Showing posts with label குட்டிக்கதை. Show all posts
Showing posts with label குட்டிக்கதை. Show all posts

Sunday, 15 March 2009

அறிவு வித்தியாசங்கள்

கவிஞர் அப்துல்ரகுமான் மிகச்சிறந்த கவிஞர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் 'கஜல்'வகை கவிதைகள் எழுதுவதில் தமிழில் அவருக்கு நிகர் அவர்தான். ஒரு பிரபலமான வார இதழில் அவருடைய கேள்வி பதில் பகுதி வெளியானது. அதில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி: கண்ணுக்கு மூடி(இமை) வைத்த இறைவன், செவிக்கு வைக்காதது ஏன்? அதற்கு அவர் சொன்ன பதில்: செவி உண்டியலில் நாம் எதிர்பாராத நேரத்திலும் காசு விழலாம், அதனால்தான்.
எவ்வளவு அருமையான பதில் பாருங்கள். அதுசரி எதுக்கு இவ்வளவு சப்பைபக்கட்டு என்கிறீர்களா?
இன்னைக்கு ரயிலில் வரும்போது எதிரில் ஒருவர் போனில் பேசிக்கொண்டிருந்தார். அது என் காதில் விழுந்ததா... அதை உங்ககிட்ட சொல்லிடணும்னு தோணிச்சு... அதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம யோசிச்சப்ப அப்துல்ரகுமான் உதவி செய்தார். எதிர்முனையில பேசினவங்க ஏதோ பிரச்சினையைப் பற்றி அவர்கிட்ட சொல்லியிருப்பாங்க போல, அதுக்கு அவரு ஒரு குட்டி ... இல்ல இல்ல... ரொம்ப குட்டி கதை சொன்னாரு...
ஒத்தையடிப்பாதையில யானை வந்திட்டுகிட்டிருந்திச்சு.எதிரில ஒரு பன்றி சேறுசகதியில புரண்டு எழுந்து அப்படியே வந்திட்டிருந்திச்சு. அதைப்பார்த யானை ஒதுங்கி பன்றிக்கு வழிவிட்டு விலகி நின்னுச்சாம். அதைப்பார்த்த பன்றி, "எவ்வளவு பெரிய யானை என்னைப்பார்த்து பயந்து ஒதுங்கி வழிவிட்டு விலகி நிற்குதேன்"னு திமிரோடநடந்ததாம். அந்த பன்றிக்கு அவ்வளவுதான் அறிவுன்னுட்டு போவியா" ன்னு எதிரில இருந்தவர் சொன்னாரு.யானை பலம் வாயந்தது. பன்றியைப்பற்றித்தான் உங்களுக்கே தெரியும். அட... எவ்வளவு அருமையான விளக்கம் கொடுத்தாரு. நாமகூட சூரியனை பார்த்து நாய் குலைக்குதுன்னுட்டு போ என்று சொல்வோம் அதையே இவர் வேறு பாணியில சொல்லியிருக்காரு. இருந்தாலும் நல்லா இருந்ததால உங்ககிட்ட பகிர்ந்துகிட்டேன். (எனக்கும் ஒரு பதிவுக்கு ஆச்சு)

Sunday, 1 March 2009

அரிசி தவிட்டிலிருந்து நெய் கிடைக்குமா? சுப்பனின் ஆராய்ச்சி.

நம்ம கதையின் நாயகன் சுப்பன். முதல் இவனோட பாத்திரப்படைப்பை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? இவனுக்கு பெரிய அளவில பேரெடுக்கணும், எல்லாரும் தன்னை புகழனும்னு ஆசை. அதற்காக என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு எட்டிய அளவிற்கு அறிவிற்கு முயற்சிகளும் தொடர்ந்தான்.
யாரோ ஒருத்தர் நிறைய படிச்சா புதுப்புது விடயங்கள் கிடைக்கும். அதிலிருந்து புதுசா ஏதாவது திட்டங்களை செய்றபடுத்தலாம்னு சொன்னார். அதிலிருந்து வடை மடிச்சுவர பேப்பரகூட விடுறதில்லை.
அப்படித்தான் ஒருமுறை வடை சாப்பிடும்போது வந்த பேப்பரில ஒரு புத்தகத்தோட பொருளடக்கம் பக்கம் மட்டும் இருந்தது. அதில பல தலைப்புகள் இருந்தது. அதையும் படிச்சான். 'அட்ரா சக்கை'னு வாய்விட்டு கத்தினான். கடைக்காரர்கள் எல்லாரும் பார்க்க, பேப்பரை மடிச்சு வச்சிகிட்டு வீட்டைப்பார்க ஓடினான்.

