Tuesday 28 July, 2009

உங்களுக்காக... (28.07.2009)

டித்தள்ளுபடி தரும் திட்டம் வந்ததெப்படி?

ஆடிமாதம் வந்தால் போதும் வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். மக்களும் பொருட்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். தள்ளுபடி வழங்க ஆடி மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
இதற்கு முக்கிய காரணம் விவசாயிகள்தான். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்பதறிவோம். அப்போதெல்லாம் பிரதான தொழிலே விவசாயம்தான். விவசாயிகள் ஆடி மாதம்தான் தங்கள் நிலங்களில் விவசாயத் தொழிலை ஆரம்பிப்பார்கள். தங்களின் கையிருப்பைக் கொண்டு விதைகள், உரங்கள் வாங்கவும், தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கவென செலவிடுவார்கள். தை மாதம்தான் அறுவடை செய்வார்கள். அப்போதுதான் அவர்களிடம் மீண்டும் பணப்புழக்கம் இருக்கும். ஆடி - தை மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக்கும். அந்த மந்த நிலையைக் களைந்து பொதுமக்களை ஈர்த்து வியாபாரம் செய்யவே இந்த ஆடித்தள்ளுபடி திட்டம்' வந்தது எனலாம்.


ழைப்பவர்களுக்குத்தான் எப்போதும் பெருமை என்பதை சிறுவர்களிடமும் பாடல்களின் வழியாக புகுத்திய பழைய பாட்டு ஒன்று. (நீங்களும் பாடியிருப்பீர்கள் தானே?)

மழ வருது
மழ வருது
நெல் அள்ளுங்க.

முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

ஏர் உழர மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மாக்கிடக்கிற
மாமனுக்கு சூடு வையுங்க.


ஞ்ச ஒழிப்புத்துறை சுறுசுறுப்பா ஆயிட்டாங்களா? இல்லை மக்களிடம் விழிப்புணர்வு வந்துடிச்சான்னு தெரியலைங்க. சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது. இதைப்படிக்கும் போது உங்களுக்கும் இவரையெல்லாம் பிடிக்காம இருக்கிறாங்களேன்னு யாரையாவது பார்த்து நெனைச்சிருக்கீங்களா? இன்னும் ஏன் மனசுக்குள்ளே நெனைக்கிறீங்க... செயல்படுத்திட வேண்டியதுதானே. எப்படி தெரியப்படுத்துறது? நம்மள அடையாளம் வைச்சிக்கிட்டு பின்னாடி பழிவாங்குவாங்களேன்னு பயம் இருக்கா? அப்ப ஒன்ணு செய்யுங்க...

இந்த எண்ணுக்கு போன் (பொது தொலைபேசியிலிருந்துதான் போன் பண்ணுங்களேன்...)

தொலைபேசி எண் - 044- 2825 5899

செல் - 94440 49224

மெயிலும் அனுப்பலாங்க... Spl acchn @ cbi.gov.in


ப்புறம் பெண்களை கிண்டல் செய்யறவங்களைப் பற்றி புகார் சொல்ல, சாலை விபத்து பற்றிய தகவல் சொல்ல விரும்புறீங்களா அதுக்கு ஒரு ஒரு செல் பேசி எண் இருக்குங்க...

செல் - 95000 99100 இந்த எண்ணுக்கு எஸ்.எம். எஸ். பண்ணினா போதும் உடனடி நடவடிக்கைன்னு சொல்றாங்க.


சைட்டாலஜி என்றால் என்ன தெரியுமா?

மனதை அரிக்கும் பெண்களைப் பற்றியது இல்லைங்க...
மண்ணை அரிக்கும் செல்/ கரையான் பற்றி படிக்கும் படிப்புக்குத்தான் இப்படி சொல்றாங்கோ...


ப்புறம் படிச்சிட்டீங்களா கருத்துக்களை மறக்காம பின்னூட்டமா தெரிவிச்சிட மறக்காதீங்க.

தமிழிஷ்-ல் இந்த இடுகை.

Friday 24 July, 2009

பிரபல / புதிய பதிவர்களே...

வலையுலகில் இடப்படும் இடுகைகளை நீங்கள் எவ்விதம் தேர்ந்தெடுத்து படிப்பீர்கள்?

1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.
2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை மட்டும் படிப்பேன்.
3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
4.தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.
5.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை மட்டும்தான் படிப்பேன்.
6.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்.
7.பிரபல பதிவர்களின் இடுகைகளை மட்டும்தான் படிப்பேன்.
8.பெண் பதிவர்களின் இடுகைகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
9.இலக்கியம், கவிதை படைப்புகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.
அல்லது... (உங்கள் சாய்ஸ் என்ன...?)

