Sunday 29 March, 2009

பட்டாம்பூச்சி விருது யார் யாருக்கு?


பட்டாம்பூச்சி விருது கொடுத்து எனக்கு மரியாதை செய்த ஹரிணி அம்மா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். அடுத்து நான் மூன்று நண்பர்களுக்கு தரவேண்டும். பல நண்பர்களுக்கு தரலாம் என்று சொல்லியிருந்தால் எனக்கு பிடித்த அனைவருக்கும் வழங்கியிருக்கலாம். மூன்று நபர்கள் என்று விதிமுறை உள்ளதால் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.(யார் இந்த விருதுக்கு ஆதி மூலம்? தயவு செய்து தெரியப்படுத்தலாம். நானும் அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.)

முதலில் நான் தேர்ந்தெடுத்துள்ளது...
கோமா அவர்கள். வலைச்சரத்தை அவர் தொகுத்து அளித்த பாங்கில், அவரின் ரசிகனாகிவிட்டேன். நல்ல ரசனைக்கார அம்மணி. நீங்களும் அவரின் ஹா..ஹா..ஹாஸ்யம் வலைத்தளத்திற்கு சென்று ரசிக்க வேண்டுகிறேன்.

அடுத்து...
நண்பர் கோ.ரவிசங்கர்.
இவர் ஹைக்கூவில் கரைகண்டவராயிருக்கிறார். இவரின் பல ஹைக்கூக்கள் பிரமிப்பாய் இருக்கிறது. பதிவர்களையும் ஹைக்கூ எழுதலாம் என்று அழைக்கிறார். சமீபத்தில்தான் அறிமுகம். ஹைக்கூவால் என்னை ஈர்த்துவிட்டவர். ஹைக்கூ பிரியர்கள் அவசியம் இவரது ரவி ஆதித்யா
வலைக்கு சென்றுவாருங்கள்.

அடுத்து இவரும் ஒரு கவிநண்பர்தான்...
ஆ.முத்துராமலி்ங்கம்.
பதின்மரக்கிளை, தெருவிளக்கு, தை என மூன்று வலைத்தளங்களில் கவிதைகள் எழுதிவருகிறார். அருமையான கவிதைகள் படைக்கும் கவி்ஞர். இவரைப்போல நீண்ட கவிதைகள் எழுத நானும் முயல்கிறேன்.... ம்! நீங்களும் வாசித்துப்பாருங்கள்.

பட்டாம்பூச்சி விருதின் விதிமுறைப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை விருதை அலங்கரிங்கச் செய்ய வேண்டும்., பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடவேண்டும். அவ்வளவுதான்!

Thursday 26 March, 2009

தோழியர்களுக்கு மட்டும் இப்பதிவு

என் வீட்டுக்கு அருகில் புதிதாக ஒரு குடும்பம் குடிவந்தது. முதல் இரண்டு நாட்கள் புன்னகையிலே கழிந்தது. பின்பு என் மனைவியின் மூலம் அவர்களின் வீட்டு நிலவரம் அறிந்துகொண்டேன்.அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு பெண், இரண்டு ஆண். பெண்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பையன்களுக்கும் திருமண வயதுதான். அவர்கள் வீட்டில் எப்போதும் அந்த வீட்டு அம்மாவின் குரல்தான் கேட்கும். மற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்களா என்றே தெரியாத அளவிற்கு இருந்தது. அவர்கள் குடிவந்து சில மாதங்களில் கோடை காலம் வந்தது. கோடை வந்தாலே மின்தடையும் வரும் என்பது உத்திரவாதமான விசயமாயிற்றே. நாங்கள் இருக்கும் வீடு மிகவும் நெருக்கமாக இருக்கும். அதனால், மின்விசிறி எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருக்கும். மினதடை ஏற்பட்டால் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவோம்.(நகரத்து வாழ்க்கை அவ்வளவுதான்) அப்படித்தான் அன்றும் நடந்தது. மின்தடை ஏற்பட அனைத்து குடும்பங்களும் வராண்டாவில் கூடிற்று. நானும் பக்கத்து வீட்டுக்காரரும் மாடிக்கு சென்றோம். மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்தார்.
பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு அவரிடம் கேட்டேன், "வீட்ல நீங்க இருக்கிறதே தெரியமாட்டேங்குதே, வெளியவே வரமாட்டேங்கிறீங்க..." என்றேன்.

