கிலுக், பைத்தியக்காரன், அக்னி, அதிஷா,ஆ.முத்துராமலிங்கமும், பொன்.வாசுதேவன், முத்துவேல் ஆகியோரும் வந்திருந்தனர்.


பின்பு முத்துராமலிங்கம் சொன்னார்- தமயந்தி மற்றும் உமாஷக்தி அவர்களும் வந்திருந்ததாக...

இந்த இடுகையில் இன்னும் சில விடயங்கள் விடுபட்டிருக்கலாம். வந்திருந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அல்லது இடுகைகளாகவும் போடலாம்.

Friday, 7 August, 2009

சொல்லத்தான் நினைக்கிறேன்...* செல்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் என்பது போய் தொல்லை தரும் சாதனமாக மாற்றிவிட்டார்கள். முதலில் பேசுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்ததை பாடல் கேட்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் இப்போது வீடியோ வரை வந்தாகிவிட்டது. இனிமேல் திரைப்படங்கள்கூட தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்த எண்ணை அழுத்தினால் இந்த திரைப்படங்கள் கிடைக்கும் என்ற காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போலும்.

தாம்பரம் சானடோரியத்தில் ஏறி பூங்கா நிறுத்தம் வரை பயணம் தினசரி ரயில் பயணத்தை மேற்கொள்பவன் நான். இதற்குள் ஏகப்பட்ட நிறுத்தங்கள் இருக்கின்றன. ஒரு சிலர் காதில் (ஹியர் போன்) மாட்டிக் கொண்டு பாடல் கேட்கிறார்கள். ஆனால் பலர் சத்தமாக பாடலை வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு தொல்லை தருகிறோமே என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவர் நான் ஒரு ராசியில்லாத ராஜா என்று பாடல் போட அடுத்தவர் டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலை ஒளிபரப்ப... அந்த நிகழ்வை மனதிற்குள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நீண்ட பயணத்தின்போதுதான் பெரும்பாலும் எனக்கு கவிதைகள் பிறக்கும். அதற்கு இந்த ரயில் பயணம் பெரும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது... இதை அவர்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்...


பிரபல பாடகர் யேசுதாஸ் அவர்கள் பற்றி ‘சங்கீத சாகரம் யேசுதாஸ்’ என்ற தலைப்பில் மணிமேகலை பிரசுரத்தார் நூல் வெளியீட்டு விழா நாரதகான சபாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்விழாவில் யேசுதாஸ் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர்- இயக்குனர் பார்த்திபன், நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்கள். (இது நடந்தது 1993 அல்லது 94 என்று நினைக்கிறேன்.) நானும் நண்பர்களும் கலந்து கொண்டோம்.

விழா ஆரம்பித்து சிறிது நேரத்தில் நடிகை கஸ்தூரி வந்தார். மேடையில் அமர்ந்தவர் பார்வையாயளர்களை நோக்கி பார்த்தார். அப்போது எங்கள் பக்கம் பார்வையை ஓட்டியவர் புன்னகைத்தார். பின்பு கையை ஆட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உடனே என் நண்பர்கள் ‘என்னைப் பார்த்துதான்’ இல்லை என்னைப் பார்த்துதான்’ என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள். இப்படியே ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டிருந்தோம்.


திடீரென ஒரு பரபரப்பு...
கஸ்தூரி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டுமென்பதால் கிளம்புவதாக சொல்லி கிளம்பினார். மேடையைவிட்டு இறங்கியவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசையை நோக்கி வேகமாக சிரித்துக் கொண்டு வந்தார். வந்தவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் இருந்த ஒரு ஜோடியை பார்த்து எப்படியிருக்கீங்க...(அவர்கள்... சென்னை தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் கணவன்- மனைவி ஜோடி) பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் இன்னும் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்...

Tuesday, 28 July, 2009

உங்களுக்காக... (28.07.2009)

டித்தள்ளுபடி தரும் திட்டம் வந்ததெப்படி?

ஆடிமாதம் வந்தால் போதும் வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். மக்களும் பொருட்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். தள்ளுபடி வழங்க ஆடி மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
இதற்கு முக்கிய காரணம் விவசாயிகள்தான். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்பதறிவோம். அப்போதெல்லாம் பிரதான தொழிலே விவசாயம்தான். விவசாயிகள் ஆடி மாதம்தான் தங்கள் நிலங்களில் விவசாயத் தொழிலை ஆரம்பிப்பார்கள். தங்களின் கையிருப்பைக் கொண்டு விதைகள், உரங்கள் வாங்கவும், தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கவென செலவிடுவார்கள். தை மாதம்தான் அறுவடை செய்வார்கள். அப்போதுதான் அவர்களிடம் மீண்டும் பணப்புழக்கம் இருக்கும். ஆடி - தை மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக்கும். அந்த மந்த நிலையைக் களைந்து பொதுமக்களை ஈர்த்து வியாபாரம் செய்யவே இந்த ஆடித்தள்ளுபடி திட்டம்' வந்தது எனலாம்.


ழைப்பவர்களுக்குத்தான் எப்போதும் பெருமை என்பதை சிறுவர்களிடமும் பாடல்களின் வழியாக புகுத்திய பழைய பாட்டு ஒன்று. (நீங்களும் பாடியிருப்பீர்கள் தானே?)

மழ வருது
மழ வருது
நெல் அள்ளுங்க.

முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

ஏர் உழர மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மாக்கிடக்கிற
மாமனுக்கு சூடு வையுங்க.


ஞ்ச ஒழிப்புத்துறை சுறுசுறுப்பா ஆயிட்டாங்களா? இல்லை மக்களிடம் விழிப்புணர்வு வந்துடிச்சான்னு தெரியலைங்க. சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது. இதைப்படிக்கும் போது உங்களுக்கும் இவரையெல்லாம் பிடிக்காம இருக்கிறாங்களேன்னு யாரையாவது பார்த்து நெனைச்சிருக்கீங்களா? இன்னும் ஏன் மனசுக்குள்ளே நெனைக்கிறீங்க... செயல்படுத்திட வேண்டியதுதானே. எப்படி தெரியப்படுத்துறது? நம்மள அடையாளம் வைச்சிக்கிட்டு பின்னாடி பழிவாங்குவாங்களேன்னு பயம் இருக்கா? அப்ப ஒன்ணு செய்யுங்க...

இந்த எண்ணுக்கு போன் (பொது தொலைபேசியிலிருந்துதான் போன் பண்ணுங்களேன்...)

தொலைபேசி எண் - 044- 2825 5899

செல் - 94440 49224

மெயிலும் அனுப்பலாங்க... Spl acchn @ cbi.gov.in


ப்புறம் பெண்களை கிண்டல் செய்யறவங்களைப் பற்றி புகார் சொல்ல, சாலை விபத்து பற்றிய தகவல் சொல்ல விரும்புறீங்களா அதுக்கு ஒரு ஒரு செல் பேசி எண் இருக்குங்க...

செல் - 95000 99100 இந்த எண்ணுக்கு எஸ்.எம். எஸ். பண்ணினா போதும் உடனடி நடவடிக்கைன்னு சொல்றாங்க.


சைட்டாலஜி என்றால் என்ன தெரியுமா?

மனதை அரிக்கும் பெண்களைப் பற்றியது இல்லைங்க...
மண்ணை அரிக்கும் செல்/ கரையான் பற்றி படிக்கும் படிப்புக்குத்தான் இப்படி சொல்றாங்கோ...


ப்புறம் படிச்சிட்டீங்களா கருத்துக்களை மறக்காம பின்னூட்டமா தெரிவிச்சிட மறக்காதீங்க.

தமிழிஷ்-ல் இந்த இடுகை.

Friday, 24 July, 2009

பிரபல / புதிய பதிவர்களே...

வலையுலகில் இடப்படும் இடுகைகளை நீங்கள் எவ்விதம் தேர்ந்தெடுத்து படிப்பீர்கள்?

1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.
2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை மட்டும் படிப்பேன்.
3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
4.தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.
5.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை மட்டும்தான் படிப்பேன்.
6.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்.
7.பிரபல பதிவர்களின் இடுகைகளை மட்டும்தான் படிப்பேன்.
8.பெண் பதிவர்களின் இடுகைகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
9.இலக்கியம், கவிதை படைப்புகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.
அல்லது... (உங்கள் சாய்ஸ் என்ன...?)

தயவு செய்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இதில் அரசியல், உள்குத்து ஏதும் இல்லை.

Tuesday, 21 July, 2009

சுவாரசிய பதிவர் விருது!


ந்த வாரம் முழுவதும் தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார் செந்தழல் ரவி. சுவாரசிய பதிவர் விருதை பதிவர் செந்தழல் ரவி அவர்கள் தொடக்கி வைத்து இன்று பெரும்பாலான பதிவுகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த தொடர் சங்கிலி விருது தோழர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள் மூலம் எனக்கு கிடைக்கப் பெற்றேன். அவருக்கு வாழ்த்துகளை இதன் மூலமும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விதிமுறைகளின்படி நானும் ஆறு சுவாரசிய பதிவர்களுக்கு தரவேண்டும். அதன்படி-

1. அடர்கருப்பு - காமராஜ்
2. குழந்தை ஓவியம் - ஆதவா
3.வேலன்
4. சண்டைக்கோழி (எ) பொன்னாத்தா - நிலாவும் அம்மாவும்
5. ரசனைக்காரி - ராஜி
6.வலைமனை - சுகுமார்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியம் தருபவர்கள்.
விதிமுறைப்படி விருதுபெற்ற நீங்களும் ஆறு பேருக்கு கொடுத்துவிடுங்கள்.

Sunday, 19 July, 2009

அம்மா


பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியும் குழந்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது.

அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள்... சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள்... பார்க்க பார்க்க ஆசையாகத்தான் இருந்தது.

மனைவிக்கு பிரவசவலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். அப்போதே போன் செய்து எனக்கும் சொல்லிவிட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றால், அங்கு டாக்டர்கள் இது பொய் வலி. வீட்டிற்கு அழைத்துப் போங்கள் நன்கு வலி எடுத்தால் வந்தால் போதும் என்க, என் மனைவிக்கு பயம். முதல் பிரசவம் அல்லவா. 'இல்லை நான் இங்கேயே இருக்கேன்' என்றாள். அவள் பயப்படுவதைப் பார்த்ததும் அனைவரும் சரி என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்தே குழந்தை பிறந்தது. அதனால் விடுப்பு நாட்கள் எடுத்ததையும் தாண்டி இருக்கும்படி ஆகிவிட்டது. குழந்தை பிறந்த மறுநாள் சொல்லிக் கொண்டு உடனே வேலைக்கு வந்துவிட்டேன்.

குழந்தை ஆசை தீர கொஞ்சிக் கொண்டிருந்தேன். அப்போது சிறுநீர் கழிக்க, 'அய்யய்ய' என்றவாறு மனைவியை கூப்பிட்டேன். மனைவி வேகமாக வந்து, 'என்ன உச்சா போய்ட்டான். அவ்வளவுதானே? இதுக்கு போய் என்ன முகத்தை சுழிக்கிறீங்க என்னமோ 'கக்கா' போன மாதிரி?' என்றாள்.

நான் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன். பிரவசத்துக்குப் பிறகு இவளே ரொம்ப மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன்.

குழந்தைக்கு துணி மாற்றிவிட்டு அவள் சென்ற சிறிது நேரத்தில் அவள் சொன்ன மாதிரி கக்கா போய்விட்டான். 'சுந்தரி நீ சொன்ன மாதிரி கக்காய் போய்ட்டான்' என்றேன்.
திரும்பவும் வந்து துணி மாற்றிச் சென்றாள். மணியாகிவிட்டதை உணர்ந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன்.

வேலை முடிந்ததும் எப்போதும் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு தாமதமாக வீடுவரும் நான், இன்று குழந்தையை கொஞ்சுவதற்காகவே அவசர அவசரமாக வந்து சேர்ந்தேன். மனைவி என்னை வித்தியாசமாக பார்த்தாள்.

