Tuesday, 26 May, 2009

ஏதாவது செய்யணும் பாஸ்...

The crazy traffic in Chennai

ஏதாவது செய்யணும் பாஸ்...
இந்தத் தலைப்பில் பலர் எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது டிராபிக்ஜாம் தான். இன்று உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினை இருக்கிறது. காலையில் வீ்ட்டைவிட்டு கிளம்பினால் அலுவலகம் போய் சேருவதற்குள் போதுபோதுமென்று ஆகிவிடுகிறது. பஸ்ஸில் பயணிப்பது பெரும்பாடு என்று அங்க இங்க கடன் வாங்கி அல்லது லோன் போட்டு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கினாலும் போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க முடியாது. அகலமான சாலையானாலும் சாலையின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்திவைக்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு தொல்லை ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் காவல்துறையினர் தவிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக குடந்தை காவல்துறையினர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வியாபாரிகளை அழைத்துப் பேசினர். அந்தக்கூட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமான யோசனையை கொண்டுவந்தனர். அதற்கு எல்லாரும் ஒத்துழைப்பது என்றும் முடிவு செய்தனர். அந்த முடிவு என்ன என்று கேட்கிறீர்களா...

வாரத்தின் ஏழுநாட்களை 3+ 3+1 என்று பிரித்துக் கொண்டனர்.
திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் சாலையின் இடது புறத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும்.
வியாழன், வெள்ளி, சனி கிழமைகளில் வலது புறத்தில் நிறுத்தவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இருபுறங்களிலும் நிறுத்திக்கொள்ளலாம். அப்படி மீறுபவர்களின் வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். இப்போது குடந்தையில் போக்குவரத்து சீராக இருக்கிறது.
இதை சென்னையிலும் நடைமுறைப்படுத்திப் பார்கலாம்!

Monday, 18 May, 2009

திருச்சேறையில் எனது கோடைக்காலங்கள்.


ள்ளி கோடை விடுமுறை தினங்களில் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு செல்வது வாடிக்கையான விசயங்கள்தான். அப்படி நான் சென்றது, திருச்சேறையில் உள்ள மாமாவின் வீட்டிற்கு. திருச்சேறை என்பது கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் சாலையில் உள்ள கிராமம். என் மாமாவிற்கு விவசாயம்தான் தொழில்.விவசாய வயல்களுக்கு நடுவே ஒரு தோப்பும் உண்டு. அதில் வாழை, சவுக்கு, கீரை என்று பயிரி்ட்டிருப்பார்கள். அந்த தோப்புக்கு அருகிலேயே பனைமரங்கள் இருக்கும். அந்த பனை மரங்களுக்கு கீழே முனீஸ்வரர் சிலை வைத்து கும்பிட்டு வருகிறார்கள். எனக்கு பனநொங்கு நிறைய பறித்து தருவார்கள். கோடைக்கு இதமாக இருக்கும். அதோடு அந்த பனைங்காய்களை சக்கரமாக வைத்து வண்டிகள் செய்து விளையாடுவோம். மதிய நேரங்களில் முனீஸ்வரர் உலவுவார் என்று எனக்கு சொல்லியிருந்தார்கள். சிறுபிள்ளையாதலால் எனக்கு பயமாக இருக்கும். மதியம் வயலில் வேலை செய்து வந்த மாமாவை சாப்பிட கூப்பிட்டு வரச்சொல்லி என்னிடம் சொன்னார்கள். நானும் வயலுக்கு சென்றபோது சரசரவென்று சத்தம் கேட்டது. முனீஸ்வரர்தான் வருகிறாரோ என்று பயத்தில் அலறிக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். சற்றுநேரத்தி்ல் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. என்ன ஆச்சு? என்று மாமா கேட்டார். வயலிற்கு வரும்போது சரசரவென்று சத்தம் கேட்டது. பயந்துவிட்டேன் என்றேன்.
பனைமரத்து மட்டைகள் ஒன்றோடொன்று உரசியிருக்கும். அந்த சத்தத்தைக்கேட்டு பயந்திட்டியா என்று சிரி்ததார்கள். எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்வி்ட்டது.