"வெளியே வரவே சங்கடமா இருக்கு எனக்கு. தினந்தோறும் பார்திருப்பீங்களே. என் பொண்டாட்டி பேசுறதை. நான் வாயைவே திறக்க மாட்டேன். நானும் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்திட்டேன். பிள்ளைகளுக்கு முன்னே என்னை எதுவும் சொல்லாதேன்னு. ஆனா அவ எதுவும் கேட்கிறதில்லை. அவளே என்னை மதிக்காதபோது, என் பிள்ளைகள் எங்க மதிக்கும். அதனால மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. அதனாலதான் வெளியே வர்றதில்லை" என்றார்.
எனக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
"மெதுவா அவங்களுக்கு புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்க. நிச்சயம் புரிஞ்சுப்பாங்க." என்று ஆறுதல் சொன்னேன். அதற்குள் மின்சாரம் வர, அவங்க வீட்டம்மா கூப்பி்ட சென்றுவிட்டார்.
எனக்கு அவரை நினைத்தால் பாவமாக இருந்தது. நான் என் மனைவியிடம் நடந்ததை சொன்னேன்.
என் மனைவி,"பாவமாத்தான் இருக்கு.அப்படியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன், பயப்படாதீ்ங்க"என்றாள்.

ம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!

இந்த சம்பவத்தில் ஏதேனும் நீதி தெரியுதா?
பின்னூட்டுங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! கருத்துக்களை தருக! கவிதை குரல் ' வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்.

Friday 20 March, 2009

கஜல் கவிதை

கஜல் ஓர் அறிமுகம்.
'கஜல்' அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை.
'கஜல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.

அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் 'மிர்சாகாலிப்' தான்.
கஜல் என்றாலே அதில் 'மிர்சாகாலிப்'பின் வாசம் வீசும்.' என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று...
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை

அது ஒரு
வினோதமான நெருப்பு!

பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!

- மிர்சாகாலிப்

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில...

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது

************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்.
********************************
என் நண்பரின் கஜல்...
எதை எடுப்பது?
எதை விடுப்பது?
தேநீர்கோப்பையிலும் நீ
மதுக்கோப்பையிலும் நீ
************
நெருப்பை விழுங்கியிருந்தால்
ஜீரணித்திருக்கலாம்
நானோ
காதலை விழுங்கிவிட்டேன்.
***********
உன்னைப் பார்ப்பதும்
பார்க்காமல் இருப்பதும்
கண்களுக்கு சாபம்
*********
காதல்
தாய் தந்தையில்லாத
அனாதை
அதை
நீயும் நானும்தான்
வளர்க வேண்டும்
*********
உன் வண்ணம் குழைத்தே
நிறைவடைகிறது ஓவியம்
*********
எனக்குத் தெரியும்
என்னைப்
பழி தீர்க்கத்தான்
நீ
காதலை தேர்ந்தெடுத்தாய்
- கோ. பாரதி மோகன்.

Wednesday 18 March, 2009

தனிக்குடித்தனம்

ணி ரெண்டாகிவிட்டதை கடிகாரம் சொல்லி ஓய்ந்தது. அகிலா மிகவும் களைத்துப்போய் இதயம் கனத்துப்போய் அமர்ந்திருந்தாள். அவள் கணவன் சேகர் இன்னும் வீடு வந்து சேரவில்லை. இரண்டுமாத காலமாகவே இப்படித்தான் நடந்து கொள்கிறான். மாமியார், மாமனாருடன் தெற்கு தெருவில் ஒன்றாக இருந்தபோது இப்படி நடந்து கொண்டதேயில்லை. இரவு பத்து மணிக்குமேல் வெளியில் சென்றதுமில்லை, தங்கியதுமில்லை. கூட்டுக்குடித்தனம் சரிப்பட்டு வரவில்லை அகிலாவுக்கு.