ரவெல்லாம் குழந்தை அழுதபடியே இருந்தது.'என்னடி குழந்தை தூங்காம அழுதுகிட்டே இருக்கு' என்றேன்.

'இராத்திரியில பிறந்த குழந்தைங்க அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும். நீங்க வேணும்னா ஹால்ல போய் தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்.' என்றாள்.

இது எனக்கு புது தகவலாக இருந்தது. வேலைக்கு செல்லவேண்டுமே என்பதால் ஹாலில் வந்து படுத்துக் கொண்டேன். ஆனாலும் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. அப்போ அம்மாவும் இப்படித்தான் கண்முழிச்சி கஷ்டப்பட்டிருப்பாளோ? சிந்தனைகள் எங்கெங்கோ சென்றது.

'மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்து முகத்தை காண்பிச்சிட்டு போடா' -அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இந்த வாரம் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருவதுதான் முதல் வேலை என்று நினைத்துக் கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூக்கம் வந்தது.

Saturday, 18 July, 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருதுஇந்த விருதை ரங்கன் அவர்கள் ஆரம்பித்து வைத்து அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார். எனக்கு இந்த நண்பருக்கு விருததை, மௌனராகங்கள் ஜெஸ்வந்தி அவர்கள் வழங்கியிருக்கிறார்.

இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.

இந்த நண்பர்கள் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த விருதை நான் யாருக்கும் வழங்கப் போவதில்லை. இதற்காக எனக்கு வலையுலகில் நண்பர்கள் யாருமில்லையா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் எனக்கு நண்பர்களே. அதனால்தான் இந்த விருதை ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரை நான் இழக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவுக்கு ஆரம்பித்து வைத்த ரங்கன் மற்றும் எனக்கு வழங்கிய ஜெஸ்வந்தியும் மன்னிப்பார்களாக...
ரங்கன் அவர்கள் விருது பற்றிய விதிமுறைகளை மதித்து எனது வலையில் இதை அலங்கரிக்க வைத்துள்ளேன். நன்றி.

Wednesday, 15 July, 2009

அன்பு - 50!குடந்தையில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்னால் வாய்க்கால் இருந்தது. விடுமுறை தினங்களில் என் நண்பர்கள் எல்லாரும் அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். வாய்க்கால் ஓரம் இருக்கும் மூங்கில் குத்தில் சிறிய மூங்கில் குச்சியை உடைத்து அதில் இருக்கும் முள்ளை அகற்றிவிட்டு, கடையில் நரம்பு நூலும், மீன் (பிடிக்க பயன்படும்) முள்ளும் வாங்கி, தூண்டில் தயார் செய்வோம்.

பின்பு மண்புழுக்களை தேடிப் பிடித்து அதை துண்டுகளாக்கி அந்த முள்ளில் மாட்டி, அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். மீன் பிடிப்பதற்கு வசதியாக வாய்க்கால் ஓரம் இருக்கும் இலவ பஞ்சு மரத்தில் (தலையணை, மெத்தை தயாரிக்க பயன்படும் இலவபஞ்சு மரம். பருத்திச் செடிகளிலும் பஞ்சு கிடைக்கும்.) ஏறி அதன் கிளையில் அமர்ந்து கொண்டு மீன் பிடிப்போம்.

அப்படித்தான் அன்றும் மீனுக்காக தூண்டிலை வீசி காத்திருந்தோம். தூண்டிலின் தக்கை துடிக்கவும் வேகமாக இழுத்தோம். அந்த தூண்டிலில் மாட்டியிருந்தது, மீனல்ல பாம்பு. அலறியடித்துக் கொண்டு தூண்டிலை வீசியெறிந்துவிட்டு ஓடி வந்துவிட்டோம். அன்றிலிருந்து மீன் பிடிப்பதையே விட்டுவிட்டோம்.

பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது.

னக்கு திருமணம் முடிந்த மறுநாள் காலை சிற்றுண்டி சாப்பிட நானும், எனது அண்ணன் மற்றும் மைத்துனர்களுடன் அமர்ந்தேன். அனைவருக்கும் இலையில் இட்டலி(வி)யை வைத்தார்கள். நாங்கள் சாப்பிட அமர்ந்திருக்கும் அறைக்கு எதிரில் என் அத்தைப் பெண்கள் (மூத்தவர்களும், இளையவர்களும்) நின்று கொண்டு எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நம்மைப்பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டு என்னை நானே பார்த்துக் கொண்டேன். எல்லாம் சரியாத்தானே இருக்கு? பின் ஏன் சிரிக்கிறார்கள்?

இரண்டு இட்டலி சாப்பிட்டிருப்பேன். என் மனைவி உள்ளிருந்து, அந்த இட்டலி என்று குரல் கொடுப்பதற்குள் அவரின் வாயைப் பொத்தி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்த நேரம் என் அப்பா அங்கு வர அனைவரும் அங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டார்கள். அப்போது வேகமாக வந்த என் அண்ணி என் இலையிலிருந்த இரண்டு இட்டலிகளை எடுத்துக் கொண்டு வேறு இட்டலி வைத்தார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் சிரித்ததற்கும், அண்ணி இப்பொழுது இரண்டு இட்டலிகளை எடுத்துச் செல்வதற்கும் என்ன காரணம் என்று குழப்பத்துடன் எழுந்து போனேன். பிறகு என் மனைவி வந்து கூறியதுதான் விடயமே புரிந்தது. அந்த இரண்டு இட்டலியில் ஒன்றின் உள்ளே புளியங் கொட்டையை வைத்திருக்கிறார்கள். மற்றொன்றின் மீது தூள் உப்பை தூவியிருக்கிறார்கள் என்று.

கல்யாண மாப்பிள்ளைகளாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்ங்கிறதுக்காக இதைச் சொல்றேன். (இல்லைன்னா இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.... கல்யாண மாப்பிள்ளைகளை இப்படியெல்லாம் கலாட்டா செய்யவும் வழியிருக்கு...)


அதுசரி.... தலைப்பு எதற்கு அன்பு-50! இது என் 50-வது இடுகை. அதுதான் வேறொன்றுமில்லை.

நன்றி - யூத்புல் விகடன் குட் பிளாக்ஸ்-ல் இந்த இடுகை...

Friday, 10 July, 2009

அவன், அவள், அது (உயிரோடை சிறுகதைப் போட்டிக்ககாக எழுதப்பட்டது)

முதலிரவு அறைக்குள் பால் சொம்புடன் நுழைந்தாள் அவள். உள்ளே நுழையும் போதே பார்த்தாள். அவன் கட்டிலுக்கு அப்பால் ஜன்னலோரத்தில் நின்று கொண்டு சிகெரட் பிடித்துக் கொண்டிருப்பதை. இவள் நுழைந்ததைக்கூட அவன் பொருட்படுத்த வில்லை. திருமணத்தின் போதுகூட அவன் முகம் உம்மென்று இருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
அப்போதே அவளுக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது. நாம் அடியெடுத்து வைக்கும் இடம் எப்படி இருக்குமோ என்று. அம்மா, அப்பாவை சின்ன வயதிலேயே இழந்தவள். அண்ணனின் தயவில் அண்ணியின் திட்டுக்களில் வளர்ந்தவள். இப்போது மாப்பிள்ளை பற்றி சொன்னால் போதும் அண்ணி சாமியாடிவிடுவாள் என்பதால் என்ன இருந்தாலும் பேசி சரி பண்ணிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில்தான் கழுத்தை நீட்டினாள்.

"பால் சாப்பிடுறீங்களா?"

சிகெரட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு அவளருகில் வந்தான். "இதோ பாரு... நீ என்னன்வோ கற்பனைப் பண்ணிக்கிட்டு இங்க வந்திருப்பே.... இங்க அப்படி எதுவும் நடக்காது. நான் ஒரு பெண்ணை தீவிரமா காதலிச்சேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதாகவும் இருந்தேன். ஆனா, நடக்கல. என் வாழ்க்கையில அவளுக்கு மட்டும்தான் இடம். உன்மேல காதல் இல்லாம, விருப்பம் இல்லாம உன்கிட்ட உறவு வைச்சிக்க முடியாது. நான் காமந்தரன் இல்ல. வாழ்க்கையை அனுபவிக்கணும்னா காதலிக்கணும். காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்யணும். அந்த அனுபவமே வேற. அவ கிடைக்கலைங்கிறதுக்காக உன்னைக் காதலிக்கவும் முடியாது. என் நிலைமையை புரிஞ்சிக்க."

படபடவென்று பேசி முடித்தவனை பார்த்து திக்கித்து நின்றாள். இது பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய விசயமல்ல. இவனிடம் அதிகப்படியான அன்பு செலுத்தித்தான் மாற்றணும் என்று புரிந்து கொண்டாள். மாற்ற முடியுமா என்று மலைப்பும் வந்தது.
கட்டிலில் கிடந்த தலையணையில் ஒன்றை எடுத்துக் கொண்டு கீழே பெட்ஷீட்டை விரித்து படுத்துக் கொண்டாள்.

அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும், பதிலும் இல்லாததைக் கண்டு அவனுக்கே ஒருமாதிரியாகத்தான் இருந்தது. எவ்வளவு அதிர்ச்சியான தகவலைச் சொல்லியிருக்கிறேன், ஒருவித ரியாக்சனும் இன்றி இருக்கிறாளே...


பொழுது விடிந்தது. முதலிரவில் நடந்ததை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாள். அவராக சொன்னாலன்றி எதுவும் கேட்கக்கூடாது என்று மனஉறுதியுடன் இருந்தாள். அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று மாமியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

திருமண விடுப்பு முடிந்து அலுவலகத்திற்கு சென்றான். மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றாள். முதலில் உன்னை இங்கல்லாம் யாரு வரச்சொன்னது என்று அவன் கத்தினான். அத்தைதான் கொடுத்தனுப்பிச்சாங்க என்றதும்தான் அடங்கினான். அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு வியப்பை அளித்தாலும் அவனால் காதலியை மறக்க முடியாமல் தவித்தான். அந்த தவிப்பு இவளிடம் வெறுப்பாக உமிழ்ந்தது. மாதங்கள் உருண்டோடியது. அவனை மட்டும் அசைக்கவே முடியவில்லை. மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த சமயத்தில்தான் குமார் அறிமுகமானான். அந்த அலுவலகத்திலேதான் வேலை பார்க்கிறான். முதலில் மெல்லிய புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பற்றிக் கொண்டது. ஒரு நாள் அவர்கள் இருவரும் காணாமல் போனார்கள்.

முதலில் அவனால் இதை நம்பமுடியவில்லை. விரக்தியில் பாருக்கு சென்று தண்ணியடிக்க ஆரம்பித்தான். அவனுக்குள் கேள்விகள் பல மண்டையைக் குடைய ஆரம்பித்தது. எவ்வளவுதான் விலக்கிப் போனாலும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டவள் எப்படி ஓடிப் போனாள்? அப்படி என்ன உடல் சுகம் வேண்டிக்கிடக்கிறது? மண்ணரிக்கப் போகும் இந்த சரீரத்திற்கு இத்தனை வீரியமா? இந்த உலகில் காதலைவிட காமம்தான் பெரிதா? போதை ஏற ஏற அதையும் அனுபவித்து பார்த்துவிடுவது என்று நினைத்தான். ரூம்பாயை கூப்பிட்டு விசயத்தைச் சொன்னான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு அழகான பெண் வந்தாள். அவளை நெருங்க எழுந்தவன் போதையில் தள்ளாடி விழுந்தான். அவள் பதறிப் போய் அவனைப் பிடித்து மெல்ல கட்டிலில் அமர்த்தினாள். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வாந்தியெடுத்தான். சட்டென அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு பாத்ரூமிற்கு அழைத்துப் போனாள். கொஞ்சம் நிலைமை சரியாகியதும், முகமெல்லாம் துடைத்துவிட்டு சோபாவில் அவனை அமரவைத்துவிட்டு தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவன் நெஞ்சை நீவிவிட்டாள்.