தயவு செய்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இதில் அரசியல், உள்குத்து ஏதும் இல்லை.

Tuesday 21 July, 2009

சுவாரசிய பதிவர் விருது!


ந்த வாரம் முழுவதும் தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார் செந்தழல் ரவி. சுவாரசிய பதிவர் விருதை பதிவர் செந்தழல் ரவி அவர்கள் தொடக்கி வைத்து இன்று பெரும்பாலான பதிவுகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த தொடர் சங்கிலி விருது தோழர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள் மூலம் எனக்கு கிடைக்கப் பெற்றேன். அவருக்கு வாழ்த்துகளை இதன் மூலமும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விதிமுறைகளின்படி நானும் ஆறு சுவாரசிய பதிவர்களுக்கு தரவேண்டும். அதன்படி-

1. அடர்கருப்பு - காமராஜ்
2. குழந்தை ஓவியம் - ஆதவா
3.வேலன்
4. சண்டைக்கோழி (எ) பொன்னாத்தா - நிலாவும் அம்மாவும்
5. ரசனைக்காரி - ராஜி
6.வலைமனை - சுகுமார்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியம் தருபவர்கள்.
விதிமுறைப்படி விருதுபெற்ற நீங்களும் ஆறு பேருக்கு கொடுத்துவிடுங்கள்.

Sunday 19 July, 2009

அம்மா


பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியும் குழந்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது.

அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள்... சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள்... பார்க்க பார்க்க ஆசையாகத்தான் இருந்தது.

மனைவிக்கு பிரவசவலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். அப்போதே போன் செய்து எனக்கும் சொல்லிவிட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றால், அங்கு டாக்டர்கள் இது பொய் வலி. வீட்டிற்கு அழைத்துப் போங்கள் நன்கு வலி எடுத்தால் வந்தால் போதும் என்க, என் மனைவிக்கு பயம். முதல் பிரசவம் அல்லவா. 'இல்லை நான் இங்கேயே இருக்கேன்' என்றாள். அவள் பயப்படுவதைப் பார்த்ததும் அனைவரும் சரி என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்தே குழந்தை பிறந்தது. அதனால் விடுப்பு நாட்கள் எடுத்ததையும் தாண்டி இருக்கும்படி ஆகிவிட்டது. குழந்தை பிறந்த மறுநாள் சொல்லிக் கொண்டு உடனே வேலைக்கு வந்துவிட்டேன்.

குழந்தை ஆசை தீர கொஞ்சிக் கொண்டிருந்தேன். அப்போது சிறுநீர் கழிக்க, 'அய்யய்ய' என்றவாறு மனைவியை கூப்பிட்டேன். மனைவி வேகமாக வந்து, 'என்ன உச்சா போய்ட்டான். அவ்வளவுதானே? இதுக்கு போய் என்ன முகத்தை சுழிக்கிறீங்க என்னமோ 'கக்கா' போன மாதிரி?' என்றாள்.

நான் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன். பிரவசத்துக்குப் பிறகு இவளே ரொம்ப மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன்.

குழந்தைக்கு துணி மாற்றிவிட்டு அவள் சென்ற சிறிது நேரத்தில் அவள் சொன்ன மாதிரி கக்கா போய்விட்டான். 'சுந்தரி நீ சொன்ன மாதிரி கக்காய் போய்ட்டான்' என்றேன்.
திரும்பவும் வந்து துணி மாற்றிச் சென்றாள். மணியாகிவிட்டதை உணர்ந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன்.

வேலை முடிந்ததும் எப்போதும் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு தாமதமாக வீடுவரும் நான், இன்று குழந்தையை கொஞ்சுவதற்காகவே அவசர அவசரமாக வந்து சேர்ந்தேன். மனைவி என்னை வித்தியாசமாக பார்த்தாள்.

ரவெல்லாம் குழந்தை அழுதபடியே இருந்தது.'என்னடி குழந்தை தூங்காம அழுதுகிட்டே இருக்கு' என்றேன்.

'இராத்திரியில பிறந்த குழந்தைங்க அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும். நீங்க வேணும்னா ஹால்ல போய் தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்.' என்றாள்.

இது எனக்கு புது தகவலாக இருந்தது. வேலைக்கு செல்லவேண்டுமே என்பதால் ஹாலில் வந்து படுத்துக் கொண்டேன். ஆனாலும் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. அப்போ அம்மாவும் இப்படித்தான் கண்முழிச்சி கஷ்டப்பட்டிருப்பாளோ? சிந்தனைகள் எங்கெங்கோ சென்றது.

'மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்து முகத்தை காண்பிச்சிட்டு போடா' -அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இந்த வாரம் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருவதுதான் முதல் வேலை என்று நினைத்துக் கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூக்கம் வந்தது.

Saturday 18 July, 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது



இந்த விருதை ரங்கன் அவர்கள் ஆரம்பித்து வைத்து அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார். எனக்கு இந்த நண்பருக்கு விருததை, மௌனராகங்கள் ஜெஸ்வந்தி அவர்கள் வழங்கியிருக்கிறார்.

இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.

இந்த நண்பர்கள் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த விருதை நான் யாருக்கும் வழங்கப் போவதில்லை. இதற்காக எனக்கு வலையுலகில் நண்பர்கள் யாருமில்லையா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் எனக்கு நண்பர்களே. அதனால்தான் இந்த விருதை ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரை நான் இழக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவுக்கு ஆரம்பித்து வைத்த ரங்கன் மற்றும் எனக்கு வழங்கிய ஜெஸ்வந்தியும் மன்னிப்பார்களாக...
ரங்கன் அவர்கள் விருது பற்றிய விதிமுறைகளை மதித்து எனது வலையில் இதை அலங்கரிக்க வைத்துள்ளேன். நன்றி.

Wednesday 15 July, 2009

அன்பு - 50!



குடந்தையில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்னால் வாய்க்கால் இருந்தது. விடுமுறை தினங்களில் என் நண்பர்கள் எல்லாரும் அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். வாய்க்கால் ஓரம் இருக்கும் மூங்கில் குத்தில் சிறிய மூங்கில் குச்சியை உடைத்து அதில் இருக்கும் முள்ளை அகற்றிவிட்டு, கடையில் நரம்பு நூலும், மீன் (பிடிக்க பயன்படும்) முள்ளும் வாங்கி, தூண்டில் தயார் செய்வோம்.

பின்பு மண்புழுக்களை தேடிப் பிடித்து அதை துண்டுகளாக்கி அந்த முள்ளில் மாட்டி, அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். மீன் பிடிப்பதற்கு வசதியாக வாய்க்கால் ஓரம் இருக்கும் இலவ பஞ்சு மரத்தில் (தலையணை, மெத்தை தயாரிக்க பயன்படும் இலவபஞ்சு மரம். பருத்திச் செடிகளிலும் பஞ்சு கிடைக்கும்.) ஏறி அதன் கிளையில் அமர்ந்து கொண்டு மீன் பிடிப்போம்.

அப்படித்தான் அன்றும் மீனுக்காக தூண்டிலை வீசி காத்திருந்தோம். தூண்டிலின் தக்கை துடிக்கவும் வேகமாக இழுத்தோம். அந்த தூண்டிலில் மாட்டியிருந்தது, மீனல்ல பாம்பு. அலறியடித்துக் கொண்டு தூண்டிலை வீசியெறிந்துவிட்டு ஓடி வந்துவிட்டோம். அன்றிலிருந்து மீன் பிடிப்பதையே விட்டுவிட்டோம்.

பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது.

னக்கு திருமணம் முடிந்த மறுநாள் காலை சிற்றுண்டி சாப்பிட நானும், எனது அண்ணன் மற்றும் மைத்துனர்களுடன் அமர்ந்தேன். அனைவருக்கும் இலையில் இட்டலி(வி)யை வைத்தார்கள். நாங்கள் சாப்பிட அமர்ந்திருக்கும் அறைக்கு எதிரில் என் அத்தைப் பெண்கள் (மூத்தவர்களும், இளையவர்களும்) நின்று கொண்டு எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நம்மைப்பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டு என்னை நானே பார்த்துக் கொண்டேன். எல்லாம் சரியாத்தானே இருக்கு? பின் ஏன் சிரிக்கிறார்கள்?