எதந்கெடுத்தாலும் மாமியார், மாமனாரைக்கேட்டு செய்வது பிடிக்கவில்லை. தினயாக பேசமுடியவில்லை. ஒரு சினமாவுக்கு போக முடியவில்லை. இப்படி ஏகப்பட்ட 'இல்லை' கூட்டுக்குடித்தனத்தில். கணவனிடம் வற்புறுத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து தனியே குடிவந்த சந்தோசம் கொஞ்ச நாட்கள்டகூட நிலைக்கவில்லை. ஒன்றாக இருந்தபோது ஒழுங்காக இருந்த சேகர், வீ்ட்டுக்கு தாமதாமக வருவதைக்கூட பொறுத்துக்கொண்ட அகிலாவால் கணவன் குடிக்கவும் ஆரம்பிக்க வெறுத்துப்போனாள். முதலில் குடிக்கவில்லை பாக்குதான் போட்டிருக்கிறேன் என்றவன் பிறகு ஒத்துக்கொண்டான். 'அப்படித்தான் செய்வேன்' என்று கூற அதிர்ந்துபோனாள். நாளாக நாளாக இரவு வீட்டிற்கு வரும் நேரம் மாறிக்கொண்டிருந்தது. அரிசியில்லை, பருப்பு இல்லை என்று சொல்லவே பயந்தாள். 'நான் எங்கே போறது? சும்மா தொந்தரவு பண்ணினே,நான் எங்கேயாவது போயிடுவேன்' என்று மிரட்டலாய் கூறினான்.

சந்தர்ப்பம் இப்படி இருக்க, ஒரு வயசு குழந்தைக்கும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று வர ரொம்பவும் வெறுத்துபோனாள். அம்மா வீட்டுக்குபோகலாம் என்றாள், அம்மாக்காரி கடுமையாக திட்டினாள். 'எங்க பேச்சை மீறி, தனிக்குடித்தனம் போனில்ல... அனுபவி! உனக்கு கீழே ஒருத்தி இருக்கா... இங்க வந்தீன்னா அவ வாழ்க்கை பாழாய் போகும். அதனால இங்க வர்ற வேலைமட்டும் வச்சுக்காதே!' என்றாள்.
அகிலாவுக்கு இப்போதுதான் உறைத்தது. தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்று.பொழுதும் விடிந்தது. இதுவரை அவனும் வரவில்லை.ஒரு கடிதம் எழுதி கணவன் பார்க்கும் இடத்தில் வைத்துவி்ட்டு, ஒருமுடிவோடு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

தாமதமாக வீடுவந்த சேகர், வழக்கத்திற்கு மாறாக வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டான். வழக்கமாக சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவி எடுத்து திறந்து உள்ளே சென்றவன், கண்ணாடிக்கருகில் காற்றில் படபடத்துக்கொண்டிருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்தான். மெல்ல புன்னகைத்துக்கொண்டான். கூட்டுக்குடித்தனத்தின் அருமையை உணர்ந்து கொண்ட அகிலாவுக்காக குடிகாரனாக போட்ட வேசத்திற்கு நல்ல பலன் கிடைத்ததில் மகிழ்ந்து போனவன் வீட்டை காலி செய்ய டெம்போவுக்கு சொல்ல கிளம்பினான். மறக்காமல் மாமியாருக்கும் நன்றி சொல்லி போன் செய்தான்.