னைமரம் ஒன்றில் ஓணான் கொடி ஒன்று படர ஆரம்பித்தது. சில மாதங்களில் மரம் முழுவதும் படர்நதுவி்ட்டது. ஆணவமாக அந்த ஓணான் கொடி சொன்னதாம் பனைமரத்திடம்..." நானும் இந்த சில மாதங்களாக பார்க்கிறேன். வளராமல் அப்படியே இருக்கிறாயே? நீ சுத்தவேஸ்ட்!"
அதற்கு அந்த பனைமரம் சொன்னதாம்: " இப்படி சொன்னது பதினொராயிரமாவது செடி நீ ."
இது எப்படி இருக்கு!

தே திருச்சேறையில் கூட்டு புளியாமரம் என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உள்ளது. சாலையோரங்களில் ஒரே இடத்தில் நிறைய புளியமரங்கள் இருக்கும் இடத்திற்கு அப்பெயர். அப்போதெல்லாம் வெளியூர்களிலிருந்து கும்பகோணத்திற்கு பலசரக்கு வாங்குவதற்காக மாட்டு வண்டிகள் கட்டிக்கொண்டு வருவார்கள். அப்படி வருபவர்கள் அந்த கூட்டு புளியந்தோப்பில் ஓய்வு எடுப்பது வழக்கம். அப்படித்தான் இரவு வேளையில் ஒரு மாட்டு வண்டிக்காரர், வண்டியை நிறுத்திவி்ட்டு, மாடுகளை வண்டியின் சக்கரத்தில் கட்டி, வைக்கோலை அதற்கு போட்டுவிட்டு, வண்டியில் ஏறி துண்டைவிரித்து போட்டு மல்லாக்க படுத்திருக்கிறார். அவரின் தலைக்கு நேர் மேலே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சடலத்தை அப்போதுதான் கவனித்திருக்கிறார். எப்படி இருந்திருக்கும் அவருக்கு? விழுந்தடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தவருக்கு சில மணிநேரங்களுக்கு பேச்சே வரவில்லை.

திருச்சேறையில் உள்ள சிவன் கோயில் கடன் நிவர்த்தி ஸ்தலம் என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு தொடர்ந்து 11 வாரங்கள் தி்ங்கட்கிழமை பூஜை செய்து வந்தால் கடன் தொல்லைகள் தீரும் என்று சமீபகாலமாக பெரும் பரபரப்பு அடைந்து வருகிறது. பாழடைந்து போன இத்திருத்தலம் இப்போது சீரும் சிறப்புமாக இருக்கிறது. இங்கு பெரிய கோயிலாக சாரநாத பெருமாள் கோயிலும் உள்ளது. இதே திருச்சேறையில் நடைபெறும் செடல் திருவிழாவும் மிகவும் பிரபலம்.
இன்னும் எங்கள் ஊரைப்பற்றி சமயம் வாய்க்கும்போது எழுதுகிறேன்.


தங்கள் வருகைக்கு நன்றி! கருத்துக்களை தருக! கவிதை குரல் ' வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்.

Monday, 11 May, 2009

சிற்றிதழ் ஆசிரியராக நான்...

பள்ளிப்பருவத்திலேயே கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவர்களைப் பற்றி என் தமி்ழ் வாத்தியார் பாடம் நடத்தினார். அதில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, அதை எனது நண்பனிடம் சொல்ல, அவனும் உதவி செய்வதாக சொல்ல, 'நந்தவனம்' என்று பெயர் சூட்டி கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தாயிற்று.
முதலில் பத்து பிரதிகள் போட்டோம். படித்தவர்கள் 'அட, இந்த சின்னப்பசங்களும் நல்லா எழுதறாங்க' என்று சொல்ல, அடுத்த பிரதி கையிருப்பைக் கொண்டும், கடன் வாங்கியும் அச்சில் செளியிடுவது என்று முடிவாயிற்று.
நண்பனின் அம்மா வட்டிக்கு பணம் தருவார்கள். பத்திரிகையில் விளம்பரம் போட்டு அதில் வரும் பணத்தை எடுத்து திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற
அசட்டுத் துணிச்சலில் அவர்களிடம் பணம் வாங்கிவி்ட்டேன்.

