Friday, 26 June, 2009

பதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை!

பதிவர் நைஜீரியா ராகவன் அவர்கள் ஒன்றரை மாத விடுப்பில் சென்னைக்கு வந்திருக்கிறார். நைஜீரியாவிலிருந்து வரும் வழியில் துபாயில் கலையரசன் உட்பட பல பதிவர்களை சந்தித்து உரையாடிய நிகழ்வை வேலூரான் பதிவாக போட்டிருந்தார்.

ராகவன் அண்ணன் 'இடைவெளி' என்ற பதிவில் விடுமுறை பற்றி எழுதியிருக்கும்போதே அவருக்கு பின்னூட்டத்தில் சென்னைக்கு வந்ததும் போன் பண்ணுங்கண்ணா என்று கூறியிருந்தேன்.

அவரை ஏர்போர்ட்டிலேயே சந்திக்கத்தான் விருப்பம். ஆனால் பாருங்க லீவு கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் வழி தெரியவில்லை. அவராக தொடர்பு கொண்டால்தான் உண்டு என்ற அளவில் அவரிடமிருந்து வரும் போன்காலுக்காக காத்திருந்தேன்.

வியாழக்கிழமை வழக்கம் போல் வேலை முடிந்ததும் பஸ் ஏறி சென்ட்ரல் நிலையத்தில் இறங்க எத்தனிக்கும்போது போன் வந்தது. யாரென்று பார்த்தால் அண்ணன் ராகவன் அவர்கள்தான். சுமார் பத்து நிமிடம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் திருவல்லிக்கேணியில் இருப்பதாக சொல்ல, திருவல்லிக்கேணியில் எங்கு என்று நான் கேட்டேன். அவர் சொன்ன முகவரி எனது அலுவலகத்திலிருந்து நடைதூரம்தான் என்று சொன்னேன். எப்ப சந்திக்கலாம் என்றபோது அவரின் முகவரி கூறினார். மறுநாள் வேலை முடிந்ததும் இரவு ஏழரை மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்தேன். அன்புடன் வரவேற்றார். பிறகு அவரது குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

பிறகு அவருடன் பேசிக் கொண்டே ராகவன் அண்ணாவின் நண்பர் வைத்திருக்கும் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்தோம். வரும் வழியில் துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும், சென்னை வந்ததும் இங்கு புதுகை அப்துல்லா, அ.மு. செய்யது, தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன், ஜீவன், ரசனைக்காரி ராஜி, ரம்யா, நாமக்கல் சிபி முதலான பதிவர்களை சந்தித்தது பற்றியும் கூறினார். அந்த வாய்ப்பை தவறவிட்டனே என்று வருந்தினேன். எனது தொலைபேசி நம்பரை அதற்கு பிறகுதான் இணையத்தில் இருந்து எடுத்ததாகவும் அதனால் அழைக்க முடியவில்லை என்றார்.

பதிவர்கள் எழுதும் கவிதைகள் பற்றியும், புரியாத கவிதைகள்,மொக்கை கவுஜைகள் பற்றியும் சுவையாக பேசிக்கொண்டு வந்தோம். கும்பகோணத்திலிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் பேசிக் கொண்டே வந்ததில் அவரின் நண்பரின் அலுவலகம் வந்திருந்தது. அந்த (மணி) நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் நெடுநாள் பழகியவர்போல இனிமையாகவே பழகினார். அண்ணனின் நண்பர்கள் எல்லாரும் அவர்போல்தான் இருப்பார்கள் போலும். அங்கிருந்து அவர்கள் வெளியில் கிளம்புவதாகத் தெரிந்தது. நான் நாசுக்காக, 'கிளம்புகிறேன்' என்றேன். அண்ணனும், அவரது நண்பரும் காரிலேயே போய்விடலாம் என்று சொல்ல, எங்களின் பேச்சு காரிலும் தொடர்ந்தது. அவர்கள் இருவருக்குமுள்ள நட்பு பற்றி பேச்சு தொடர்ந்தது. என்னை டி.எம்.எஸ்ஸில் இறங்கிவிட்டனர். வரும் ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் நடேசன் பார்க்கில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என்று கூறினேன். நிச்சயம் வருகிறேன் என்றார். இனியமையான அனுபவங்களை தாங்கிய அந்த சந்திப்போடு அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

அதுசரி தலைப்பிற்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையே என்று குழப்பம் வேண்டாம்.... உண்மைத் தமிழனிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். அதற்காகவே பதிவர் சந்திப்புக்கு கட்டாயம் வருவேன் என்றார் ராகவன் அண்ணன். என்ன கேள்வி கேட்பார் என்பது சஸ்பென்ஸ். எனவே, உண்மைத்தமிழன் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...!