Sunday 15 March, 2009

அறிவு வித்தியாசங்கள்

கவிஞர் அப்துல்ரகுமான் மிகச்சிறந்த கவிஞர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் 'கஜல்'வகை கவிதைகள் எழுதுவதில் தமிழில் அவருக்கு நிகர் அவர்தான். ஒரு பிரபலமான வார இதழில் அவருடைய கேள்வி பதில் பகுதி வெளியானது. அதில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி: கண்ணுக்கு மூடி(இமை) வைத்த இறைவன், செவிக்கு வைக்காதது ஏன்? அதற்கு அவர் சொன்ன பதில்: செவி உண்டியலில் நாம் எதிர்பாராத நேரத்திலும் காசு விழலாம், அதனால்தான்.
எவ்வளவு அருமையான பதில் பாருங்கள். அதுசரி எதுக்கு இவ்வளவு சப்பைபக்கட்டு என்கிறீர்களா?
இன்னைக்கு ரயிலில் வரும்போது எதிரில் ஒருவர் போனில் பேசிக்கொண்டிருந்தார். அது என் காதில் விழுந்ததா... அதை உங்ககிட்ட சொல்லிடணும்னு தோணிச்சு... அதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம யோசிச்சப்ப அப்துல்ரகுமான் உதவி செய்தார். எதிர்முனையில பேசினவங்க ஏதோ பிரச்சினையைப் பற்றி அவர்கிட்ட சொல்லியிருப்பாங்க போல, அதுக்கு அவரு ஒரு குட்டி ... இல்ல இல்ல... ரொம்ப குட்டி கதை சொன்னாரு...
ஒத்தையடிப்பாதையில யானை வந்திட்டுகிட்டிருந்திச்சு.எதிரில ஒரு பன்றி சேறுசகதியில புரண்டு எழுந்து அப்படியே வந்திட்டிருந்திச்சு. அதைப்பார்த யானை ஒதுங்கி பன்றிக்கு வழிவிட்டு விலகி நின்னுச்சாம். அதைப்பார்த்த பன்றி, "எவ்வளவு பெரிய யானை என்னைப்பார்த்து பயந்து ஒதுங்கி வழிவிட்டு விலகி நிற்குதேன்"னு திமிரோடநடந்ததாம். அந்த பன்றிக்கு அவ்வளவுதான் அறிவுன்னுட்டு போவியா" ன்னு எதிரில இருந்தவர் சொன்னாரு.யானை பலம் வாயந்தது. பன்றியைப்பற்றித்தான் உங்களுக்கே தெரியும். அட... எவ்வளவு அருமையான விளக்கம் கொடுத்தாரு. நாமகூட சூரியனை பார்த்து நாய் குலைக்குதுன்னுட்டு போ என்று சொல்வோம் அதையே இவர் வேறு பாணியில சொல்லியிருக்காரு. இருந்தாலும் நல்லா இருந்ததால உங்ககிட்ட பகிர்ந்துகிட்டேன். (எனக்கும் ஒரு பதிவுக்கு ஆச்சு)

Sunday 8 March, 2009

கொக்கு எப்படி இருக்கும்? (நகைச்சுவைக்கு மட்டும்)