காசுக்காக உடலை விற்கும் அவள் செய்யும் பணிவிடைகளைப் பார்த்தான். அவனுக்கு அவன் மனைவியின் ஞாபகம் வந்தது. காமம் தாண்டிய அன்பு புரிந்தது. அந்த அன்பில் கிறங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் இப்போது காதலியின் நினைவு சுத்தமாக அழிந்து போயிருந்தது.

Thursday, 9 July, 2009

திருமணம்

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...ப்போதெல்லாம் எண்ணெய் பதார்த்தங்களை விலக்கிவிடுகிறேன். மசாலா ஐயிட்டங்களையும்தான். கோழிக்கறி சூடு என்றார்கள் அதனால் அதையும் தள்ளி வைத்தாகிவிட்டது. காய்கறிகளில் கேரட் தவறாமல் இடம்பெறுவது போல் பார்த்துக் கொள்கிறேன். கேரட் கண்களுக்கும் நல்லதாமே! இல்லையென்றால் கண்ணாடி போடுவது போலாகிவிட்டால் அழகே போய்விடும். அதோடு கிண்டல் வேறு செய்வார்கள்.

உடையலங்காரத்திலும் முன்பைவிட அதிகம் கவனம் செலுத்துகிறேன். அடிக்கடி முகம் கழுவுதலும் நடக்கிறது. முகப்பரு வராமல் பார்த்துக் கொள்வதும் பரு வந்தால் கிள்ளாமல் அதைப் போக்கவும் செய்கிறேன். கிள்ளினால் சீழ் பிடித்து வடுவாக மாறிவிடும் என்று டீ.வியில் டாக்டர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் அப்படியே படிந்துவிட்டது. முகம் அழகாயிருப்பது முக்கியமல்லவா. அழகுக்குத்தான் இந்த உலகத்தில் முக்கியத்துவம். குணம் இரண்டாம் பட்சம்தானே.

எனக்கு தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். பார்ப்பவர்கள் அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள், 'இந்த தலைமுடிதான் உனக்கு அழகு' என்று. இப்போது ஆங்காங்கே ஒன்றிரண்டு வெள்ளை முடி தென்படுகிறது. இருக்காதா பின்னே வயது முப்பதை நெருங்கிவிட்டதே...

இப்போதெல்லாம் என் குடும்பத்தினருக்குகூட என்னைப் பிடிக்கவேயில்லை. அதுபற்றிகூட நான் கவலைப்படவில்லை. பாசமாக இருந்த என் தம்பி, 'இவளுக்கு எப்ப கல்யாணம் ஆகிறது நான் எப்ப கல்யாணம் செய்துக்கிறது. என்கூட படிச்ச பசங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தைங்க கூட இருக்கு' என்று அலுத்துக் கொள்கிறான். அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.

Tuesday, 7 July, 2009

குட்டிச் சுவர்

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...

ப்போதும் ஊருக்குப் போனாலும் சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து நலம் விசாரிக்கிறேனோ இல்லையோ சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை ஒரு ரவுண்ட் வந்தால்தான் ஒரு திருப்தி கிடைக்கிறது. கடைசியாக அந்தக் குட்டிச் சுவர்மீது கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருவதுதான் என்னுடைய வ(ப)ழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தக் குட்டிச் சுவருக்கு ஒரு வரலாறே உண்டு.

என் நண்பர்கள் அனைவரும் வழக்கமாக சந்திக்கும் இடம் அந்த குட்டிச்சுவர்தான். பேருந்து நிலையம் அருகில் அமைந்திருந்ததால்தான் அந்தக் குட்டிச் சுவர் எங்களால் தத்தெடுக்கப்பட்டது. வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் ('ஜொள்'விட்டுக்) கொண்டு அமர்ந்திருப்போம்.

அது மட்டுமல்ல... என் நண்பர்களின் சோக கதைகள் சந்தோஷங்கள் எல்லாம் பரிமாறிக் கொள்வதும் அங்கேதான். பேருந்து நிலையம் அருகே அப்படி ஒரு இடம் அமைவதே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்தை வாங்க பிரபல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பாகப் பிரிவினை தகராறில் வழக்கு கோர்ட்டில் இருந்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது.

படிப்பு முடிந்து ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு ஊராக வேலைக்கு கிளம்பிவிட்டோம். இப்போதெல்லாம் போனில்தான் தொடர்பு. என்ன இருந்தாலும் முகம் பார்த்து பேசுவது போல் வருமா? இப்போது அந்தக் குட்டிச் சுவர் அனாதையாக நிற்கிறது. எப்போதும் ஊருக்கு வந்தாலும்... (முதல் பாராவை திரும்பவும் படித்துக் கொள்ளவும்.)

வருடங்கள் பல கழித்து இப்போது சொந்த ஊருக்கு சென்றபோதும் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டு அந்தக் குட்டிச் சுவர் இருக்கும் இடத்திற்கு சென்றபோது, அங்கே மிகப் பெரிய வணிக வளாகம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்த வளாகத்திற்குள்ளே ஆண், பெண் நண்பர்கள் பலர் அரட்டை அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...(இந்தப் படத்துக்குரிய செய்தி இங்கு இல்லை)

"என்ன ராமசாமி வீட்டு பக்கமே காணுமேன்னு பார்த்தா தங்கம் சீரியல் பார்த்திக்கிட்டு உட்கார்ந்திருக்கியா?"

"புதுசா ஆரம்பிச்சிருக்காங்களே. எப்படி இருக்குன்னு பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரிதான் போகுது."

"அரசியல் கட்சிகளும் அவங்க போடுற பட்ஜெட்டும்கூட ஒரேமாதிரிதான் போகுது."

"என்னப்பா பட்ஜெட் பத்தி சொல்லி பயமுறுத்துற? என்ன விசயம்?"

"மத்திய அரசின் பட்ஜெட்டில வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரிவிதிப்பு உயர்த்தி இருக்காங்கப்பா"

"அடக்கொடுமையே! ஏற்கெனவே தங்கம் பதிமூன்றாயிரத்தை தாண்டிச்சிடுச்சு. இப்படி செஞ்சா ஏழைபாளைங்க என்ன பண்றது?"

"ஏன் இந்த வரி உயர்த்தப்படுதுன்னு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு காரணத்தையும் சொல்றாரு... 2004 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் உயர்த்தப்படுதாம். இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவாங்கன்னு தெரியும். அதனால்தான் வணிகமுத்திரை (பிராண்டட்) நகைகள் உற்பத்திக்கு மீதான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறதுங்கிறாரு."

"என்ன நம்ம ஆற்காடு மின்சாரத்தைப் பத்தி பேசின மாதிரியே பேசறாரு. அது கிடக்கட்டும், அப்ப தங்க விலை குறையுமா?"

"அதுதான் இல்ல... பிராண்டட் நகைகள் உற்பத்தி செய்யிற நிறுவனங்கள் மிகவும் கம்மி. இதனால பொதுமக்களுக்கு பலன் எதுவும் இல்லைங்கிறாரு இந்திய தங்க மார்க்கெட் தலைவர் சீல்சந்த் ஜெயின். அதோட பிராண்டட் நகைகளுக்கு இப்போது 2 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படுகிறதாம். இதை ரத்து செய்வது என்பது வெறும் கண்துடைப்புதான்."

"ஏற்கெனவே வரதட்சணையால பெண்களுக்கு திருமணம் நடக்கிறதே அபூர்வமா இருக்கு. இதனால பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் சாபத்துக்கு ஆளாவார்ங்கிறது மட்டும் உறுதி."

"வரதட்சணைன்னு சொன்னோன்னதான் ஞாபகத்துக்கு வருது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில நிலம்பூர்ங்கிற கிராமத்தில வரதட்சணை கொடுமையை ஒழிக்கிறதில கிராம பஞ்சாயத்து தலைவர் சாதனை பண்ணியிருக்காரு."

"என்னப்பா சொல்றே? வரதட்சணையை ஒழிச்சிருக்காரா?"

"ஆமாம்பா. நாற்பதாயிரம் பேர் வசிக்கிற அந்த கிராமத்தில 30 வயதாகியும் திருமணம் செய்ய முடியாம 1,300 பேர் இருக்கிறதா அவருக்கு தெரிய வந்திருக்கு. அதோட வரதட்சணை கொடுத்து மகளை வாழ வைச்ச பல குடும்பங்கள் வறுமையில வாடுறதையும். வரதட்சணை கொடுக்க முடியாமததால பல பெண்கள் வாழா வெட்டியா முடங்கி கிடக்கிறதையும் அவரு பார்த்திருக்காரு."

"அதுக்கு என்ன பண்ணினாராம்?"

"வரதட்சணை கொடுமையை பத்தி விளக்கி தெருக்கூத்து, திரைப்படம்னு வீதிக்கு வீதி போட்டு காண்பிச்சிருக்காரு. அதோட பொதுமக்கள்கிட்ட வரதட்சணை வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன்னு உறுதி மொழி எழுதி வாங்கிருக்காரு."

"இன்னப்பா.... தெருக்கூத்தையும், படத்தையும் பார்த்து மக்கள் திருந்திட்டாங்களா என்ன? நம்புறமாதிரியா இருக்கு?"

"ஒருசில மாதங்களுக்கு எந்தவித பலனும் இல்லாமத்தான் இருந்திருக்கு. கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும் இல்லையாம். சுமுகமா போய்கிட்டிருக்காம்."

"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்." என்றவாறு நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

Friday, 3 July, 2009

நாட்டு நடப்பு

"வாங்க ராமசாமி. என்ன இன்னைக்கு காலையிலே வந்திட்டீங்க?'

"இன்னைக்கு சனிக்கிழமை இல்லையா வீட்டில எல்லாரும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. அதன் நானும் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன். அது சரி என்ன விசேஷம் பேப்பரைப் பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கே?'

"திருச்சி ராம்ஜி நகரில் இருக்கிற பக்கிரிங்கிற பிக்பாக்கெட் திருடன், இப்ப தொழிற் பயிற்சி நிலையம் ஆரம்பிச்சிருக்கானாம்.'

"அப்படியா? வரவேற்கக்கூடிய விஷயம்தானே? அதுக்கு எதுக்கு சிரிக்கிற? தப்பு செய்யறவங்க திருந்திடுறது இயல்புதானே?'

"என்ன தொழிற் பயிற்சி நிலையம்னு நீ கேட்கலையே?'

"நீ இப்படி சொல்றத பார்த்தா, ஏதோ வில்லங்கமா இருக்கும் போலிருக்கே!'

"ஆமாப்பா. பிக்பாக்கெட் அடிக்கிறது எப்படி, ஜனங்ககிட்ட மாட்டிக்காம தப்பிக்கிறது எப்படின்னு பயிற்சி கொடுக்கிறானாம்.'

"அடக்கொடுமையே!'

"இன்னும் கேளு. பயிற்சிக்கு கட்டணம் 500 ரூபாயாம். தங்குமிடம், சாப்பாடு கூட இலவசமாம். இதுவரைக்கும் 100 பேருக்கு பயிற்சி கொடுத்திருக்கானாம்! திருச்சியில பயிற்சி எடுத்துக்கிட்ட ஆளுங்க புதுச்சேரியில வேலையைக் காட்டும்போது பிடிபட்டவங்களாலதான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கு.'

"கலிகாலங்கிறது சரியாத்தான் இருக்கு.'

"அதே ராம்ஜி நகரில இன்னுமொரு விஷயமும் நடந்திருக்கு. குடிநீர் குழாய்ல சாராய கலந்த தண்ணீர் வந்திருக்கு!'

"என்னப்பா செல்றே?'

"ராம்ஜி நகர் கள்ளச்சாராயத்துக்கு பேர் போன ஏரியாவாம். அரசு நடவடிக்கை எடுத்து ஒழிச்சாலும் இன்னமும் சிலர் திருட்டுத்தனமா செஞ்சிகிட்டுத்தான் இருக்காங்கன்னு அந்த ஏரியா மக்கள் சொல்றாங்களாம். அந்த ஏரியாவில ரோடு போடும்போது சாராய ஊறல் தொட்டி ஒடைஞ்சி அது குடிநீர் குழாயோட கலந்துடிச்சாம். மாநகராட்சி அதிகாரிங்க விரைந்து வந்து சரி பண்ணி ஆரம்பிச்சிருக்காங்களாம். அதுவரைக்கும் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்னு அறிவிச்சிருக்காங்களாம்.'