இரண்டு இட்டலி சாப்பிட்டிருப்பேன். என் மனைவி உள்ளிருந்து, அந்த இட்டலி என்று குரல் கொடுப்பதற்குள் அவரின் வாயைப் பொத்தி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்த நேரம் என் அப்பா அங்கு வர அனைவரும் அங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டார்கள். அப்போது வேகமாக வந்த என் அண்ணி என் இலையிலிருந்த இரண்டு இட்டலிகளை எடுத்துக் கொண்டு வேறு இட்டலி வைத்தார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் சிரித்ததற்கும், அண்ணி இப்பொழுது இரண்டு இட்டலிகளை எடுத்துச் செல்வதற்கும் என்ன காரணம் என்று குழப்பத்துடன் எழுந்து போனேன். பிறகு என் மனைவி வந்து கூறியதுதான் விடயமே புரிந்தது. அந்த இரண்டு இட்டலியில் ஒன்றின் உள்ளே புளியங் கொட்டையை வைத்திருக்கிறார்கள். மற்றொன்றின் மீது தூள் உப்பை தூவியிருக்கிறார்கள் என்று.

கல்யாண மாப்பிள்ளைகளாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்ங்கிறதுக்காக இதைச் சொல்றேன். (இல்லைன்னா இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.... கல்யாண மாப்பிள்ளைகளை இப்படியெல்லாம் கலாட்டா செய்யவும் வழியிருக்கு...)


அதுசரி.... தலைப்பு எதற்கு அன்பு-50! இது என் 50-வது இடுகை. அதுதான் வேறொன்றுமில்லை.

நன்றி - யூத்புல் விகடன் குட் பிளாக்ஸ்-ல் இந்த இடுகை...

Friday 10 July, 2009

அவன், அவள், அது (உயிரோடை சிறுகதைப் போட்டிக்ககாக எழுதப்பட்டது)

முதலிரவு அறைக்குள் பால் சொம்புடன் நுழைந்தாள் அவள். உள்ளே நுழையும் போதே பார்த்தாள். அவன் கட்டிலுக்கு அப்பால் ஜன்னலோரத்தில் நின்று கொண்டு சிகெரட் பிடித்துக் கொண்டிருப்பதை. இவள் நுழைந்ததைக்கூட அவன் பொருட்படுத்த வில்லை. திருமணத்தின் போதுகூட அவன் முகம் உம்மென்று இருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
அப்போதே அவளுக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது. நாம் அடியெடுத்து வைக்கும் இடம் எப்படி இருக்குமோ என்று. அம்மா, அப்பாவை சின்ன வயதிலேயே இழந்தவள். அண்ணனின் தயவில் அண்ணியின் திட்டுக்களில் வளர்ந்தவள். இப்போது மாப்பிள்ளை பற்றி சொன்னால் போதும் அண்ணி சாமியாடிவிடுவாள் என்பதால் என்ன இருந்தாலும் பேசி சரி பண்ணிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில்தான் கழுத்தை நீட்டினாள்.

"பால் சாப்பிடுறீங்களா?"

சிகெரட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு அவளருகில் வந்தான். "இதோ பாரு... நீ என்னன்வோ கற்பனைப் பண்ணிக்கிட்டு இங்க வந்திருப்பே.... இங்க அப்படி எதுவும் நடக்காது. நான் ஒரு பெண்ணை தீவிரமா காதலிச்சேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதாகவும் இருந்தேன். ஆனா, நடக்கல. என் வாழ்க்கையில அவளுக்கு மட்டும்தான் இடம். உன்மேல காதல் இல்லாம, விருப்பம் இல்லாம உன்கிட்ட உறவு வைச்சிக்க முடியாது. நான் காமந்தரன் இல்ல. வாழ்க்கையை அனுபவிக்கணும்னா காதலிக்கணும். காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்யணும். அந்த அனுபவமே வேற. அவ கிடைக்கலைங்கிறதுக்காக உன்னைக் காதலிக்கவும் முடியாது. என் நிலைமையை புரிஞ்சிக்க."

படபடவென்று பேசி முடித்தவனை பார்த்து திக்கித்து நின்றாள். இது பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய விசயமல்ல. இவனிடம் அதிகப்படியான அன்பு செலுத்தித்தான் மாற்றணும் என்று புரிந்து கொண்டாள். மாற்ற முடியுமா என்று மலைப்பும் வந்தது.
கட்டிலில் கிடந்த தலையணையில் ஒன்றை எடுத்துக் கொண்டு கீழே பெட்ஷீட்டை விரித்து படுத்துக் கொண்டாள்.

அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும், பதிலும் இல்லாததைக் கண்டு அவனுக்கே ஒருமாதிரியாகத்தான் இருந்தது. எவ்வளவு அதிர்ச்சியான தகவலைச் சொல்லியிருக்கிறேன், ஒருவித ரியாக்சனும் இன்றி இருக்கிறாளே...