நானும் என் நண்பனும் விளம்பரத்திற்காக அலைந்த போதுதான் விளம்பரம் வாங்குவதன் அருமை தெரிந்தது. எல்லோரும் நம்மை பார்த்த விதமே ஒரு மாதிரியாக இருந்தது. சிலர் விளம்பரத் தொகை அதிகம் என்று பேரம் பேசினார்கள். ஒருவழியாக சில விளம்பரங்களுடன் 100 புத்தகம் போட்டு வெளியிட்டோம்.

கடைகளில் கெஞ்சிக்கேட்டு விற்பனைக்கு கொடுத்தோம். அதில் சில பிரதிகளும் விற்பனை ஆனது. ஆர்வமுள்ள சிலருக்கு புத்தகங்கள் இலவசமாக கொடுத்தோம். அந்தப்புத்தகங்கள் கைமாறி கைமாறி பலரையும் சென்றடைந்தது.

தினமும் பள்ளிவி்ட்டதும் எனது நண்பனை அழைத்துக்கொண்டு விளம்பரம் வாங்க கடைத்தெருவிற்கு செல்வோம். வழக்கம்போல என் நண்பனை அழைக்க, அவனின் அம்மா அனுப்ப மறுத்துவி்ட்டார்கள். நான் தனியே நடத்துவது என்று முன்னிலும் ஆர்வமானேன்.

நண்பரொருவர் ஒரு முகவரியை என்னிடம் கொடுத்து, 'இவர் பத்திரிகையில் ஆர்வமுள்ளவர். இவரைப்போய் பார்த்தால் உனக்கு உதவி செய்வார்' என்று கூற, ஆரவமுடன் நானும் அந்த(வலங்கைமான்) முகவரிக்கு சென்றேன். அந்த நண்பர் கடைத்தெருவில் பெரிய மளிகைகடை வைத்திருந்தார். 'சரி, இவரிடம் ஒரு விளம்பரமும் வாங்கிவிடவேண்டியதுதான்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு என்னைப்பற்றி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

நான்கொடுத்த புத்தகங்களை வாங்கி வைத்துவி்ட்டு(புரட்டிப்பார்கக்கூட இல்லை) ஒரு துண்டு காகிதம் எடுத்து ஏதோ எழுதினார். பின்பு என்னிடம் கொடுத்தார். அதில்...
நந்தவனத்திற்கு ஓய்வளிக்கவும்...
* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்
இப்படிக்கு ....
என்று கையழுத்திட்டிருந்தார்.
எனக்குள் பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
அந்த வாசகங்களை இன்றும் மறக்காமல் இருக்கிறேன் என்றால்... அந்த வாசகங்கள் உண்மைதான் என்று அர்த்தம்!

Sunday, 3 May, 2009

தனிமரம் சிறுகதை பாகம்- 2 (முற்றும்)