"சாராய பார்ட்டிகளை பிடிச்சிட்டாங்களா இல்லையா?'

"அதைப் பற்றி ஏதும் போடலை. அழகிரி மதுரையை கலக்க ஆரம்பிச்சிட்டாருப்பா. 320 கோடியில தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்க இடத்தேர்வு பண்ணிக்கிட்டிருக்காங்களாம். இந்தியாவில ஐந்து இடங்கள்ல இதுபோல இருக்காம்.'

"நேற்று இரயில்வே பட்ஜெட் தாக்கல் செஞ்சாங்களே ஏதாவது சிறப்பு சலுகைகள் உண்டா?'

"புதுசா 57 ரயில் விடப்போறாங்களாம். இதுல 6 ரயில் தமிழ்நாட்டுக்கு. டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் பெண்களுக்கு சிறப்பு ரயில் விடப் போறாங்களாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைகூட உலக தரத்துக்கு மாற்றம் செய்யப் போறாங்களாம்.'

"அது சரி, கட்டண உயர்வு...?'

"எதுவுமில்லைப்பா. திருச்சி, மதுரை உட்பட 49 ரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப் போறாங்களாம். அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் 25 ரூபாய்க்கு கொடுக்கப் போறாங்களாம்.'

"பரவாயில்லையே... மம்தாவும் நல்லாத்தான் பட்ஜெட் போட்ருக்காங்கன்னு சொல்லுங்க.'

"இதையேதான் பிரதமரும் சொல்லிருக்காரு.இன்னும்கூட இருக்கு பெண் பயணிகள் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை அமைக்கப் போறாங்க. தனியாருடன் சேர்ந்து மருத்துவ கல்லூரியும் அமைக்கப் போறாங்களாம். அதோட பத்திரிகைகாரர்களுக்கு, முதியோர்களுக்கு, மாற்றுத்திறன் கொண்டவர்களுக்குன்னு சிறப்பு சலுகைகள்.இப்படி சிறப்பாத்தான் இருக்கு.'

"பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து பற்றி எதுவும் நியூஸ் இல்லையா?'

"மத்திய அமைச்சர் தன்னோட கருத்தை தான் சொல்லியிருக்கார். மாநில அரசுகிட்ட கேட்கும்போது, மூத்த கல்வியாளர்கள், நிபுணர்கள் கிட்ட கருத்து கேட்டு நடவடிக்கை எடுப்போம்னு சொல்லியிருக்கார் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.'

"சரிப்பா பசி எடுக்குது. சாப்பிட்டுட்டு வர்றேன். மீதியை அப்புறம் பேசிக்குவோம்.'

"சரி. சாயங்காலம் படத்துக்கு போவோம். நாடோடிகள் படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. மறக்காம வந்திடு.'

"சரிப்பா வர்றேன்.'

நன்றி- தினகரன்.

Friday, 26 June, 2009

பதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை!

பதிவர் நைஜீரியா ராகவன் அவர்கள் ஒன்றரை மாத விடுப்பில் சென்னைக்கு வந்திருக்கிறார். நைஜீரியாவிலிருந்து வரும் வழியில் துபாயில் கலையரசன் உட்பட பல பதிவர்களை சந்தித்து உரையாடிய நிகழ்வை வேலூரான் பதிவாக போட்டிருந்தார்.

ராகவன் அண்ணன் 'இடைவெளி' என்ற பதிவில் விடுமுறை பற்றி எழுதியிருக்கும்போதே அவருக்கு பின்னூட்டத்தில் சென்னைக்கு வந்ததும் போன் பண்ணுங்கண்ணா என்று கூறியிருந்தேன்.

அவரை ஏர்போர்ட்டிலேயே சந்திக்கத்தான் விருப்பம். ஆனால் பாருங்க லீவு கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் வழி தெரியவில்லை. அவராக தொடர்பு கொண்டால்தான் உண்டு என்ற அளவில் அவரிடமிருந்து வரும் போன்காலுக்காக காத்திருந்தேன்.

வியாழக்கிழமை வழக்கம் போல் வேலை முடிந்ததும் பஸ் ஏறி சென்ட்ரல் நிலையத்தில் இறங்க எத்தனிக்கும்போது போன் வந்தது. யாரென்று பார்த்தால் அண்ணன் ராகவன் அவர்கள்தான். சுமார் பத்து நிமிடம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் திருவல்லிக்கேணியில் இருப்பதாக சொல்ல, திருவல்லிக்கேணியில் எங்கு என்று நான் கேட்டேன். அவர் சொன்ன முகவரி எனது அலுவலகத்திலிருந்து நடைதூரம்தான் என்று சொன்னேன். எப்ப சந்திக்கலாம் என்றபோது அவரின் முகவரி கூறினார். மறுநாள் வேலை முடிந்ததும் இரவு ஏழரை மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்தேன். அன்புடன் வரவேற்றார். பிறகு அவரது குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

பிறகு அவருடன் பேசிக் கொண்டே ராகவன் அண்ணாவின் நண்பர் வைத்திருக்கும் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்தோம். வரும் வழியில் துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும், சென்னை வந்ததும் இங்கு புதுகை அப்துல்லா, அ.மு. செய்யது, தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன், ஜீவன், ரசனைக்காரி ராஜி, ரம்யா, நாமக்கல் சிபி முதலான பதிவர்களை சந்தித்தது பற்றியும் கூறினார். அந்த வாய்ப்பை தவறவிட்டனே என்று வருந்தினேன். எனது தொலைபேசி நம்பரை அதற்கு பிறகுதான் இணையத்தில் இருந்து எடுத்ததாகவும் அதனால் அழைக்க முடியவில்லை என்றார்.

பதிவர்கள் எழுதும் கவிதைகள் பற்றியும், புரியாத கவிதைகள்,மொக்கை கவுஜைகள் பற்றியும் சுவையாக பேசிக்கொண்டு வந்தோம். கும்பகோணத்திலிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் பேசிக் கொண்டே வந்ததில் அவரின் நண்பரின் அலுவலகம் வந்திருந்தது. அந்த (மணி) நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் நெடுநாள் பழகியவர்போல இனிமையாகவே பழகினார். அண்ணனின் நண்பர்கள் எல்லாரும் அவர்போல்தான் இருப்பார்கள் போலும். அங்கிருந்து அவர்கள் வெளியில் கிளம்புவதாகத் தெரிந்தது. நான் நாசுக்காக, 'கிளம்புகிறேன்' என்றேன். அண்ணனும், அவரது நண்பரும் காரிலேயே போய்விடலாம் என்று சொல்ல, எங்களின் பேச்சு காரிலும் தொடர்ந்தது. அவர்கள் இருவருக்குமுள்ள நட்பு பற்றி பேச்சு தொடர்ந்தது. என்னை டி.எம்.எஸ்ஸில் இறங்கிவிட்டனர். வரும் ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் நடேசன் பார்க்கில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என்று கூறினேன். நிச்சயம் வருகிறேன் என்றார். இனியமையான அனுபவங்களை தாங்கிய அந்த சந்திப்போடு அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

அதுசரி தலைப்பிற்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையே என்று குழப்பம் வேண்டாம்.... உண்மைத் தமிழனிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். அதற்காகவே பதிவர் சந்திப்புக்கு கட்டாயம் வருவேன் என்றார் ராகவன் அண்ணன். என்ன கேள்வி கேட்பார் என்பது சஸ்பென்ஸ். எனவே, உண்மைத்தமிழன் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...!

Monday, 22 June, 2009

நிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று ஆசையில் சதாசிவம் தனது இரண்டு தங்கைகளின் மகள்களையே தன் மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார். மூத்தவனுக்கு திருமணம் செய்த பெண் கிராமத்தில் வளர்ந்தவள். இளையவனுக்கு திருமணம் செய்த பெண் பட்டினத்தில் வளர்ந்தவள். மூத்தவன் சேகருக்கு திருமணம் முடிந்ததுமே தனிக்குடித்தனம் வைத்துவிட்டார் சதாசிவம். 'ஏன்?' என்று அம்மா கேட்டபோது, 'மூத்தவனுக்கு இன்னும் குடும்ப பொறுப்புன்னா என்னன்னு தெரியலை. தனிக்குடித்தனம் இருந்தால்தான் அவனுக்கு புரியும்.' என்றார்.
இரண்டு வருடம் கழித்து இளைய மகன் குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். குமார் படித்தது குறைவுதான் என்றாலும் குடும்பத்திலும், கஷ்ட நஷ்டங்களிலும் அப்பாவுக்கு துணையாக நின்றான். அதனால் சதாசிவத்துக்கும் அவன்மீது தனிப்பட்ட பற்று இருந்தது. அதனால் அவனை தனிக்குடித்தனம் வைக்கவில்லை.
ஆனால் திருமணம் முடிந்து இரண்டு மாதம்கூட ஆகவில்லை. பட்டினத்தில் படித்து வளர்ந்த பெண்ணான வளர்மதிக்கு இந்த கிராமத்தின் பரபரப்பே இல்லாத வாழ்க்கை பிடிக்கவில்லை. அதை மெல்ல குமாரிடம் எடுத்து சொன்னாள். எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று முதலில் சொல்லி வந்தான். ஆனால் வளர்மதி விடாப்பிடியாக இருந்ததால் குமாருக்கு கோபம் வரத்தொடங்கியது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள். அதுகூட இன்னும் முடிய வில்லையே!
திருமணத்தின் போதே குமாரிடம் அவரின் மாமா 'அண்ணன் தனிக்குடித்தனம் போய்விட்டான். நீயாவது அம்மா, அப்பாகூட கடைசி வரைக்கும் இருந்து அவங்களை நல்லபடியா வைச்சுக்கணும்.' என்றார். அதற்கு குமாரும் அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க. அப்படி ஒரு நிலமை வந்தா, பெண்ணை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பிடுவேன தவிர, நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன்.' என்றான். அதை நினைத்துப் பார்த்த குமாருக்கு நாமும் அந்த தனிக்குடித்தனம் போகக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்று நினைத்தான். அந்த வருத்தத்தில் இருந்தவனின் நிலை புரியாமல் வளர்மதி மீண்டும் அவனிடம், "நாம கோயம்புத்தூருக்குக்கு போகலாங்க. இங்க உக்காந்து விவசாயிங்க கொண்டு வர்ற மோட்டரை நம்பி லேத் பட்டறை வச்சுக்கிட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு, கோயம்புத்தூர் நல்ல இன்டஸ்ட்ரியல் ஏரியா. உங்களுக்கு நல்ல ஸ்கோப் இருக்கும். நிறையவும் சம்பாதிக்கலாம். அம்மா, அப்பாவை உங்க அண்ணன்கூட இருக்க சொல்லிடலாம் என்ன சொல்றீங்க?" என்றாள்.
இதுவரை பொறுமையாக இருந்தவன் சட்டென்று எழுந்து கன்னத்தில் பட்டென்று அறைந்துவிட்டான். உடனே அவள் கத்த ஆரம்பித்தாள். "கத்தாதே! சத்தம் அப்பாவுக்கு கேட்டிச்சு. அப்புறம் நான் சும்மாயிருக்க மாட்டேன்." என்றான். ஆனால் அவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு "ஓங்கி அறைஞ்சிட்டு அழாதேன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றவள் அழுவதை மட்டும் நிறுத்தவில்லை.
சத்தம் கேட்டு அம்மா ஓடிவந்தாள்."என்னா குமாரு? ஏன் வளர்மதி அழறா?"
"ஒன்னுமில்லம்மா! நீ போ!" என்றான்.
"அவ அழறா, நீ ஒன்னுமில்லைன்னு சொல்றே! என்னாச்சு வளர்மதி?" என்று கேட்க, அவள் சட்டென்று அறைக்குள் ஓடி கதவைத் சாத்திக் கொண்டாள்.
"என்ன குமாரு? உங்களுக்குள்ளே என்னாச்சு? அவளை அடிச்சியா?" என்றாள் அம்மா.
"ஒன்னுமில்லேன்னு சொல்றேன்ல... நீ போம்மா!" சற்று கோபமாகவே சொன்னான் குமார்.
குழப்பத்துடன் அம்மா அங்கிருந்து விலகிச் சென்று அப்பா இருக்கும் அறைக்கு செல்வதை பார்த்தான். அப்பாவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். யார் யாரைப்பற்றி குறை சொன்னாலும் உடனே கூப்பிட்டு கேட்க மாட்டார். சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்வார். அதனால் தற்போது பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அறைக்கதவைத் தட்டினான். கதவைத் திறக்காமல் வீம்பாக இருந்தாள். "வளர்... கதவைத்திறக்கிறியா... இல்லையா?" என்றான் சற்று காட்டமாக.
அந்த அதட்டலுக்குப் பிறகே கதவை மெல்ல திறந்துவிட்டுவிட்டு கட்டிலில் போய் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள். அவளருகில் போய் உட்கார்ந்தான். அவளின் தலையில் கைவைத்து தலைமுடியை கோதியவாறு, "அப்பா, அம்மாவை விட்டு நான் எங்கயும் வரமுடியாது. அவங்களை அண்ணன்கூட இருங்கன்னு என்னால சொல்லமுடியாது. படிச்ச பொண்ணு நீ. நான் சொல்றதை புரிஞ்சிக்க. அம்மா வந்து திரும்பவும் ஏதாவது கேட்டா, எதுவும் சொல்லாதே. அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. நான் வேலைக்கு கிளம்புறேன். எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்குவோம்" என்றவாறு கிளம்பிச் சென்றுவிட்டான்.