Monday, 22 June, 2009

நிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று ஆசையில் சதாசிவம் தனது இரண்டு தங்கைகளின் மகள்களையே தன் மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார். மூத்தவனுக்கு திருமணம் செய்த பெண் கிராமத்தில் வளர்ந்தவள். இளையவனுக்கு திருமணம் செய்த பெண் பட்டினத்தில் வளர்ந்தவள். மூத்தவன் சேகருக்கு திருமணம் முடிந்ததுமே தனிக்குடித்தனம் வைத்துவிட்டார் சதாசிவம். 'ஏன்?' என்று அம்மா கேட்டபோது, 'மூத்தவனுக்கு இன்னும் குடும்ப பொறுப்புன்னா என்னன்னு தெரியலை. தனிக்குடித்தனம் இருந்தால்தான் அவனுக்கு புரியும்.' என்றார்.
இரண்டு வருடம் கழித்து இளைய மகன் குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். குமார் படித்தது குறைவுதான் என்றாலும் குடும்பத்திலும், கஷ்ட நஷ்டங்களிலும் அப்பாவுக்கு துணையாக நின்றான். அதனால் சதாசிவத்துக்கும் அவன்மீது தனிப்பட்ட பற்று இருந்தது. அதனால் அவனை தனிக்குடித்தனம் வைக்கவில்லை.
ஆனால் திருமணம் முடிந்து இரண்டு மாதம்கூட ஆகவில்லை. பட்டினத்தில் படித்து வளர்ந்த பெண்ணான வளர்மதிக்கு இந்த கிராமத்தின் பரபரப்பே இல்லாத வாழ்க்கை பிடிக்கவில்லை. அதை மெல்ல குமாரிடம் எடுத்து சொன்னாள். எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று முதலில் சொல்லி வந்தான். ஆனால் வளர்மதி விடாப்பிடியாக இருந்ததால் குமாருக்கு கோபம் வரத்தொடங்கியது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள். அதுகூட இன்னும் முடிய வில்லையே!
திருமணத்தின் போதே குமாரிடம் அவரின் மாமா 'அண்ணன் தனிக்குடித்தனம் போய்விட்டான். நீயாவது அம்மா, அப்பாகூட கடைசி வரைக்கும் இருந்து அவங்களை நல்லபடியா வைச்சுக்கணும்.' என்றார். அதற்கு குமாரும் அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க. அப்படி ஒரு நிலமை வந்தா, பெண்ணை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பிடுவேன தவிர, நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன்.' என்றான். அதை நினைத்துப் பார்த்த குமாருக்கு நாமும் அந்த தனிக்குடித்தனம் போகக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்று நினைத்தான். அந்த வருத்தத்தில் இருந்தவனின் நிலை புரியாமல் வளர்மதி மீண்டும் அவனிடம், "நாம கோயம்புத்தூருக்குக்கு போகலாங்க. இங்க உக்காந்து விவசாயிங்க கொண்டு வர்ற மோட்டரை நம்பி லேத் பட்டறை வச்சுக்கிட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு, கோயம்புத்தூர் நல்ல இன்டஸ்ட்ரியல் ஏரியா. உங்களுக்கு நல்ல ஸ்கோப் இருக்கும். நிறையவும் சம்பாதிக்கலாம். அம்மா, அப்பாவை உங்க அண்ணன்கூட இருக்க சொல்லிடலாம் என்ன சொல்றீங்க?" என்றாள்.