கண் பார்வையற்ற ஒருவன் வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அப்போது தெருவில் ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. அந்தக்குழந்தை சாப்பிட அடம்பிடித்துக் கொண்டிருந்தது. கோபமுற்ற அந்தப் பெண்மணி அந்தக் குழந்தையை அடித்துவிட்டாள். உடனே அந்தக் குழந்தை பெரும்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தெருவில் சென்றுகொண்டிருந்த கண்பார்வையற்றவர், குழந்தை அழுத சத்தம் கேட்டு நின்று, "ஏனம்மா, குழந்தை அழுகிறது?" என்று கேட்டடார்.
அதற்கு அந்தப் பெண்மணி, "சாப்பிட அடம் பிடிக்கிறாள்" என்றாள்.
"அடம்பிக்கிற அளவுக்கு என்ன சாப்பிட கொடுக்கிறீங்க?" என்றார் அவர்.
"பால் சாதம்தான்" என்றாள் தாய்.
"பால் சாதம் என்றால் என்படி இருக்கும்?" என்றார் கண்பார்வையற்றவர்.
"பால் வெள்ளையா இருக்கும். அதை சாப்பாட்டில் கலந்து குழந்தைக்கு கொடுக்கிறேன்" என்றாள்.
"ஏம்மா, என்னிடம் வெள்ளையா இருக்கும் என்றால் எப்படி தெரியும்? ஏதாவது உதாரணம் சொல்லி சொல்லேன்?" என்றார்.
"வெள்ளை என்றால் 'கொக்கு' போல இருக்கும்" என்றாள் அவள்.
"கொக்கு எப்படி இருக்கும் என்று கண்தெரியாத என்னிடம் சொல்கிறாயம்மா. எனக்கு கொக்கு எப்படி இருக்கும் என்றே தெரியாதே!" என்றார்.
"கொக்கு இப்படித்தான் இருக்கும்" என்று தன் கையை கொக்குபோல் செய்து, கண்பார்வையற்றவரின் கையைப்பிடித்து தொட்டு காண்பித்தாள் அந்த தாய்.
அதற்கு அந்த கண்பார்வையற்றவர், "அதுசரி,இவ்வளவு பெரிய கொக்கு போல இருப்பதை குழந்தை வாயில் திணித்தாள், அந்தக் குழந்தை என்ன செய்யும் பாவம்" என்று சொன்னார்.
அந்த தாய் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.
நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். இது எனது 25 பதிவு.

Thursday 5 March, 2009

மகளிர் தின கவிதையும், கூடவே எனது குசும்பும்.

அனைத்து உலக மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்! உலக மகளிர் தினத்தை முன்னிட்டு என் நண்பனின் கவிதை. எல்லோரும் தங்களின் மனைவி்யை பற்றி இப்படி யோசித்திருப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான்?!

பால் வண்டிச் சப்தத்தில்
விழித்துக் கொள்கிறது
மனைவியின் காலை.

முற்றத்தில் குவித்த
பாத்திரங்களைக்
துலக்குதல் தொடங்கி...

பள்ளிக்கு செல்லும்
மகனின் கையசைப்பு வரை
தீவிரப்படும்
அவளின் சுழற்சி.

இருப்பதைக்கொண்டு
பகல் உணவுமுடித்தவளை
மலைக்க வைக்கும்
அவிழ்த்தெறிந்த
முந்தைய அழுக்குகள்...

மல்லுக்கு நின்றபின்
மறுபடி செல்வாள்
அடுக்களையுத்தத்திற்கு.

இரவில்
எல்லாம் முடிந்ததென
எடுத்து வைப்பாள்
கொட்டாவி விட்டபடி

காலை முதல்
இரவு வரை-

அடுக்களையில் உழன்றவளை
அணைக்கத் தொடுகையில்
கூசுகிறது மனசு.

- கோ. பாரதிமோகன், கும்பகோணம்.


மேற்கண்ட கவிதை நடுத்தர வர்க்கத்தினரிடையே நடைபெறும்.
மேல்தட்டு மக்களிடையே எப்படி நடைபெறும் என்பது பற்றிய எனது குசும்பு கீழே...
காலையில எந்திரிச்சு,பாத்திரம் விளக்கி, காபி போட்டு, பிள்ளைகளை குளிபாட்டி, சாப்பிட வைச்சு, அவருக்கு டிபன் எடுத்து அனுப்பி, துணிகளை துவைச்சு...ஸ்... டயடா எனக்கா... நெவர்... ஏன்னா, எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)

Wednesday 4 March, 2009

உங்கள் நண்பரின் பதிவை தவற விடுபவரா நீங்கள்?