அந்தப் புத்தகத்தில அப்படி என்னதான் எழுதியிரந்துச்சி்ன்னு கேட்கிறீங்களா?
வீணாகும் பொருட்களிலிருந்தும் பயனுள்ள பொருட்கள் கிடைக்கும்! என்பதுதான், அந்த புத்தக பக்கத்தில் இருந்த விடயம்.

அதில நம்ம சுப்பனுக்கு பிடித்த விடயம், அரிசி (உமி) தவிட்டில் முயற்சி செய்தால் நெய் கிடைக்கும்! என்ற தலைப்பு இருந்ததுதான்.

இதுவரை யாரும் அப்படி முயற்சி செய்தது மாதிரி தெரியவில்லையே! இதை நாம் முயற்சி செய்தால் பெரும் பணமும், புகழும் கிடைக்கும் என்று எண்ணியபோதே, அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? இந்தப் பக்கத்தை கொண்ட முழுப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் நல்லது. அப்போதுதானே நமமு முயற்சியை தொடரமுடியும் என்று யோசித்தான்.
ழைய புத்தகங்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கிடைக்கும் என்று அவனது புலனாய்வில் கண்டுபிடித்தான்.
உடனே அங்கு பயணமானான். அங்கிருந்த புத்தக கடைகளை முழுவதுமாக அலசி ஆராய்ந்தான். கடைசியாக புத்தகத்தை கண்டுபிடித்தான்.
புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீடு நோக்கி பறந்தான். உலகமே அவன் கையில் சிக்கி விட்டதாக கற்பனையில் மிதந்தான். வீட்டிற்குள் சென்று தன் அறைக்கதவை சாத்திக் கொண்டு புத்தகத்தை முழுவதும் படித்தான். படித்ததும் குழம்பிப் போனான். அரிசி தவிட்டை முறத்தால் புடைத்தால் நெய் கிடைக்கும் என்றிருந்தது. வெறுமனே புடைத்தால் போதுமா? அப்படி புடைத்தால் எப்படி நெய் கிடைக்கும்? இதைப் பற்றி யாரிடம் கேட்பது? யாரிடம் கேட்கவும் பயந்தான். இதை அவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால்...ம்! நாமே யோசனை செய்வோம் என்று தீவிரமாக முயற்சி செய்தும் பிடிபடவில்லை.
களைப்பு மிகுதியால் புத்தகத்தை வீசி எறிந்தான். புத்தகம் புரண்டு விழுந்ததில் பக்கங்கள் மாறிப்போனது. யதோச்சையாக அப்புத்தகத்தை பார்வையிட்டவன் 'திருத்தப் பக்கங்கள்' என்ற பகுதியை இருந்தது. உடனே ஆர்வமாக எடுத்துப் பார்த்தான். அதில் அரிசி தவி்ட்டிலிருந்து நெய் கிடைக்கும் என்பதை நொய் கிடைக்கும் என்று மாற்றி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறோம் என்றிருந்தது. சுப்பன் புத்தகத்தை சுக்கு சுக்காக கிழித்தெறிந்தான்.

பி.கு. இந்தக் கதை சத்தியமாக எனது சொந்த படைப்பு இல்லை. நான் சிறுவயதில் கேட்டது (அ) படித்தது. ஞாபகத்தில் இருந்த அந்தக் 'கரு'வை தற்போது எனது சொந்த நடையில் எழுதியிருக்கிறேன், அவ்வளவுதான்
!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...