இதுவரை பொறுமையாக இருந்தவன் சட்டென்று எழுந்து கன்னத்தில் பட்டென்று அறைந்துவிட்டான். உடனே அவள் கத்த ஆரம்பித்தாள். "கத்தாதே! சத்தம் அப்பாவுக்கு கேட்டிச்சு. அப்புறம் நான் சும்மாயிருக்க மாட்டேன்." என்றான். ஆனால் அவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு "ஓங்கி அறைஞ்சிட்டு அழாதேன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றவள் அழுவதை மட்டும் நிறுத்தவில்லை.
சத்தம் கேட்டு அம்மா ஓடிவந்தாள்."என்னா குமாரு? ஏன் வளர்மதி அழறா?"
"ஒன்னுமில்லம்மா! நீ போ!" என்றான்.
"அவ அழறா, நீ ஒன்னுமில்லைன்னு சொல்றே! என்னாச்சு வளர்மதி?" என்று கேட்க, அவள் சட்டென்று அறைக்குள் ஓடி கதவைத் சாத்திக் கொண்டாள்.
"என்ன குமாரு? உங்களுக்குள்ளே என்னாச்சு? அவளை அடிச்சியா?" என்றாள் அம்மா.
"ஒன்னுமில்லேன்னு சொல்றேன்ல... நீ போம்மா!" சற்று கோபமாகவே சொன்னான் குமார்.
குழப்பத்துடன் அம்மா அங்கிருந்து விலகிச் சென்று அப்பா இருக்கும் அறைக்கு செல்வதை பார்த்தான். அப்பாவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். யார் யாரைப்பற்றி குறை சொன்னாலும் உடனே கூப்பிட்டு கேட்க மாட்டார். சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்வார். அதனால் தற்போது பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அறைக்கதவைத் தட்டினான். கதவைத் திறக்காமல் வீம்பாக இருந்தாள். "வளர்... கதவைத்திறக்கிறியா... இல்லையா?" என்றான் சற்று காட்டமாக.
அந்த அதட்டலுக்குப் பிறகே கதவை மெல்ல திறந்துவிட்டுவிட்டு கட்டிலில் போய் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள். அவளருகில் போய் உட்கார்ந்தான். அவளின் தலையில் கைவைத்து தலைமுடியை கோதியவாறு, "அப்பா, அம்மாவை விட்டு நான் எங்கயும் வரமுடியாது. அவங்களை அண்ணன்கூட இருங்கன்னு என்னால சொல்லமுடியாது. படிச்ச பொண்ணு நீ. நான் சொல்றதை புரிஞ்சிக்க. அம்மா வந்து திரும்பவும் ஏதாவது கேட்டா, எதுவும் சொல்லாதே. அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. நான் வேலைக்கு கிளம்புறேன். எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்குவோம்" என்றவாறு கிளம்பிச் சென்றுவிட்டான்.