'கற்றது கை மண்ணளவு' அப்படின்னு சொல்வாங்க. வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் கண்ணைக்கட்டி காற்றில் விட்டது போலிருந்தது. வலைத்தளம் ஆரம்பிக்கவே நிறைய பயிற்சிகள் செய்தேன் என்பது வேறு விசயம். பின்பு பலரின் வலைத்தளங்களுக்கு சென்று பல புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். அதுபோல் எனக்கு தெரிந்ததை இங்கு உங்களுக்கு சொல்கிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவர்களுக்காக அல்ல... என்னைப்போல் அறிந்துகொள்ள ஆர்வமுள்ள, ஆனால் வழி தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு!விரும்பி வாசிக்கும் சில வலைத்தளத்திற்கு நீ்ங்கள் பாலோவராகவும் ஆகியிருப்பீர்கள். அப்படி ஆகியிருப்பவர்கள், அவர்களின் வலைத்தளத்தில் புதிய பதிவு போடுவதை எப்படி அறிவீர்கள்?அவரின் வலைத்தளத்திற்கு சென்று பார்போம்! இதென்ன புதுசா கேட்கிறே?என்று என்னை முறைக்காதீர்கள்!அவர்களின் வலைதளத்திற்கு சென்றுதான் பார்ப்பேன் என்பது உங்கள் பதிலாக இருக்குமென்றால், இனி அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தினந்தோறும் உங்கள் வலைத்தளத்திற்கு தவறாது வருகை புரிவீர்கள் தானே அப்புறமென்ன!உங்கள் வலைத்திலிருந்தே (அங்கு சென்று பார்க்காமலேயே) புதிய பதிவு போடப்பட்டிருக்கிறதா? என்பைத அறிய எளிய வழி உள்ளது.முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு சென்று, டேஸ்போர்டை திறந்துகொள்ளுங்கள். ஆட்கெஜட் பகுதியை கிளிக் செய்க. அதில், பிளாக் லிஸ்ட் என்பதில் க்ளிக் செய்க.
தோன்றும் பகுதியில் தலைப்பில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை (உ.தா= நண்பர்களின் வலைத்தளம்) கொடுத்து, அதில் கேட்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு விருப்பமான ஆப்சனை தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஆட்லிஸ்ட் என்பதை க்ளிக் செய்யு்ஙகள்.
கீழே உள்ளதுபோல் தோன்றும். அதில் நான் பின்தொடரும் அனைத்தும் என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பின்பு ஆட் செய்யுங்கள். அதன்பிறகு கேட்கும் கேள்விகள் உங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுங்கள். பிறகு சேவ் செய்க. பிறகு லேவுட் பகுதி தோன்றும். அங்கு சேவ் செய்துகொண்டு, உங்கள் வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

இப்போது உங்கள் விருப்பமானவர்களின் வலைதளத்ததில் ஒரு புதிய பதிவு இடப்பட்டால் உங்கள் வலைத்தளத்திலிருந்து பார்த்து, உடன் அந்த தளத்தை க்ளிக் செய்து உடன் பின்னூட்டமிட்டு கலக்கலாம். தவறவிடமாட்டீர்கள், இனி!உங்கள் நண்பரும் மகிழ்வார்! இதற்கு பின்னூட்டமிட மறந்துவிடாதீர்கள்!



Sunday 1 March, 2009

அரிசி தவிட்டிலிருந்து நெய் கிடைக்குமா? சுப்பனின் ஆராய்ச்சி.

நம்ம கதையின் நாயகன் சுப்பன். முதல் இவனோட பாத்திரப்படைப்பை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? இவனுக்கு பெரிய அளவில பேரெடுக்கணும், எல்லாரும் தன்னை புகழனும்னு ஆசை. அதற்காக என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு எட்டிய அளவிற்கு அறிவிற்கு முயற்சிகளும் தொடர்ந்தான்.
யாரோ ஒருத்தர் நிறைய படிச்சா புதுப்புது விடயங்கள் கிடைக்கும். அதிலிருந்து புதுசா ஏதாவது திட்டங்களை செய்றபடுத்தலாம்னு சொன்னார். அதிலிருந்து வடை மடிச்சுவர பேப்பரகூட விடுறதில்லை.
அப்படித்தான் ஒருமுறை வடை சாப்பிடும்போது வந்த பேப்பரில ஒரு புத்தகத்தோட பொருளடக்கம் பக்கம் மட்டும் இருந்தது. அதில பல தலைப்புகள் இருந்தது. அதையும் படிச்சான். 'அட்ரா சக்கை'னு வாய்விட்டு கத்தினான். கடைக்காரர்கள் எல்லாரும் பார்க்க, பேப்பரை மடிச்சு வச்சிகிட்டு வீட்டைப்பார்க ஓடினான்.