தற்குப்பிறகு இரண்டு நாட்களாக அவள் அதைப் பற்றி எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். அவள் பேசாமல் இருப்பது குமாருக்கும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அவனின் முகவாட்டத்தை சதாசிவமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் .
மூன்றாம் நாள் திடீரென்று பட்டறைக்கு போன் வந்தது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று. அலறி அடித்துக் கொண்டு ஓடினான். அம்மாவுக்கு 'லோ-பிரசர்' இருக்கிறது என்று டாக்டர் சொல்லி, மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து அனுப்பினார். வீட்டில் கொண்டு வந்துவிட்டுவிட்டு தன் அறைக்குச் சென்று சோர்வாக அமர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு அப்பா வந்தார்.
"பட்டறைக்கு போகலையா குமார்?"
"இல்லப்பா... வேலை எதுவும் தற்சமயம் இல்லை. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லாம இருக்குது... அதான்..."
"அவளைப் பற்றி நீ கவலைப்படாதே! அவ உடம்புக்கு நோய் வர்றதுக்கே காரணமே நீங்கதான். உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு. வீடுன்னா கலகலப்பா இருக்கணும். அதைவிட்டுட்டு எப்பப் பார்த்தாலும் அழுது வடிஞ்சிகிட்டு இருந்தா எப்படி இருக்கும்? நீ முதல்ல உன் பொண்டாட்டியை சந்தோஷமா வைச்சிக்கிறதுக்கு பாரு.'' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று போய்விட்டார்.
அப்பா இப்படி பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது. கோபத்துடன் வளர்மதியை கூப்பிட்டான். சமயலறையி-ருந்து வந்து மவுனமாக நின்றாள்.
"நீ எதுவும் அவங்ககிட்ட சொன்னியா?"
"இல்லையே! நான் பாட்டுக்கு பேசாம என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்."
""அதான் ஏன்னு கேட்கிறேன். நீ இப்படி மூஞ்சை தூக்கிவைச்சிக்கிட்டு இருந்ததாலதான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னது உன் காதில விழுந்திச்சா?''
"இங்க பாருங்க, என்னை சும்மா வம்புக்கிழுக்காதீங்க. நான் நம்ம நல்லதுக்காக சொன்னதை நீங்க கேட்கலேன்னு வருத்தத்தில இருக்கேன், அவ்வளவுதான். அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு நான் காரணம்னு சொல்றதெல்லாம் அபாண்டம். ஆமா மருத்துவ செலவுக்கு என்ன பண்ணீங்க?''
"நகையைத்தான் அடகு வைச்சேன்."
"இப்படியே செஞ்சிக்கிட்டு இருங்க. முன்னேற வழியைச் சொன்னா, பழியைத் தூக்கி என் மேலயே போடுறீங்க அப்பாவும் புள்ளையுமா. நல்லதுக்கே காலமில்லப்பா." என்றவாறு சமயலறைக்கு சென்றுவிட்டாள்.
"உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு" என்று அப்பா சொன்னது வலித்தது. கிடைக்கிற சொற்ப வருமானம் வேறு. அம்மாவுக்கும் மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று டாக்டர் சொன்னதும், அந்த மருந்துகள் வாங்க ஆகும் செலவும் மிரட்சியை உண்டு பண்ணியது.
வளர்மதி சொல்வதும் சரிதானோ... கோயம்புத்தூர் நல்ல ஊர்தான். பேசாமல் அங்கே சென்றுவிடலாம். அப்பா, அம்மாவையும் அழைத்துச் சென்றுவிடலாம். அப்படி சென்றுவிட்டால் வளர்மதியையும் சந்தோஷப்படுத்தியது மாதிரியாச்சு, அப்பா, அம்மாவையும் தனித்து விட வேண்டியதில்லை. இதுதான் சரி' என்று எண்ணிக் கொண்டு அப்பாவைப் பார்க்க கிளம்பினான்.
"அப்பா... ஒரு யோசனை..." 'என்ன?' என்பது போல் பார்த்தார். குமார் தொடர்ந்தான்.
"இங்க பிசினஸ் சரியாயில்லை. கோயம்புத்தூர்ல லேத் பட்டறைக்கு நல்ல வேலை இருக்கும்னு கேள்விப்பட்டேன். அதான் அங்க போயிடலாம்னு தோணுது. நாம எல்லாரும் அங்க போயிடலாம்பா..."
"உனக்கு சரின்னு பட்டா செய். நீங்க சந்தோசமா இருந்த அது போதும். ஆனா, எங்களை கூப்பிடாதே. எங்க கட்டை இங்கதான் வேகணும். நீங்க போறதால எங்களுக்கு வருத்தம் எதுவும் கிடையாது."
அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அதற்குப்பிறகு அதில் மாற்றம் செய்ய மாட்டார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அறைக்குத் திரும்பினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வளர்மதி, "அப்புறம் என்ன? மாமாவே சொல்-ட்டாங்க. இனிமே நீங்கதான் முடிவு எடுக்கணும்." என்றாள்.
"அவங்களை தனியே விட்டுட்டு எப்படி போறது வளர்..."
"ஏங்க வருத்தப்படுறீங்க. பக்கத்திலதான் உங்க அண்ணன் இருக்கார். பார்த்துக்க மாட்டாரா? நீங்க போய் பேசுங்க. உங்க நிலமையை சொல்லுங்க..."
அதன்படியே அண்ணனிடம் பேசிவிட்டு, அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் கிளம்பினார்கள்.

"ஏங்க நம்மளையும்தான் கூப்பிட்டானே, ஏன் வேணாம்னு சொல்லிட்டீங்க?" என்ற மனைவியைப் பார்த்து சிரித்தார்.
"சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருக்கணும். நிறைய சம்பாரிக்கணும் நினைக்கிறாங்க. நாம வாழ்ந்து முடிச்சிட்டோம். அவங்க இனிமேதான் வாழ்க்கையைத் தொடங்கணும். நாம வாழ்ந்த காலகட்டம் வேற, இப்ப உள்ள கால கட்டத்தில போட்டிகள் நிறைஞ்சிருக்கு. அதில ஜெயிச்சு வர்றணும்னா நாம வழிகாட்டியா இருந்தா போதும். இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேன். அதான் பாசத்தை மனசுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு கொஞ்சம் கடுமையாவும் பேசிட்டேன். எல்லாம் அவன் நல்லதுக்குத்தான்." என்றார்.
தன் கணவன் எடுத்த முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்திருந்தவள் புன்னகைத்தாலும் விழியோரம் கண்ணீர் துளிகள் வழிவதை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

Thursday, 18 June, 2009

சந்தர்ப்பம் அமைந்துவிட்டால்...

ன் அப்பாவிடம் நான் மட்டுமே சகஜமாக பேசுவேன். எனது சகோதரனோ, சகோதரியோ நேர்நின்றுகூட பேசமாட்டார்கள். நான் கடைக்குட்டி என்பதால் எனக்கு சில சலுகை. அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, குடும்ப விவகாரங்கள் என்று எதுவும் பேசுவோம்.
என் அப்பா நடத்துனராக பணியாற்றியவர். பணியின்போது நடைபெறும் சம்பவங்களையும் சொல்வார். அப்படித்தான ஒருமுறை பேசும்போது, திறமை பற்றி பேச்சு வந்தது. நன்கு படித்த இளைஞன் ஒருவன், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து, குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். குடும்ப சூழ்நிலைக்காக அந்த வேலையில் சேர்ந்தாலும், வேலையில் தன் திறமையை காண்பிக்க பயன்படுத்திக் கொண்டான் என்பதுதான் சிறப்பு.
ஓட்டல் அமைந்திருந்த இடம் ஒரு வங்கிக்கு அருகில். வங்கி ஊழியர்கள் வழக்கமாக அந்த ஓட்டலுக்கு வருவார்கள். அந்த ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடி, தன் வேலையை காண்பித்திருக்கிறார். நாளடைவில் வங்கி ஊழியர்களும் அந்த சப்ளையரும் நெருக்கமாகிவிட்டார்கள். வங்கிப் பணிக்கு ஆள் தேவைப்பட்டபோது, அந்த சப்ளையரை சிபாரிசு செய்திருக்கிறார்கள். திறமையால் அந்த சப்ளையர் வங்கி ஊழியராகிவிட்டார்.

குடந்தையில் இப்போது பாரத் ஆடியோ கேபிள் (உள்ளூர் எஃப்.எம்.) பிரபலம். பெருநகரங்களில் ஏகப்பட்ட எஃப்.எம். வந்துவிட்டாலும், குடந்தையில் இன்னும் அந்த வசதிகள் வரவில்லை. அரசின் ரெயின்போ எஃப்.எம். மட்டுமே. பிரபல எஃப். எம். போலவே நேயர் விருப்பம், நேரடி நிகழ்ச்சி, தொலைபேசி வழி விருப்பப் பாடல்கள், பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சி (இதற்கு தனிக்கட்டணம் ரூ 20 செலுத்தினால் வாழ்த்து தெரிவிப்பதோடு, விருப்பமான 2 பாடல்களும் ஒலிபரப்புவார்கள்), விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று களை கட்டுகிறது. மாத சந்தாவாக ரூபாய் 25 வசூலிக்கிறார்கள். சுமார் ஆயிரம் சந்தாதாரர்கள் இருக்கிறார்களாம். (வருமானத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.)
காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி இரவு பதினொன்றுக்கு முடிவடையும். குடந்தையை நான்கு பகுதியாக பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரங்களுக்கு இன்னார் ஒலிபரப்புவது என்று பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில் இரவு இரண்டு மணிவரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.
அந்த ஆடியோ கேபிள் உருவான வரலாறு ரொம்பவும் சுவாரசியமானது. பட்டுப்புடவை நெய்து தரும் பணிபுரியும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான அம்மன்கோவில் தெரு, அரசலாறு வழிநடப்பு, பீர்மன் கோவில் தெரு, துவரங்குறிச்சி தெரு போன்ற பகுதிகளில் இளஞர்கள் பாட்டு போட்டுக் கொண்டு அலுப்புத் தெரியாமல் வேலை செய்வார்கள். பெண்கள் தறி வேலையை வீட்டிற்குள்ளும், பாவு (பட்டுப்புடவை செய்ய பயன்படும் பட்டு நூல்) காயவைக்கும் வேலையை ஆண்கள் தெருவிலும் செய்துவருவார்கள். வீட்டிற்குள் ஒரு ஸ்பீக்கரும், தெருவில் வேலை செய்பவர்களுக்காக ஒரு ஸ்பீக்கரும் வைத்தார்கள். இந்த முறை அக்க பக்கத்து வீடுகளில் வேலை செய்பவர்களும் விருப்பப்பட, இன்று குடந்தை முழுவதும் பரந்து விரிந்துவிட்டது.
அதன் வளர்ச்சியை விளம்பரங்களும் ஒலிபரப்பப்படுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் முறையான அனுமதி வாங்கி நீங்களும் செய்யலாம்... ஜோலிக்கு ஜோலி... (ஜோலி - வேலை) ஜாலிக்கு ஜாலி...