பொழுது விடிந்தது. முதலிரவில் நடந்ததை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாள். அவராக சொன்னாலன்றி எதுவும் கேட்கக்கூடாது என்று மனஉறுதியுடன் இருந்தாள். அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று மாமியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

திருமண விடுப்பு முடிந்து அலுவலகத்திற்கு சென்றான். மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றாள். முதலில் உன்னை இங்கல்லாம் யாரு வரச்சொன்னது என்று அவன் கத்தினான். அத்தைதான் கொடுத்தனுப்பிச்சாங்க என்றதும்தான் அடங்கினான். அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு வியப்பை அளித்தாலும் அவனால் காதலியை மறக்க முடியாமல் தவித்தான். அந்த தவிப்பு இவளிடம் வெறுப்பாக உமிழ்ந்தது. மாதங்கள் உருண்டோடியது. அவனை மட்டும் அசைக்கவே முடியவில்லை. மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த சமயத்தில்தான் குமார் அறிமுகமானான். அந்த அலுவலகத்திலேதான் வேலை பார்க்கிறான். முதலில் மெல்லிய புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பற்றிக் கொண்டது. ஒரு நாள் அவர்கள் இருவரும் காணாமல் போனார்கள்.

முதலில் அவனால் இதை நம்பமுடியவில்லை. விரக்தியில் பாருக்கு சென்று தண்ணியடிக்க ஆரம்பித்தான். அவனுக்குள் கேள்விகள் பல மண்டையைக் குடைய ஆரம்பித்தது. எவ்வளவுதான் விலக்கிப் போனாலும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டவள் எப்படி ஓடிப் போனாள்? அப்படி என்ன உடல் சுகம் வேண்டிக்கிடக்கிறது? மண்ணரிக்கப் போகும் இந்த சரீரத்திற்கு இத்தனை வீரியமா? இந்த உலகில் காதலைவிட காமம்தான் பெரிதா? போதை ஏற ஏற அதையும் அனுபவித்து பார்த்துவிடுவது என்று நினைத்தான். ரூம்பாயை கூப்பிட்டு விசயத்தைச் சொன்னான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு அழகான பெண் வந்தாள். அவளை நெருங்க எழுந்தவன் போதையில் தள்ளாடி விழுந்தான். அவள் பதறிப் போய் அவனைப் பிடித்து மெல்ல கட்டிலில் அமர்த்தினாள். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வாந்தியெடுத்தான். சட்டென அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு பாத்ரூமிற்கு அழைத்துப் போனாள். கொஞ்சம் நிலைமை சரியாகியதும், முகமெல்லாம் துடைத்துவிட்டு சோபாவில் அவனை அமரவைத்துவிட்டு தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவன் நெஞ்சை நீவிவிட்டாள்.

காசுக்காக உடலை விற்கும் அவள் செய்யும் பணிவிடைகளைப் பார்த்தான். அவனுக்கு அவன் மனைவியின் ஞாபகம் வந்தது. காமம் தாண்டிய அன்பு புரிந்தது. அந்த அன்பில் கிறங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் இப்போது காதலியின் நினைவு சுத்தமாக அழிந்து போயிருந்தது.

Thursday 9 July, 2009

திருமணம்

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...



ப்போதெல்லாம் எண்ணெய் பதார்த்தங்களை விலக்கிவிடுகிறேன். மசாலா ஐயிட்டங்களையும்தான். கோழிக்கறி சூடு என்றார்கள் அதனால் அதையும் தள்ளி வைத்தாகிவிட்டது. காய்கறிகளில் கேரட் தவறாமல் இடம்பெறுவது போல் பார்த்துக் கொள்கிறேன். கேரட் கண்களுக்கும் நல்லதாமே! இல்லையென்றால் கண்ணாடி போடுவது போலாகிவிட்டால் அழகே போய்விடும். அதோடு கிண்டல் வேறு செய்வார்கள்.

உடையலங்காரத்திலும் முன்பைவிட அதிகம் கவனம் செலுத்துகிறேன். அடிக்கடி முகம் கழுவுதலும் நடக்கிறது. முகப்பரு வராமல் பார்த்துக் கொள்வதும் பரு வந்தால் கிள்ளாமல் அதைப் போக்கவும் செய்கிறேன். கிள்ளினால் சீழ் பிடித்து வடுவாக மாறிவிடும் என்று டீ.வியில் டாக்டர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் அப்படியே படிந்துவிட்டது. முகம் அழகாயிருப்பது முக்கியமல்லவா. அழகுக்குத்தான் இந்த உலகத்தில் முக்கியத்துவம். குணம் இரண்டாம் பட்சம்தானே.