அந்தப் புத்தகத்தில அப்படி என்னதான் எழுதியிரந்துச்சி்ன்னு கேட்கிறீங்களா?
வீணாகும் பொருட்களிலிருந்தும் பயனுள்ள பொருட்கள் கிடைக்கும்! என்பதுதான், அந்த புத்தக பக்கத்தில் இருந்த விடயம்.

அதில நம்ம சுப்பனுக்கு பிடித்த விடயம், அரிசி (உமி) தவிட்டில் முயற்சி செய்தால் நெய் கிடைக்கும்! என்ற தலைப்பு இருந்ததுதான்.

இதுவரை யாரும் அப்படி முயற்சி செய்தது மாதிரி தெரியவில்லையே! இதை நாம் முயற்சி செய்தால் பெரும் பணமும், புகழும் கிடைக்கும் என்று எண்ணியபோதே, அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? இந்தப் பக்கத்தை கொண்ட முழுப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் நல்லது. அப்போதுதானே நமமு முயற்சியை தொடரமுடியும் என்று யோசித்தான்.
ழைய புத்தகங்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கிடைக்கும் என்று அவனது புலனாய்வில் கண்டுபிடித்தான்.
உடனே அங்கு பயணமானான். அங்கிருந்த புத்தக கடைகளை முழுவதுமாக அலசி ஆராய்ந்தான். கடைசியாக புத்தகத்தை கண்டுபிடித்தான்.
புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீடு நோக்கி பறந்தான். உலகமே அவன் கையில் சிக்கி விட்டதாக கற்பனையில் மிதந்தான். வீட்டிற்குள் சென்று தன் அறைக்கதவை சாத்திக் கொண்டு புத்தகத்தை முழுவதும் படித்தான். படித்ததும் குழம்பிப் போனான். அரிசி தவிட்டை முறத்தால் புடைத்தால் நெய் கிடைக்கும் என்றிருந்தது. வெறுமனே புடைத்தால் போதுமா? அப்படி புடைத்தால் எப்படி நெய் கிடைக்கும்? இதைப் பற்றி யாரிடம் கேட்பது? யாரிடம் கேட்கவும் பயந்தான். இதை அவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால்...ம்! நாமே யோசனை செய்வோம் என்று தீவிரமாக முயற்சி செய்தும் பிடிபடவில்லை.
களைப்பு மிகுதியால் புத்தகத்தை வீசி எறிந்தான். புத்தகம் புரண்டு விழுந்ததில் பக்கங்கள் மாறிப்போனது. யதோச்சையாக அப்புத்தகத்தை பார்வையிட்டவன் 'திருத்தப் பக்கங்கள்' என்ற பகுதியை இருந்தது. உடனே ஆர்வமாக எடுத்துப் பார்த்தான். அதில் அரிசி தவி்ட்டிலிருந்து நெய் கிடைக்கும் என்பதை நொய் கிடைக்கும் என்று மாற்றி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறோம் என்றிருந்தது. சுப்பன் புத்தகத்தை சுக்கு சுக்காக கிழித்தெறிந்தான்.

பி.கு. இந்தக் கதை சத்தியமாக எனது சொந்த படைப்பு இல்லை. நான் சிறுவயதில் கேட்டது (அ) படித்தது. ஞாபகத்தில் இருந்த அந்தக் 'கரு'வை தற்போது எனது சொந்த நடையில் எழுதியிருக்கிறேன், அவ்வளவுதான்
!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...