த்திரிகை நடத்திய அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, "நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" என்று முத்துராமலிங்கம் என்னிடம் கேட்டார். தூங்கிக் கொண்டிருந்த என் ஆசைகளை திரும்பவும் தூண்டிவிட்டுவிட்டார். "யோசிப்போம்" என்றேன். சாத்தியமா? என்று தீவிரமாக யோசித்தும் வருகிறேன்.

Sunday, 7 June, 2009

கேள்வி பிறந்தது அன்று...

பதிவர்களை பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள உதவும் இந்தப் பதிவுக்கு என்னையும் அழைத்த சொல்லரசன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாத்தாவின் பெயர் சுப்பிரமணி. அதனால், பேரன், பேத்திகளின் பெயரில் மணி இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.(பெயரில் மட்டுமாவது இருக்கட்டும் என்று நினைத்தார்போலும்.) நல்ல தமிழ் பெயர் என்பதால் எனக்கும் என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் என் அம்மா கண்கலங்க, நானும்...ஊரில் என் சகோதரனுடன் இருக்கிறார்கள்.(சென்னை வாழ்க்கை என் தாய், தந்தையருக்கு பிடிக்கவில்லையாம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பள்ளிப்பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவன்.இதிலிருந்து என் கையெழுத்து எப்படி இருக்கும் என்று ஊகிக்கலாம். இப்பொழுது மெதுவாக எழுதினால் மட்டும் அழகாக இருக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதுதான் என்றில்லை. ஆனாலும் என் அம்மா சமைக்கும் அசைவ உணவு என்றால்...ம்! (என் மனைவிக்கும் சரி, என் சகோதரிக்கும் சரி, அந்த பக்குவமான சமையல் வராது.)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமாம். தொடர்வது அவர்கள் கையில்தான் இருக்கிறது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் கால்நனைக்க மட்டுமே பிடிக்கும். அருவி... அதை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். ஆற்றில் குளிப்பதுதான் மிகவும் பிடித்தமானது. என் பள்ளிக்காலம் முழுவதும் எங்க ஊர் அரசலாற்றில்தான் குளியல்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை. அதில் தெரியும் அகத்தை.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எல்லோரிடமும் எளிதில் பழகிவிடுவதுதான் பிடித்த விசயம்.பழகியவர்கள் ஏதேனும் கோரிக்கைகள் வைக்கும்போது, எனக்கு தகுதிக்கு மீறியதாக இருப்பதைகூட, உடனே முடியாது என்று சொல்லத் தயங்குவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது, என்மீது கொண்ட காதல். பிடிக்காதது... கோபம்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா, அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

க்ரே கலர் பேண்ட், ரோஸ் கலர் சட்டை.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அலுவலகத்தில் கணிணியைப் பார்த்துக்கொண்டு...கேட்க ஏதுமில்லை.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சையும், நீலமும் கலந்த,ராமர் கலர்.

14.பிடித்த மணம்?

மணமானவர்களுக்கே பிடித்த அதே மல்லிகை.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ஆ.முத்துராமலி்ங்கம்,முத்துவேல், புதியவன். கவிதைகள், கவிதைகள், கவிதைகள்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அரசியல் சம்பந்தமான அலசல் பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?

கபடி. ஊரில் நடந்த போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கேனாக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி அணிபவர் அல்ல. கணினி முன்பு வேலை, அதனால் சீக்கிரமே அந்த வேளை வரலாம்...

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

காதல் படங்கள், காமெடிப்படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ராமன் தேடிய சீதை (டீவியில்.)

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர், மழைக்காலம்.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

பா.விஜய்- ன் 'உடைந்த நிலாக்கள் பாகம் -2'

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: கடலலை
பிடிக்காத சத்தம்: தரையில் தேய்கப்படும் கரகர சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கிலோ மீட்டர் தெரியாது. இடம். திருத்தணி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கதை, கவிதை எழுதுவது. மேடையில் பாடியது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கோவிலில் காதலர்கள். அவ்ரகள் செய்யும் சில்மிசங்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சற்றே சோம்பேறித்தனம்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

பொள்ளாச்சி பக்கம் போய்வரணும்.( பெரிய லிஸ்ட்டே இருக்கு...)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாருக்கும் தொந்தரைவில்லாமல், சந்தோசமாக.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

புத்தகம் படிப்பது.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

போனா வராது. (ஒரு வரிதானே கேட்டீங்க?)

Tuesday, 2 June, 2009

நூல் வெளியீட்டு விழாவும், முத்தான சந்திப்பும்.


திட்டமிட்டபடி 'பொன்விசிறி' அய்க்கூ நூல் வெளியீட்டடு விழாவுக்குகிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போதே நம்ம பதிவர் முத்துராமலிங்கம் போன்செய்து எனது வருகையை உறுதி செய்து கொண்டார். பதிவின் மூலம் மட்டுமேஅறிமுகமான அவரை சமீபத்தில்தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டுஇவ்விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தேன். எனது பதிவில் இருந்தபுகைப்படத்தை வைத்து, நான் அரங்கினுள் நுழைந்ததுமே என்னை அடையாளம்கண்டு என்னருகில் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். மிகவும் இளைமையானநண்பர். பழக இனிமையானவராகவும் இருக்கிறார்.
இந்நிகழ்வு பற்றி அவரும் பதிவிட்டிருக்கிறார்... விரிவாகவே...விடுபட்டவைமட்டும் இங்கே...


தமிழை வளர்க்க வேண்டியவர்கள் தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள் மட்டுமல்லாது அனைவரும் செய்ய வேண்டும். கவிதை எழுதுவதற்கு படிப்போ, பதவியோ முக்கியமல்ல, அனுபவமே போதும் பண்டைய காலத்தில் அரசர்கள்,அரசிகள், படைவீரர்கள், புலவர்கள், துறவிகள் வரை பலரும் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். அதைப்போலவே கணிப்பொறியியல் படைத்த அருணாசலசிவாவும் கவித்திறைன வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார் முகிலை ராசபாண்டியன்.

மரபு கவிதை, புதுக்கவிதை தொடர்ந்து அய்க்கூவில் கரைந்து கொண்டிருக்கிறேன் என்றார் ஓவியக்கவிஞர் அமுதபாரதி.( ஓவியமும், கவிதையும் படைக்கும் ஆற்றல் பெற்ற இவருக்கு ஓவியக்கவிஞர் என்ற பட்டம் அளித்தாராம் கவிஞர் கண்ணதாசன்.) மரபுக்கவிதை,புதுக்கவிதையைவிட அய்க்கூ நம்மை கற்பனையை விரிவடைய வைக்கும். அதனால் அய்க்கூமீது அதிக ஈடுபாடு கொள்கிறேன் என்றார். காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைகழகத்தை சேர்ந்த போதிதர்மா என்பவர் சீனாவுக்கு அய்க்கூ வடிவத்தை பரப்பினாராம். அவர்களுக்கு தமிழ் புரியாது என்பதால் தியானம் (அய்க்கூ கவிதை தியான நிலைக்கு நம்மை கொண்டு செல்வதால் அதை தியானம் என்று அழைத்தாராம் அவர்) என்பதை தியான் என்று சொல்ல, அவர்களிடமிருந்து எழுத்துருவை பெற்ற ஜப்பானியர்கள் அதை சென் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுவே அய்க்கூ என்று அழைக்கும்படி ஆயிற்று என்றார்.
கிரிஜா மணாளன். இவரை கவிஞர் என்றுதா்ன இதுவரை நினைத்திருந்தேன். இவர் ஒரு பதிவர் என்று இன்றுதான் அறிந்துகொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தோம். அவரின் வலை முகவரி...
smskavignarkal-world.blogspot.com
tiruchikavignkaral.tamilblogs.com
kavithaigal.tamilblogs.com


நாணற்காடன்: இவரின் கவிதையை ஏற்கனவே தங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இவரை வயதானவராக இதுவரை நினைத்திருந்தேன். முப்பது வயதுக்குள் தான் இருக்கும், இவர் இந்தி ஆசிரியராக சேலம் ராசிபுரத்தில் பணிபுரிகிறாராம். இந்தி ஆசிரியர் என்பதில் எனக்கு வேதனை ஏதுமில்லை. தமிழ் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகள் செய்கிறேன் என்றார்.

பொன் விசிறி தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு...
சுவரில் ஆணிகள்
சொல்லாமல் சொல்லும்
அடியின் வலி!

அரைஞான் கயிறு
அறுத்தெறியப்பட்டது
சிதையில் பிணம்!

மேஜைக்கடியில்
நீளும் கைகளில்
துப்பப்பட்டது எச்சில்!

Tuesday, 26 May, 2009

ஏதாவது செய்யணும் பாஸ்...

The crazy traffic in Chennai

ஏதாவது செய்யணும் பாஸ்...
இந்தத் தலைப்பில் பலர் எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது டிராபிக்ஜாம் தான். இன்று உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினை இருக்கிறது. காலையில் வீ்ட்டைவிட்டு கிளம்பினால் அலுவலகம் போய் சேருவதற்குள் போதுபோதுமென்று ஆகிவிடுகிறது. பஸ்ஸில் பயணிப்பது பெரும்பாடு என்று அங்க இங்க கடன் வாங்கி அல்லது லோன் போட்டு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கினாலும் போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க முடியாது. அகலமான சாலையானாலும் சாலையின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்திவைக்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு தொல்லை ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் காவல்துறையினர் தவிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக குடந்தை காவல்துறையினர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வியாபாரிகளை அழைத்துப் பேசினர். அந்தக்கூட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமான யோசனையை கொண்டுவந்தனர். அதற்கு எல்லாரும் ஒத்துழைப்பது என்றும் முடிவு செய்தனர். அந்த முடிவு என்ன என்று கேட்கிறீர்களா...

வாரத்தின் ஏழுநாட்களை 3+ 3+1 என்று பிரித்துக் கொண்டனர்.
திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் சாலையின் இடது புறத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும்.
வியாழன், வெள்ளி, சனி கிழமைகளில் வலது புறத்தில் நிறுத்தவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இருபுறங்களிலும் நிறுத்திக்கொள்ளலாம். அப்படி மீறுபவர்களின் வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். இப்போது குடந்தையில் போக்குவரத்து சீராக இருக்கிறது.
இதை சென்னையிலும் நடைமுறைப்படுத்திப் பார்கலாம்!

Monday, 18 May, 2009

திருச்சேறையில் எனது கோடைக்காலங்கள்.