தற்குப்பிறகு இரண்டு நாட்களாக அவள் அதைப் பற்றி எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். அவள் பேசாமல் இருப்பது குமாருக்கும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அவனின் முகவாட்டத்தை சதாசிவமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் .
மூன்றாம் நாள் திடீரென்று பட்டறைக்கு போன் வந்தது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று. அலறி அடித்துக் கொண்டு ஓடினான். அம்மாவுக்கு 'லோ-பிரசர்' இருக்கிறது என்று டாக்டர் சொல்லி, மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து அனுப்பினார். வீட்டில் கொண்டு வந்துவிட்டுவிட்டு தன் அறைக்குச் சென்று சோர்வாக அமர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு அப்பா வந்தார்.
"பட்டறைக்கு போகலையா குமார்?"
"இல்லப்பா... வேலை எதுவும் தற்சமயம் இல்லை. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லாம இருக்குது... அதான்..."
"அவளைப் பற்றி நீ கவலைப்படாதே! அவ உடம்புக்கு நோய் வர்றதுக்கே காரணமே நீங்கதான். உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு. வீடுன்னா கலகலப்பா இருக்கணும். அதைவிட்டுட்டு எப்பப் பார்த்தாலும் அழுது வடிஞ்சிகிட்டு இருந்தா எப்படி இருக்கும்? நீ முதல்ல உன் பொண்டாட்டியை சந்தோஷமா வைச்சிக்கிறதுக்கு பாரு.'' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று போய்விட்டார்.
அப்பா இப்படி பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது. கோபத்துடன் வளர்மதியை கூப்பிட்டான். சமயலறையி-ருந்து வந்து மவுனமாக நின்றாள்.
"நீ எதுவும் அவங்ககிட்ட சொன்னியா?"
"இல்லையே! நான் பாட்டுக்கு பேசாம என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்."
""அதான் ஏன்னு கேட்கிறேன். நீ இப்படி மூஞ்சை தூக்கிவைச்சிக்கிட்டு இருந்ததாலதான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னது உன் காதில விழுந்திச்சா?''
"இங்க பாருங்க, என்னை சும்மா வம்புக்கிழுக்காதீங்க. நான் நம்ம நல்லதுக்காக சொன்னதை நீங்க கேட்கலேன்னு வருத்தத்தில இருக்கேன், அவ்வளவுதான். அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு நான் காரணம்னு சொல்றதெல்லாம் அபாண்டம். ஆமா மருத்துவ செலவுக்கு என்ன பண்ணீங்க?''
"நகையைத்தான் அடகு வைச்சேன்."
"இப்படியே செஞ்சிக்கிட்டு இருங்க. முன்னேற வழியைச் சொன்னா, பழியைத் தூக்கி என் மேலயே போடுறீங்க அப்பாவும் புள்ளையுமா. நல்லதுக்கே காலமில்லப்பா." என்றவாறு சமயலறைக்கு சென்றுவிட்டாள்.
"உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு" என்று அப்பா சொன்னது வலித்தது. கிடைக்கிற சொற்ப வருமானம் வேறு. அம்மாவுக்கும் மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று டாக்டர் சொன்னதும், அந்த மருந்துகள் வாங்க ஆகும் செலவும் மிரட்சியை உண்டு பண்ணியது.
வளர்மதி சொல்வதும் சரிதானோ... கோயம்புத்தூர் நல்ல ஊர்தான். பேசாமல் அங்கே சென்றுவிடலாம். அப்பா, அம்மாவையும் அழைத்துச் சென்றுவிடலாம். அப்படி சென்றுவிட்டால் வளர்மதியையும் சந்தோஷப்படுத்தியது மாதிரியாச்சு, அப்பா, அம்மாவையும் தனித்து விட வேண்டியதில்லை. இதுதான் சரி' என்று எண்ணிக் கொண்டு அப்பாவைப் பார்க்க கிளம்பினான்.
"அப்பா... ஒரு யோசனை..." 'என்ன?' என்பது போல் பார்த்தார். குமார் தொடர்ந்தான்.
"இங்க பிசினஸ் சரியாயில்லை. கோயம்புத்தூர்ல லேத் பட்டறைக்கு நல்ல வேலை இருக்கும்னு கேள்விப்பட்டேன். அதான் அங்க போயிடலாம்னு தோணுது. நாம எல்லாரும் அங்க போயிடலாம்பா..."
"உனக்கு சரின்னு பட்டா செய். நீங்க சந்தோசமா இருந்த அது போதும். ஆனா, எங்களை கூப்பிடாதே. எங்க கட்டை இங்கதான் வேகணும். நீங்க போறதால எங்களுக்கு வருத்தம் எதுவும் கிடையாது."
அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அதற்குப்பிறகு அதில் மாற்றம் செய்ய மாட்டார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அறைக்குத் திரும்பினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வளர்மதி, "அப்புறம் என்ன? மாமாவே சொல்-ட்டாங்க. இனிமே நீங்கதான் முடிவு எடுக்கணும்." என்றாள்.
"அவங்களை தனியே விட்டுட்டு எப்படி போறது வளர்..."
"ஏங்க வருத்தப்படுறீங்க. பக்கத்திலதான் உங்க அண்ணன் இருக்கார். பார்த்துக்க மாட்டாரா? நீங்க போய் பேசுங்க. உங்க நிலமையை சொல்லுங்க..."
அதன்படியே அண்ணனிடம் பேசிவிட்டு, அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் கிளம்பினார்கள்.