எனக்கு தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். பார்ப்பவர்கள் அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள், 'இந்த தலைமுடிதான் உனக்கு அழகு' என்று. இப்போது ஆங்காங்கே ஒன்றிரண்டு வெள்ளை முடி தென்படுகிறது. இருக்காதா பின்னே வயது முப்பதை நெருங்கிவிட்டதே...

இப்போதெல்லாம் என் குடும்பத்தினருக்குகூட என்னைப் பிடிக்கவேயில்லை. அதுபற்றிகூட நான் கவலைப்படவில்லை. பாசமாக இருந்த என் தம்பி, 'இவளுக்கு எப்ப கல்யாணம் ஆகிறது நான் எப்ப கல்யாணம் செய்துக்கிறது. என்கூட படிச்ச பசங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தைங்க கூட இருக்கு' என்று அலுத்துக் கொள்கிறான். அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.

Tuesday 7 July, 2009

குட்டிச் சுவர்

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...

ப்போதும் ஊருக்குப் போனாலும் சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து நலம் விசாரிக்கிறேனோ இல்லையோ சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை ஒரு ரவுண்ட் வந்தால்தான் ஒரு திருப்தி கிடைக்கிறது. கடைசியாக அந்தக் குட்டிச் சுவர்மீது கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருவதுதான் என்னுடைய வ(ப)ழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தக் குட்டிச் சுவருக்கு ஒரு வரலாறே உண்டு.

என் நண்பர்கள் அனைவரும் வழக்கமாக சந்திக்கும் இடம் அந்த குட்டிச்சுவர்தான். பேருந்து நிலையம் அருகில் அமைந்திருந்ததால்தான் அந்தக் குட்டிச் சுவர் எங்களால் தத்தெடுக்கப்பட்டது. வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் ('ஜொள்'விட்டுக்) கொண்டு அமர்ந்திருப்போம்.

அது மட்டுமல்ல... என் நண்பர்களின் சோக கதைகள் சந்தோஷங்கள் எல்லாம் பரிமாறிக் கொள்வதும் அங்கேதான். பேருந்து நிலையம் அருகே அப்படி ஒரு இடம் அமைவதே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்தை வாங்க பிரபல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பாகப் பிரிவினை தகராறில் வழக்கு கோர்ட்டில் இருந்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது.

படிப்பு முடிந்து ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு ஊராக வேலைக்கு கிளம்பிவிட்டோம். இப்போதெல்லாம் போனில்தான் தொடர்பு. என்ன இருந்தாலும் முகம் பார்த்து பேசுவது போல் வருமா? இப்போது அந்தக் குட்டிச் சுவர் அனாதையாக நிற்கிறது. எப்போதும் ஊருக்கு வந்தாலும்... (முதல் பாராவை திரும்பவும் படித்துக் கொள்ளவும்.)

வருடங்கள் பல கழித்து இப்போது சொந்த ஊருக்கு சென்றபோதும் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டு அந்தக் குட்டிச் சுவர் இருக்கும் இடத்திற்கு சென்றபோது, அங்கே மிகப் பெரிய வணிக வளாகம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்த வளாகத்திற்குள்ளே ஆண், பெண் நண்பர்கள் பலர் அரட்டை அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...



(இந்தப் படத்துக்குரிய செய்தி இங்கு இல்லை)

"என்ன ராமசாமி வீட்டு பக்கமே காணுமேன்னு பார்த்தா தங்கம் சீரியல் பார்த்திக்கிட்டு உட்கார்ந்திருக்கியா?"

"புதுசா ஆரம்பிச்சிருக்காங்களே. எப்படி இருக்குன்னு பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரிதான் போகுது."

"அரசியல் கட்சிகளும் அவங்க போடுற பட்ஜெட்டும்கூட ஒரேமாதிரிதான் போகுது."

"என்னப்பா பட்ஜெட் பத்தி சொல்லி பயமுறுத்துற? என்ன விசயம்?"

"மத்திய அரசின் பட்ஜெட்டில வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரிவிதிப்பு உயர்த்தி இருக்காங்கப்பா"

"அடக்கொடுமையே! ஏற்கெனவே தங்கம் பதிமூன்றாயிரத்தை தாண்டிச்சிடுச்சு. இப்படி செஞ்சா ஏழைபாளைங்க என்ன பண்றது?"

"ஏன் இந்த வரி உயர்த்தப்படுதுன்னு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு காரணத்தையும் சொல்றாரு... 2004 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் உயர்த்தப்படுதாம். இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவாங்கன்னு தெரியும். அதனால்தான் வணிகமுத்திரை (பிராண்டட்) நகைகள் உற்பத்திக்கு மீதான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறதுங்கிறாரு."