ள்ளி கோடை விடுமுறை தினங்களில் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு செல்வது வாடிக்கையான விசயங்கள்தான். அப்படி நான் சென்றது, திருச்சேறையில் உள்ள மாமாவின் வீட்டிற்கு. திருச்சேறை என்பது கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் சாலையில் உள்ள கிராமம். என் மாமாவிற்கு விவசாயம்தான் தொழில்.விவசாய வயல்களுக்கு நடுவே ஒரு தோப்பும் உண்டு. அதில் வாழை, சவுக்கு, கீரை என்று பயிரி்ட்டிருப்பார்கள். அந்த தோப்புக்கு அருகிலேயே பனைமரங்கள் இருக்கும். அந்த பனை மரங்களுக்கு கீழே முனீஸ்வரர் சிலை வைத்து கும்பிட்டு வருகிறார்கள். எனக்கு பனநொங்கு நிறைய பறித்து தருவார்கள். கோடைக்கு இதமாக இருக்கும். அதோடு அந்த பனைங்காய்களை சக்கரமாக வைத்து வண்டிகள் செய்து விளையாடுவோம். மதிய நேரங்களில் முனீஸ்வரர் உலவுவார் என்று எனக்கு சொல்லியிருந்தார்கள். சிறுபிள்ளையாதலால் எனக்கு பயமாக இருக்கும். மதியம் வயலில் வேலை செய்து வந்த மாமாவை சாப்பிட கூப்பிட்டு வரச்சொல்லி என்னிடம் சொன்னார்கள். நானும் வயலுக்கு சென்றபோது சரசரவென்று சத்தம் கேட்டது. முனீஸ்வரர்தான் வருகிறாரோ என்று பயத்தில் அலறிக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். சற்றுநேரத்தி்ல் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. என்ன ஆச்சு? என்று மாமா கேட்டார். வயலிற்கு வரும்போது சரசரவென்று சத்தம் கேட்டது. பயந்துவிட்டேன் என்றேன்.
பனைமரத்து மட்டைகள் ஒன்றோடொன்று உரசியிருக்கும். அந்த சத்தத்தைக்கேட்டு பயந்திட்டியா என்று சிரி்ததார்கள். எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்வி்ட்டது.

னைமரம் ஒன்றில் ஓணான் கொடி ஒன்று படர ஆரம்பித்தது. சில மாதங்களில் மரம் முழுவதும் படர்நதுவி்ட்டது. ஆணவமாக அந்த ஓணான் கொடி சொன்னதாம் பனைமரத்திடம்..." நானும் இந்த சில மாதங்களாக பார்க்கிறேன். வளராமல் அப்படியே இருக்கிறாயே? நீ சுத்தவேஸ்ட்!"
அதற்கு அந்த பனைமரம் சொன்னதாம்: " இப்படி சொன்னது பதினொராயிரமாவது செடி நீ ."
இது எப்படி இருக்கு!

தே திருச்சேறையில் கூட்டு புளியாமரம் என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உள்ளது. சாலையோரங்களில் ஒரே இடத்தில் நிறைய புளியமரங்கள் இருக்கும் இடத்திற்கு அப்பெயர். அப்போதெல்லாம் வெளியூர்களிலிருந்து கும்பகோணத்திற்கு பலசரக்கு வாங்குவதற்காக மாட்டு வண்டிகள் கட்டிக்கொண்டு வருவார்கள். அப்படி வருபவர்கள் அந்த கூட்டு புளியந்தோப்பில் ஓய்வு எடுப்பது வழக்கம். அப்படித்தான் இரவு வேளையில் ஒரு மாட்டு வண்டிக்காரர், வண்டியை நிறுத்திவி்ட்டு, மாடுகளை வண்டியின் சக்கரத்தில் கட்டி, வைக்கோலை அதற்கு போட்டுவிட்டு, வண்டியில் ஏறி துண்டைவிரித்து போட்டு மல்லாக்க படுத்திருக்கிறார். அவரின் தலைக்கு நேர் மேலே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சடலத்தை அப்போதுதான் கவனித்திருக்கிறார். எப்படி இருந்திருக்கும் அவருக்கு? விழுந்தடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தவருக்கு சில மணிநேரங்களுக்கு பேச்சே வரவில்லை.

திருச்சேறையில் உள்ள சிவன் கோயில் கடன் நிவர்த்தி ஸ்தலம் என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு தொடர்ந்து 11 வாரங்கள் தி்ங்கட்கிழமை பூஜை செய்து வந்தால் கடன் தொல்லைகள் தீரும் என்று சமீபகாலமாக பெரும் பரபரப்பு அடைந்து வருகிறது. பாழடைந்து போன இத்திருத்தலம் இப்போது சீரும் சிறப்புமாக இருக்கிறது. இங்கு பெரிய கோயிலாக சாரநாத பெருமாள் கோயிலும் உள்ளது. இதே திருச்சேறையில் நடைபெறும் செடல் திருவிழாவும் மிகவும் பிரபலம்.
இன்னும் எங்கள் ஊரைப்பற்றி சமயம் வாய்க்கும்போது எழுதுகிறேன்.


தங்கள் வருகைக்கு நன்றி! கருத்துக்களை தருக! கவிதை குரல் ' வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்.

Monday, 11 May, 2009

சிற்றிதழ் ஆசிரியராக நான்...

பள்ளிப்பருவத்திலேயே கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவர்களைப் பற்றி என் தமி்ழ் வாத்தியார் பாடம் நடத்தினார். அதில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, அதை எனது நண்பனிடம் சொல்ல, அவனும் உதவி செய்வதாக சொல்ல, 'நந்தவனம்' என்று பெயர் சூட்டி கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தாயிற்று.
முதலில் பத்து பிரதிகள் போட்டோம். படித்தவர்கள் 'அட, இந்த சின்னப்பசங்களும் நல்லா எழுதறாங்க' என்று சொல்ல, அடுத்த பிரதி கையிருப்பைக் கொண்டும், கடன் வாங்கியும் அச்சில் செளியிடுவது என்று முடிவாயிற்று.
நண்பனின் அம்மா வட்டிக்கு பணம் தருவார்கள். பத்திரிகையில் விளம்பரம் போட்டு அதில் வரும் பணத்தை எடுத்து திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற
அசட்டுத் துணிச்சலில் அவர்களிடம் பணம் வாங்கிவி்ட்டேன்.

நானும் என் நண்பனும் விளம்பரத்திற்காக அலைந்த போதுதான் விளம்பரம் வாங்குவதன் அருமை தெரிந்தது. எல்லோரும் நம்மை பார்த்த விதமே ஒரு மாதிரியாக இருந்தது. சிலர் விளம்பரத் தொகை அதிகம் என்று பேரம் பேசினார்கள். ஒருவழியாக சில விளம்பரங்களுடன் 100 புத்தகம் போட்டு வெளியிட்டோம்.

கடைகளில் கெஞ்சிக்கேட்டு விற்பனைக்கு கொடுத்தோம். அதில் சில பிரதிகளும் விற்பனை ஆனது. ஆர்வமுள்ள சிலருக்கு புத்தகங்கள் இலவசமாக கொடுத்தோம். அந்தப்புத்தகங்கள் கைமாறி கைமாறி பலரையும் சென்றடைந்தது.

தினமும் பள்ளிவி்ட்டதும் எனது நண்பனை அழைத்துக்கொண்டு விளம்பரம் வாங்க கடைத்தெருவிற்கு செல்வோம். வழக்கம்போல என் நண்பனை அழைக்க, அவனின் அம்மா அனுப்ப மறுத்துவி்ட்டார்கள். நான் தனியே நடத்துவது என்று முன்னிலும் ஆர்வமானேன்.

நண்பரொருவர் ஒரு முகவரியை என்னிடம் கொடுத்து, 'இவர் பத்திரிகையில் ஆர்வமுள்ளவர். இவரைப்போய் பார்த்தால் உனக்கு உதவி செய்வார்' என்று கூற, ஆரவமுடன் நானும் அந்த(வலங்கைமான்) முகவரிக்கு சென்றேன். அந்த நண்பர் கடைத்தெருவில் பெரிய மளிகைகடை வைத்திருந்தார். 'சரி, இவரிடம் ஒரு விளம்பரமும் வாங்கிவிடவேண்டியதுதான்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு என்னைப்பற்றி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

நான்கொடுத்த புத்தகங்களை வாங்கி வைத்துவி்ட்டு(புரட்டிப்பார்கக்கூட இல்லை) ஒரு துண்டு காகிதம் எடுத்து ஏதோ எழுதினார். பின்பு என்னிடம் கொடுத்தார். அதில்...
நந்தவனத்திற்கு ஓய்வளிக்கவும்...
* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்
இப்படிக்கு ....
என்று கையழுத்திட்டிருந்தார்.
எனக்குள் பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
அந்த வாசகங்களை இன்றும் மறக்காமல் இருக்கிறேன் என்றால்... அந்த வாசகங்கள் உண்மைதான் என்று அர்த்தம்!

Sunday, 3 May, 2009

தனிமரம் சிறுகதை பாகம்- 2 (முற்றும்)

முதலாளி சொன்ன விசயத்தை வீ்ட்டில் சொல்ல, அம்மாவுக்கும், தங்கைக்கும் உற்சாகம் தாளமுடியவில்லை. அதைக்கண்ட சேகருக்கு மனது பிசைந்தது. மனதுக்குள் மாலதியின் முகம் வந்து வந்து போனது. அவ்வளவுதானா... என்ன மறந்துவிடுவீங்களா என்று கேட்பது போல தோன்றியது. முகம்வாடிப்போய் அமர்ந்தான்.
" என்னடா? ஏ்ன ஒரு மாதிரி இருககே?" என்றாள் அம்மா.
"எனக்கு முதலாளிப் பெண்ணை கல்யாணம் பண்ண விருப்பமில்லைம்மா..."
இதைக்கேட்ட தங்கை கோபமாக "ஏன் துரைக்கு பிடிக்கலையாம்?"
"பிடிக்கலைன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க" என்று குரலை உயர்த்தினான்.
"அந்த முதலாளிக்கு ஒரே பொண்ணு, கம்பெனி, வீடு, சொத்துன்னு ஏகப்பட்டது இருக்கு. நல்ல படிப்பு. அப்புறம் என்ன குறை? வலிய வர்ற சீதேவிய விரட்டி வி்ட்டுடு. நான் மூலையில மூதேவியா உட்கார்ந்திருக்கேன். என் கல்யாணத்தையும் எந்த செலவில்லாம செஞ்சி வைக்கிறேன்னு சொல்றாரு, இந்த மாதிரி நேரம் அமையறதே அபூர்வம். எல்லாம் என் தலையெழுத்து." என அழ ஆரம்பித்த தங்கையை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.
"சேகர் உனக்கு என்ன பிரச்சினை?" என்றாள் தாய்.
" சின்ன வயசிலேர்ந்து நான் ஆசைப்பட்டது என்னம்மா எனக்கு கிடைச்சிருக்கு? நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்பா இறந்துபோக குடும்ப சூழ்நிலையில வேலைக்கு போகும்படி ஆயிடுச்சு. எனக்கு பிடிச்ச பெண்ணாப்பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தானே என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்."
"இவ்வளவு பணம் உள்ள சம்மந்தத்தைவிட்டு்ட்டு. வேற எந்த இடத்தில் சம்மந்தம் வைச்சிக்கி்ட்டாலும் நீ சொல்ற நிம்மதி கிடைக்காதும. இந்த காலத்தில பணம் இல்லைன்னா ஏது நிம்மதி. பேசாம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க. என்ன மட்டும் உங்க ஓனர் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா உடனே ஓக்கேன்னு சொல்லிருப்பேன்." என்று கூறிய தங்கையை மிரட்சியுடன் பார்ததான் சேகர்.
வெறுப்புடன் தன்அறைக்கு சென்றான். தூக்கம் படிக்காமல் யோசனையாய் உங்கார்ந்திருந்தான். விளக்கு வெளிச்சம்பட்டு எழுந்து வந்தாள் அம்மா.
" சேகர் உன் தங்கையோட பேச்சை கேட்டியா... அவளுக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. நம்மாள அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க பணம் பற்றாக்குறை காரணமா தள்ளிப்போய்கிட்டே இருக்கு. நீ நல்லா யோசனை பண்ணு. நம்ம குடும்ம மானத்தைக் காப்பாத்துப்பா. அவ ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டா நான் உசிரோட இருக்க மாட்டேன். முதலாளிப் பெண்ணை நீ பார்த்ததில்லை. வெளிநாட்டுலேர்ந்து வந்தோன்ன பாரு. போட்டோலேயே அந்தப் பொண்ணு நல்லாத்தான் இருக்கா. வெளிநாட்ல படிச்சப் பொண்ணு. கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணுவா போலிருக்கு. எல்லாம் இங்க வந்தா சரியா போயிடும். சில விசயங்களை நாமதான் அனுசரிச்சி்ப் போகணும்" அம்மா பேசிக்கொண்டே போனாள். சேகருக்கு எதுவும் கேட்கவில்லை. மனம் முழுவதும் மாலதி... மாலதி... மாலதி...