"ஏங்க நம்மளையும்தான் கூப்பிட்டானே, ஏன் வேணாம்னு சொல்லிட்டீங்க?" என்ற மனைவியைப் பார்த்து சிரித்தார்.
"சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருக்கணும். நிறைய சம்பாரிக்கணும் நினைக்கிறாங்க. நாம வாழ்ந்து முடிச்சிட்டோம். அவங்க இனிமேதான் வாழ்க்கையைத் தொடங்கணும். நாம வாழ்ந்த காலகட்டம் வேற, இப்ப உள்ள கால கட்டத்தில போட்டிகள் நிறைஞ்சிருக்கு. அதில ஜெயிச்சு வர்றணும்னா நாம வழிகாட்டியா இருந்தா போதும். இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேன். அதான் பாசத்தை மனசுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு கொஞ்சம் கடுமையாவும் பேசிட்டேன். எல்லாம் அவன் நல்லதுக்குத்தான்." என்றார்.
தன் கணவன் எடுத்த முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்திருந்தவள் புன்னகைத்தாலும் விழியோரம் கண்ணீர் துளிகள் வழிவதை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

Thursday, 18 June, 2009

சந்தர்ப்பம் அமைந்துவிட்டால்...

ன் அப்பாவிடம் நான் மட்டுமே சகஜமாக பேசுவேன். எனது சகோதரனோ, சகோதரியோ நேர்நின்றுகூட பேசமாட்டார்கள். நான் கடைக்குட்டி என்பதால் எனக்கு சில சலுகை. அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, குடும்ப விவகாரங்கள் என்று எதுவும் பேசுவோம்.
என் அப்பா நடத்துனராக பணியாற்றியவர். பணியின்போது நடைபெறும் சம்பவங்களையும் சொல்வார். அப்படித்தான ஒருமுறை பேசும்போது, திறமை பற்றி பேச்சு வந்தது. நன்கு படித்த இளைஞன் ஒருவன், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து, குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். குடும்ப சூழ்நிலைக்காக அந்த வேலையில் சேர்ந்தாலும், வேலையில் தன் திறமையை காண்பிக்க பயன்படுத்திக் கொண்டான் என்பதுதான் சிறப்பு.
ஓட்டல் அமைந்திருந்த இடம் ஒரு வங்கிக்கு அருகில். வங்கி ஊழியர்கள் வழக்கமாக அந்த ஓட்டலுக்கு வருவார்கள். அந்த ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடி, தன் வேலையை காண்பித்திருக்கிறார். நாளடைவில் வங்கி ஊழியர்களும் அந்த சப்ளையரும் நெருக்கமாகிவிட்டார்கள். வங்கிப் பணிக்கு ஆள் தேவைப்பட்டபோது, அந்த சப்ளையரை சிபாரிசு செய்திருக்கிறார்கள். திறமையால் அந்த சப்ளையர் வங்கி ஊழியராகிவிட்டார்.

குடந்தையில் இப்போது பாரத் ஆடியோ கேபிள் (உள்ளூர் எஃப்.எம்.) பிரபலம். பெருநகரங்களில் ஏகப்பட்ட எஃப்.எம். வந்துவிட்டாலும், குடந்தையில் இன்னும் அந்த வசதிகள் வரவில்லை. அரசின் ரெயின்போ எஃப்.எம். மட்டுமே. பிரபல எஃப். எம். போலவே நேயர் விருப்பம், நேரடி நிகழ்ச்சி, தொலைபேசி வழி விருப்பப் பாடல்கள், பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சி (இதற்கு தனிக்கட்டணம் ரூ 20 செலுத்தினால் வாழ்த்து தெரிவிப்பதோடு, விருப்பமான 2 பாடல்களும் ஒலிபரப்புவார்கள்), விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று களை கட்டுகிறது. மாத சந்தாவாக ரூபாய் 25 வசூலிக்கிறார்கள். சுமார் ஆயிரம் சந்தாதாரர்கள் இருக்கிறார்களாம். (வருமானத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.)
காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி இரவு பதினொன்றுக்கு முடிவடையும். குடந்தையை நான்கு பகுதியாக பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரங்களுக்கு இன்னார் ஒலிபரப்புவது என்று பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில் இரவு இரண்டு மணிவரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.
அந்த ஆடியோ கேபிள் உருவான வரலாறு ரொம்பவும் சுவாரசியமானது. பட்டுப்புடவை நெய்து தரும் பணிபுரியும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான அம்மன்கோவில் தெரு, அரசலாறு வழிநடப்பு, பீர்மன் கோவில் தெரு, துவரங்குறிச்சி தெரு போன்ற பகுதிகளில் இளஞர்கள் பாட்டு போட்டுக் கொண்டு அலுப்புத் தெரியாமல் வேலை செய்வார்கள். பெண்கள் தறி வேலையை வீட்டிற்குள்ளும், பாவு (பட்டுப்புடவை செய்ய பயன்படும் பட்டு நூல்) காயவைக்கும் வேலையை ஆண்கள் தெருவிலும் செய்துவருவார்கள். வீட்டிற்குள் ஒரு ஸ்பீக்கரும், தெருவில் வேலை செய்பவர்களுக்காக ஒரு ஸ்பீக்கரும் வைத்தார்கள். இந்த முறை அக்க பக்கத்து வீடுகளில் வேலை செய்பவர்களும் விருப்பப்பட, இன்று குடந்தை முழுவதும் பரந்து விரிந்துவிட்டது.
அதன் வளர்ச்சியை விளம்பரங்களும் ஒலிபரப்பப்படுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் முறையான அனுமதி வாங்கி நீங்களும் செய்யலாம்... ஜோலிக்கு ஜோலி... (ஜோலி - வேலை) ஜாலிக்கு ஜாலி...