முதலாளி சொன்ன விசயத்தை வீ்ட்டில் சொல்ல, அம்மாவுக்கும், தங்கைக்கும் உற்சாகம் தாளமுடியவில்லை. அதைக்கண்ட சேகருக்கு மனது பிசைந்தது. மனதுக்குள் மாலதியின் முகம் வந்து வந்து போனது. அவ்வளவுதானா... என்ன மறந்துவிடுவீங்களா என்று கேட்பது போல தோன்றியது. முகம்வாடிப்போய் அமர்ந்தான்.
" என்னடா? ஏ்ன ஒரு மாதிரி இருககே?" என்றாள் அம்மா.
"எனக்கு முதலாளிப் பெண்ணை கல்யாணம் பண்ண விருப்பமில்லைம்மா..."
இதைக்கேட்ட தங்கை கோபமாக "ஏன் துரைக்கு பிடிக்கலையாம்?"
"பிடிக்கலைன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க" என்று குரலை உயர்த்தினான்.
"அந்த முதலாளிக்கு ஒரே பொண்ணு, கம்பெனி, வீடு, சொத்துன்னு ஏகப்பட்டது இருக்கு. நல்ல படிப்பு. அப்புறம் என்ன குறை? வலிய வர்ற சீதேவிய விரட்டி வி்ட்டுடு. நான் மூலையில மூதேவியா உட்கார்ந்திருக்கேன். என் கல்யாணத்தையும் எந்த செலவில்லாம செஞ்சி வைக்கிறேன்னு சொல்றாரு, இந்த மாதிரி நேரம் அமையறதே அபூர்வம். எல்லாம் என் தலையெழுத்து." என அழ ஆரம்பித்த தங்கையை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.
"சேகர் உனக்கு என்ன பிரச்சினை?" என்றாள் தாய்.
" சின்ன வயசிலேர்ந்து நான் ஆசைப்பட்டது என்னம்மா எனக்கு கிடைச்சிருக்கு? நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்பா இறந்துபோக குடும்ப சூழ்நிலையில வேலைக்கு போகும்படி ஆயிடுச்சு. எனக்கு பிடிச்ச பெண்ணாப்பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தானே என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்."
"இவ்வளவு பணம் உள்ள சம்மந்தத்தைவிட்டு்ட்டு. வேற எந்த இடத்தில் சம்மந்தம் வைச்சிக்கி்ட்டாலும் நீ சொல்ற நிம்மதி கிடைக்காதும. இந்த காலத்தில பணம் இல்லைன்னா ஏது நிம்மதி. பேசாம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க. என்ன மட்டும் உங்க ஓனர் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா உடனே ஓக்கேன்னு சொல்லிருப்பேன்." என்று கூறிய தங்கையை மிரட்சியுடன் பார்ததான் சேகர்.
வெறுப்புடன் தன்அறைக்கு சென்றான். தூக்கம் படிக்காமல் யோசனையாய் உங்கார்ந்திருந்தான். விளக்கு வெளிச்சம்பட்டு எழுந்து வந்தாள் அம்மா.
" சேகர் உன் தங்கையோட பேச்சை கேட்டியா... அவளுக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. நம்மாள அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க பணம் பற்றாக்குறை காரணமா தள்ளிப்போய்கிட்டே இருக்கு. நீ நல்லா யோசனை பண்ணு. நம்ம குடும்ம மானத்தைக் காப்பாத்துப்பா. அவ ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டா நான் உசிரோட இருக்க மாட்டேன். முதலாளிப் பெண்ணை நீ பார்த்ததில்லை. வெளிநாட்டுலேர்ந்து வந்தோன்ன பாரு. போட்டோலேயே அந்தப் பொண்ணு நல்லாத்தான் இருக்கா. வெளிநாட்ல படிச்சப் பொண்ணு. கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணுவா போலிருக்கு. எல்லாம் இங்க வந்தா சரியா போயிடும். சில விசயங்களை நாமதான் அனுசரிச்சி்ப் போகணும்" அம்மா பேசிக்கொண்டே போனாள். சேகருக்கு எதுவும் கேட்கவில்லை. மனம் முழுவதும் மாலதி... மாலதி... மாலதி...

ல்லோரும் வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தேறியது. கம்பெனி மேனேஜிங் டைரக்டராக சேகர் நியமிக்கப்பட்டான். தங்கைக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூர் போய்வி்ட்டாள்.
கல்யாணம் முடிந்த கையோடு சித்ரா (முதலாளிப் பெண்)சேகரிடம் 'நான் இன்னும் நிறைய படிக்கணும். அப்பாவோட வற்புறுத்தலாலதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்கதான் அப்பாக்கிட்டே பர்மிசன் வாங்கித்தரணும். என் பேச்சை விட உங்க பேச்சைத்தான் அப்பா கேட்டகிறாரு. அவ்வளவு தூரம் என்ன பண்ணுனீங்களோ...ஆனா நான் அமெரிக்கா போகணும். அதுக்கு அனுமதி வாங்குங்க. படிச்சிமுடிச்சி வர்றவரைக்கும் நமக்குள்ளே தாம்பத்தியம உறவு எதுவும் கிடையாது." என்றாள்.
சேகருக்கும் மனதிற்கு ஆறுதல் தேவைப்பட்டது. அதனால் முதலாளியிடம் போராடி சம்மதம் பெற்று சித்ராவை அமெரிக்கா அனுப்பிவைத்தான். தங்கைக்கு சந்தோசத்தைக் கொடுத்த இந்த பணம், தனக்கு நிம்மதியை தராததை எண்ணி கண் கலங்க அமர்ந்திருந்தான் சேகர்.

பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.
- ஸ்காட்லாந்து பழமொழி.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...