"என்ன நம்ம ஆற்காடு மின்சாரத்தைப் பத்தி பேசின மாதிரியே பேசறாரு. அது கிடக்கட்டும், அப்ப தங்க விலை குறையுமா?"

"அதுதான் இல்ல... பிராண்டட் நகைகள் உற்பத்தி செய்யிற நிறுவனங்கள் மிகவும் கம்மி. இதனால பொதுமக்களுக்கு பலன் எதுவும் இல்லைங்கிறாரு இந்திய தங்க மார்க்கெட் தலைவர் சீல்சந்த் ஜெயின். அதோட பிராண்டட் நகைகளுக்கு இப்போது 2 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படுகிறதாம். இதை ரத்து செய்வது என்பது வெறும் கண்துடைப்புதான்."

"ஏற்கெனவே வரதட்சணையால பெண்களுக்கு திருமணம் நடக்கிறதே அபூர்வமா இருக்கு. இதனால பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் சாபத்துக்கு ஆளாவார்ங்கிறது மட்டும் உறுதி."

"வரதட்சணைன்னு சொன்னோன்னதான் ஞாபகத்துக்கு வருது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில நிலம்பூர்ங்கிற கிராமத்தில வரதட்சணை கொடுமையை ஒழிக்கிறதில கிராம பஞ்சாயத்து தலைவர் சாதனை பண்ணியிருக்காரு."

"என்னப்பா சொல்றே? வரதட்சணையை ஒழிச்சிருக்காரா?"

"ஆமாம்பா. நாற்பதாயிரம் பேர் வசிக்கிற அந்த கிராமத்தில 30 வயதாகியும் திருமணம் செய்ய முடியாம 1,300 பேர் இருக்கிறதா அவருக்கு தெரிய வந்திருக்கு. அதோட வரதட்சணை கொடுத்து மகளை வாழ வைச்ச பல குடும்பங்கள் வறுமையில வாடுறதையும். வரதட்சணை கொடுக்க முடியாமததால பல பெண்கள் வாழா வெட்டியா முடங்கி கிடக்கிறதையும் அவரு பார்த்திருக்காரு."

"அதுக்கு என்ன பண்ணினாராம்?"

"வரதட்சணை கொடுமையை பத்தி விளக்கி தெருக்கூத்து, திரைப்படம்னு வீதிக்கு வீதி போட்டு காண்பிச்சிருக்காரு. அதோட பொதுமக்கள்கிட்ட வரதட்சணை வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன்னு உறுதி மொழி எழுதி வாங்கிருக்காரு."

"இன்னப்பா.... தெருக்கூத்தையும், படத்தையும் பார்த்து மக்கள் திருந்திட்டாங்களா என்ன? நம்புறமாதிரியா இருக்கு?"

"ஒருசில மாதங்களுக்கு எந்தவித பலனும் இல்லாமத்தான் இருந்திருக்கு. கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும் இல்லையாம். சுமுகமா போய்கிட்டிருக்காம்."

"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்." என்றவாறு நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

Friday 3 July, 2009

நாட்டு நடப்பு

"வாங்க ராமசாமி. என்ன இன்னைக்கு காலையிலே வந்திட்டீங்க?'

"இன்னைக்கு சனிக்கிழமை இல்லையா வீட்டில எல்லாரும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. அதன் நானும் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன். அது சரி என்ன விசேஷம் பேப்பரைப் பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கே?'

"திருச்சி ராம்ஜி நகரில் இருக்கிற பக்கிரிங்கிற பிக்பாக்கெட் திருடன், இப்ப தொழிற் பயிற்சி நிலையம் ஆரம்பிச்சிருக்கானாம்.'

"அப்படியா? வரவேற்கக்கூடிய விஷயம்தானே? அதுக்கு எதுக்கு சிரிக்கிற? தப்பு செய்யறவங்க திருந்திடுறது இயல்புதானே?'

"என்ன தொழிற் பயிற்சி நிலையம்னு நீ கேட்கலையே?'

"நீ இப்படி சொல்றத பார்த்தா, ஏதோ வில்லங்கமா இருக்கும் போலிருக்கே!'

"ஆமாப்பா. பிக்பாக்கெட் அடிக்கிறது எப்படி, ஜனங்ககிட்ட மாட்டிக்காம தப்பிக்கிறது எப்படின்னு பயிற்சி கொடுக்கிறானாம்.'