ல்லோரும் வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தேறியது. கம்பெனி மேனேஜிங் டைரக்டராக சேகர் நியமிக்கப்பட்டான். தங்கைக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூர் போய்வி்ட்டாள்.
கல்யாணம் முடிந்த கையோடு சித்ரா (முதலாளிப் பெண்)சேகரிடம் 'நான் இன்னும் நிறைய படிக்கணும். அப்பாவோட வற்புறுத்தலாலதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்கதான் அப்பாக்கிட்டே பர்மிசன் வாங்கித்தரணும். என் பேச்சை விட உங்க பேச்சைத்தான் அப்பா கேட்டகிறாரு. அவ்வளவு தூரம் என்ன பண்ணுனீங்களோ...ஆனா நான் அமெரிக்கா போகணும். அதுக்கு அனுமதி வாங்குங்க. படிச்சிமுடிச்சி வர்றவரைக்கும் நமக்குள்ளே தாம்பத்தியம உறவு எதுவும் கிடையாது." என்றாள்.
சேகருக்கும் மனதிற்கு ஆறுதல் தேவைப்பட்டது. அதனால் முதலாளியிடம் போராடி சம்மதம் பெற்று சித்ராவை அமெரிக்கா அனுப்பிவைத்தான். தங்கைக்கு சந்தோசத்தைக் கொடுத்த இந்த பணம், தனக்கு நிம்மதியை தராததை எண்ணி கண் கலங்க அமர்ந்திருந்தான் சேகர்.

பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.
- ஸ்காட்லாந்து பழமொழி.

Wednesday, 29 April, 2009

தனிமரம் சிறுகதை - பாகம் -1

தினசரி நாட்காட்டியின் தாளைக் கிழிக்கும்போதுஅதிலிருக்கும் பொன்மொழிகளை படிப்பது என வழக்கம். அப்படி ஒருநாள் நான் படித்த பொன்மொழி எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் இந்தச் சிறுகதை. கதையின் முடிவில் அப்பொன்மொழி உங்கள் பார்வைக்கு...


மதிய உணவு இடைவேளையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மாலதி தன் அருகில் நிழல்விழ, நிமிர்ந்து பார்த்தாள், சேகர் நின்றிருந்தான்.
"வாங்க சார். நான் நேற்று உங்க வீட்டுக்கு வந்திருக்க கூடாது...சாரி...''
"மாலதி... சாரி கேட்கவேண்டியது நீங்க இல்லை... நான்தான்... பர்மிசனில் வீட்டுக்கு போன நான் ஆபிஸ் டிராயர் சாவியை மறந்து எடுத்துட்டுப் போனது எவ்வளவு பெரிய தப்பு. அதற்காக நீங்க வரப்போக, என் தங்கச்சி அதை தப்பா எடுத்துக்கிட்டு சே... நடந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதற்காகத்தான் நான் வந்தேன்.'' என்றான்.
சேகரின் தங்கை அநாகரிமாக நடந்து கொண்டது வருத்தம் அளித்தாலும், அதை மறைத்துக் கொண்டு, " சே... சே... அதை நேற்றே நான் மறந்துட்டேன். என் மேலதான தப்பு. ஆபிஸ் வேலைக்கு பியூன் இருக்கும்போது, உங்ககிட்ட ஆபிஸ் டிராயார் சாவி வாங்க உங்க வீட்டுக்கு நான் வந்திருக்க கூடாது. என் வீடும் அதே தெருவில இருந்ததால வந்தேன்.'' என்றாள்
"மாலதி. நீங்க பெருந்தன்மையா சொன்னாலும், என் தங்கச்சி நடந்தவிதம் எனக்கே புடிக்கலைங்க. என்னன்னு தெரியலை கொஞ்ச நாளாவே இப்படித்தான் நடந்துக்கிறா.''
"எல்லாம் வயசுதாங்க காரணம்.''
"என்னங்க சொல்றீங்க? உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதானே இருக்கும். உங்ககிட்ட உள்ள இந்த பக்குவமான பேச்சு அவகிட்ட இல்லையே...''
"பக்குவங்கிறது அனுபவம் சம்பந்தப்பட்டதுங்க. எனக்கும் உங்க மாதிரி ஒரு அண்ணன் இருந்தா... நானும் அப்படித்தான் நடந்துக்குவேனோ என்னவோ... இப்ப என் குடும்ப பொறுப்பு என்மேல இருக்கிறதால கல்யான ஆசைகளை தூர நிறுத்திவைச்சிருக்கேன். ஆனா உங்க தங்கச்சிக்கு அப்படி கிடையதில்லையா... அவளுக்கு அவ கனவுகள்தான் முக்கியமா இருக்கும்.''
"ம்... இதுக்குதான் பொம்பள மனசு பொம்பளைக்குத்தான் தெரியும்னு சொன்னாங்க போலிருக்கு... சரிங்க, மணியாகுது. நான் என் சீட்டுக்கு போறேன். மறுபடியும் உங்ககிட்ட ஸாரி கேட்டுக்கிறேன்.'' என்றவாறு சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. மனதுக்குள் சேகர் சொன்னது மீண்டும் ஒலித்தது... "உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதான்... உங்ககிட்ட இருக்கிற பக்குவம் அவகிட்ட இல்லியே...' மாலதி தன்னையும் அறியாமல் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.

மாலைநேர கடையில் காப்பி குடித்துவிட்டு தம் அடித்துக் கொண்டிருந்த சேகரைக் கண்டதும், காப்பி வாங்க வந்த ப்யூன், "சேகர் சார்...'' என்றவாறு அருகில் வந்தான்.
"என்ன அய்யாதுரை, என்ன விஷயம்?'' என்றான் சேகர்.
"நம்ம அய்யா, ஏதாவது உங்ககிட்ட விசாரிச்சாரா?'' என்றான். அய்யா என்பது கம்பெனி முதலாளியை.
"ஏன்? என்ன விஷயம்?''
"இல்ல... மதியானம் நீங்களும் மாலதி அம்மாவிம் பேசிக்கிட்டிருக்கும்போது, அய்யா வந்திருப்பாரு போல... காதல் அது இதுன்னு ஏதாவது விசயமா அப்படின்னு கேட்டாரு... அதான் உங்களை நேரா விசாரிச்சாரான்னு கேட்டேன்...'' என்று சிரித்தான்.
"நம்ம அய்யாவா அப்படிக் கேட்டாரு...'' என்றவன் நடந்ததை ப்யூனிடம் விளக்கினான்.
"அப்படியா விஷயம்... சரி நான் வர்றேன் சார்'' என்றவாறு ப்யூன் செல்ல, முதலாளி நம்மைப்பற்றி எதுக்கு விசாரிக்கணும்? என்று யோசிக்க ஆரம்பித்தான். மாலதியை தன்னுடன் இணைத்து பார்த்த முதலாளிக்கு மானசீகமாக நன்றி சொன்னான். மனத்திரையில் மாலதியின் முகம் பளீரென்று மின்னியது.

சலவைக்கற்கள் ரெத்னா இல்லம் என்று பதிக்கப்பட்ட வாசகத்துடன் கம்பீரமாக காட்சியளித்த பங்களாவின் கேட்டை நெருங்கினான் சேகர். வாட்ச்மேன் சேகரைக் கண்டதும் சிரித்து, "அய்யா பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்திருக்கிறார். உங்கள அங்க வரச்சொன்னார்'' என்றான்.
சேகரின் மனதிற்குள் என்ன இவர் இரண்டு நாட்களாக வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்துக் கொண்டான். நேற்று பியூனிடம் விசாரித்தவர், ஞாயிற்றுக்கிழமையான இன்று வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறார்... இப்போது நேரிடையாக விசாரிக்கப் போகிறாரா? இதுவரையில் கம்பெனி ஆட்களை யாரையுமே வீட்டிற்கு வரச்சொன்னது இல்லை என்று ப்யூன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தவர், இவனைப் பார்த்ததும், "வாங்க சேகர், உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். உக்காருங்க.'' என்றார். ஆபிஸ் நேரங்களில் காட்டும் கண்டிப்பான குரல் இங்கு இல்லை. சேகர் அமர்ந்ததும், " என்ன சாப்பிடுறீங்க?'' என்றார்.
"ஒண்ணும் வேணாம் சார்... என்ன விசயமா வரச்சொன்னீங்கன்னு எனக்கு புரியவேயில்லை. ஒரே குழப்பமா இருக்கேன் சார்'' என்றான்.
"கல்யான வயசுப் பொண்ண வீட்ல வைச்சுருக்கிறது ரொம்ப கஷ்டமான விசயம் இல்லையா சேகர்?'' என்றார்.
பியூன் எல்லா விசயத்தையும் இவரிடம் வந்து சொல்லிட்டானா என்று யோசித்துக் கொண்டே, "ஆமா சார்... கால நேரத்தோட கல்யாணம் பண்ணிட்டா பிரச்சினை இல்லை'' என்றான்.
"உங்க தக்ச்சி கல்யாணத்தை ஏன் தள்ளிப் போடுறீங்க? சீக்கிரமா பார்த்து முடிக்க வேண்டியதுதானே?''
"இன்னும் அதுக்கு என்ன நான் தயார் பண்ணிக்கலை சார்..'' என்று இழுத்தான்.
"ஏன் ஏதாவது பணப்பிரச்சினையா?''
"சார்... அது வந்து...''
"சும்மா சொல்லுங்க சேகர்...''
" ஆமா சார்... எங்க அப்பா பார்த்த வேலையைத்தான் எனக்குக் கொடுத்திருக்கீங்க. எங்க அப்பா இறந்தப்போதான் நிறைய கடன் வாங்கி வைச்சிட்டு போயிருக்கிற விசயமே எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் இப்பதான் அடைச்சிட்டு வர்றேன். இனிமேதான் ஏற்பாடு பண்ணணும்.''
"உன் தங்கச்சி வயசுப் பொண்ணுகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிட்டதா கேள்விப்பட்டேன். அந்த விரக்கிதியிலதான் உன்ள தங்கச்சி, நம்ம ஸ்டாப் மாலதியை தப்பிதமா பேசினதா கேள்விப்பட்டேன். இந்த மாதிரி நேரத்தில நீங்க இன்னும் நாள் கடத்துறது சரியில்லைன்னு எம்மனசுக்குப்படுது'' என்றார்.
"என்னைப்பத்தி, என் குடும்பத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சி வைச்சிருக்கீங்க சார்''
"இதுக்குப் பின்னால என் சுயநலமும் இருக்கு சேகர்...''
"என்ன சொல்றீங்க சார்?''
"என் பொண்ணைப் பார்த்திருக்கீங்களா நீங்க?''
"இல்லை சார்... வெளிநாட்டில படிக்கிறதா கேள்விப்பட்டேன்....''
"ஆமா. படிட்பபு முடிஞ்சு, இப்ப ஊருக்கு வர்றா... வந்த உடனே அவளுக்கு கல்யாணம் பண்ணிடணும்னு முடிவெடுத்திருக்கேன். மாப்பிள்ளையை கூட தேர்வு பண்ணியாச்சு... அது... நீங்கதான்...''
"சார்.... நீங்க... '' அவர் குடுத்த அதிர்ச்சியிலும் மாலதி முகம் கண்முன் தெரிந்தது.
"யெஸ் சேகர். உங்க தங்கச்சி கல்யாணமும், உங்க கல்யாணமும் ஒரே நேரத்தில் வைச்சிக்கலாம். முழுச்செலவையும் நானே பார்த்துக்கிறேன். உங்களோட மூணு வருஷ சர்வீஸ்ல, உங்களுக்கே தெரியாம என் பார்வை உங்க மேலதான் இருந்திச்சு. என் மகளோட படிப்பு முடியட்டும்னு காத்திருந்தேன். இப்ப யோசிச்சு, நல்ல முடிவைச் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன். இப்ப போயிட்டு வாங்க'' என்றார்.
பதில் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல், வீடு நோக்கி கிளம்பினான்.

(தொடரும்)

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...