"அடக்கொடுமையே!'

"இன்னும் கேளு. பயிற்சிக்கு கட்டணம் 500 ரூபாயாம். தங்குமிடம், சாப்பாடு கூட இலவசமாம். இதுவரைக்கும் 100 பேருக்கு பயிற்சி கொடுத்திருக்கானாம்! திருச்சியில பயிற்சி எடுத்துக்கிட்ட ஆளுங்க புதுச்சேரியில வேலையைக் காட்டும்போது பிடிபட்டவங்களாலதான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கு.'

"கலிகாலங்கிறது சரியாத்தான் இருக்கு.'

"அதே ராம்ஜி நகரில இன்னுமொரு விஷயமும் நடந்திருக்கு. குடிநீர் குழாய்ல சாராய கலந்த தண்ணீர் வந்திருக்கு!'

"என்னப்பா செல்றே?'

"ராம்ஜி நகர் கள்ளச்சாராயத்துக்கு பேர் போன ஏரியாவாம். அரசு நடவடிக்கை எடுத்து ஒழிச்சாலும் இன்னமும் சிலர் திருட்டுத்தனமா செஞ்சிகிட்டுத்தான் இருக்காங்கன்னு அந்த ஏரியா மக்கள் சொல்றாங்களாம். அந்த ஏரியாவில ரோடு போடும்போது சாராய ஊறல் தொட்டி ஒடைஞ்சி அது குடிநீர் குழாயோட கலந்துடிச்சாம். மாநகராட்சி அதிகாரிங்க விரைந்து வந்து சரி பண்ணி ஆரம்பிச்சிருக்காங்களாம். அதுவரைக்கும் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்னு அறிவிச்சிருக்காங்களாம்.'

"சாராய பார்ட்டிகளை பிடிச்சிட்டாங்களா இல்லையா?'

"அதைப் பற்றி ஏதும் போடலை. அழகிரி மதுரையை கலக்க ஆரம்பிச்சிட்டாருப்பா. 320 கோடியில தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்க இடத்தேர்வு பண்ணிக்கிட்டிருக்காங்களாம். இந்தியாவில ஐந்து இடங்கள்ல இதுபோல இருக்காம்.'

"நேற்று இரயில்வே பட்ஜெட் தாக்கல் செஞ்சாங்களே ஏதாவது சிறப்பு சலுகைகள் உண்டா?'

"புதுசா 57 ரயில் விடப்போறாங்களாம். இதுல 6 ரயில் தமிழ்நாட்டுக்கு. டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் பெண்களுக்கு சிறப்பு ரயில் விடப் போறாங்களாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைகூட உலக தரத்துக்கு மாற்றம் செய்யப் போறாங்களாம்.'

"அது சரி, கட்டண உயர்வு...?'

"எதுவுமில்லைப்பா. திருச்சி, மதுரை உட்பட 49 ரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப் போறாங்களாம். அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் 25 ரூபாய்க்கு கொடுக்கப் போறாங்களாம்.'

"பரவாயில்லையே... மம்தாவும் நல்லாத்தான் பட்ஜெட் போட்ருக்காங்கன்னு சொல்லுங்க.'

"இதையேதான் பிரதமரும் சொல்லிருக்காரு.இன்னும்கூட இருக்கு பெண் பயணிகள் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை அமைக்கப் போறாங்க. தனியாருடன் சேர்ந்து மருத்துவ கல்லூரியும் அமைக்கப் போறாங்களாம். அதோட பத்திரிகைகாரர்களுக்கு, முதியோர்களுக்கு, மாற்றுத்திறன் கொண்டவர்களுக்குன்னு சிறப்பு சலுகைகள்.இப்படி சிறப்பாத்தான் இருக்கு.'

"பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து பற்றி எதுவும் நியூஸ் இல்லையா?'

"மத்திய அமைச்சர் தன்னோட கருத்தை தான் சொல்லியிருக்கார். மாநில அரசுகிட்ட கேட்கும்போது, மூத்த கல்வியாளர்கள், நிபுணர்கள் கிட்ட கருத்து கேட்டு நடவடிக்கை எடுப்போம்னு சொல்லியிருக்கார் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.'

"சரிப்பா பசி எடுக்குது. சாப்பிட்டுட்டு வர்றேன். மீதியை அப்புறம் பேசிக்குவோம்.'

"சரி. சாயங்காலம் படத்துக்கு போவோம். நாடோடிகள் படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. மறக்காம வந்திடு.'

"சரிப்பா வர்றேன்.'

நன்றி- தினகரன்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...