த்திரிகை நடத்திய அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, "நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" என்று முத்துராமலிங்கம் என்னிடம் கேட்டார். தூங்கிக் கொண்டிருந்த என் ஆசைகளை திரும்பவும் தூண்டிவிட்டுவிட்டார். "யோசிப்போம்" என்றேன். சாத்தியமா? என்று தீவிரமாக யோசித்தும் வருகிறேன்.

Sunday, 7 June, 2009

கேள்வி பிறந்தது அன்று...

பதிவர்களை பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள உதவும் இந்தப் பதிவுக்கு என்னையும் அழைத்த சொல்லரசன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாத்தாவின் பெயர் சுப்பிரமணி. அதனால், பேரன், பேத்திகளின் பெயரில் மணி இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.(பெயரில் மட்டுமாவது இருக்கட்டும் என்று நினைத்தார்போலும்.) நல்ல தமிழ் பெயர் என்பதால் எனக்கும் என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் என் அம்மா கண்கலங்க, நானும்...ஊரில் என் சகோதரனுடன் இருக்கிறார்கள்.(சென்னை வாழ்க்கை என் தாய், தந்தையருக்கு பிடிக்கவில்லையாம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பள்ளிப்பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவன்.இதிலிருந்து என் கையெழுத்து எப்படி இருக்கும் என்று ஊகிக்கலாம். இப்பொழுது மெதுவாக எழுதினால் மட்டும் அழகாக இருக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதுதான் என்றில்லை. ஆனாலும் என் அம்மா சமைக்கும் அசைவ உணவு என்றால்...ம்! (என் மனைவிக்கும் சரி, என் சகோதரிக்கும் சரி, அந்த பக்குவமான சமையல் வராது.)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமாம். தொடர்வது அவர்கள் கையில்தான் இருக்கிறது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் கால்நனைக்க மட்டுமே பிடிக்கும். அருவி... அதை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். ஆற்றில் குளிப்பதுதான் மிகவும் பிடித்தமானது. என் பள்ளிக்காலம் முழுவதும் எங்க ஊர் அரசலாற்றில்தான் குளியல்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை. அதில் தெரியும் அகத்தை.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எல்லோரிடமும் எளிதில் பழகிவிடுவதுதான் பிடித்த விசயம்.பழகியவர்கள் ஏதேனும் கோரிக்கைகள் வைக்கும்போது, எனக்கு தகுதிக்கு மீறியதாக இருப்பதைகூட, உடனே முடியாது என்று சொல்லத் தயங்குவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது, என்மீது கொண்ட காதல். பிடிக்காதது... கோபம்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா, அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

க்ரே கலர் பேண்ட், ரோஸ் கலர் சட்டை.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அலுவலகத்தில் கணிணியைப் பார்த்துக்கொண்டு...கேட்க ஏதுமில்லை.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சையும், நீலமும் கலந்த,ராமர் கலர்.

14.பிடித்த மணம்?

மணமானவர்களுக்கே பிடித்த அதே மல்லிகை.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ஆ.முத்துராமலி்ங்கம்,முத்துவேல், புதியவன். கவிதைகள், கவிதைகள், கவிதைகள்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அரசியல் சம்பந்தமான அலசல் பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?

கபடி. ஊரில் நடந்த போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கேனாக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி அணிபவர் அல்ல. கணினி முன்பு வேலை, அதனால் சீக்கிரமே அந்த வேளை வரலாம்...

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

காதல் படங்கள், காமெடிப்படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ராமன் தேடிய சீதை (டீவியில்.)

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர், மழைக்காலம்.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

பா.விஜய்- ன் 'உடைந்த நிலாக்கள் பாகம் -2'

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: கடலலை
பிடிக்காத சத்தம்: தரையில் தேய்கப்படும் கரகர சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கிலோ மீட்டர் தெரியாது. இடம். திருத்தணி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கதை, கவிதை எழுதுவது. மேடையில் பாடியது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கோவிலில் காதலர்கள். அவ்ரகள் செய்யும் சில்மிசங்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சற்றே சோம்பேறித்தனம்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

பொள்ளாச்சி பக்கம் போய்வரணும்.( பெரிய லிஸ்ட்டே இருக்கு...)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாருக்கும் தொந்தரைவில்லாமல், சந்தோசமாக.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

புத்தகம் படிப்பது.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

போனா வராது. (ஒரு வரிதானே கேட்டீங்க?)

Tuesday, 2 June, 2009

நூல் வெளியீட்டு விழாவும், முத்தான சந்திப்பும்.


திட்டமிட்டபடி 'பொன்விசிறி' அய்க்கூ நூல் வெளியீட்டடு விழாவுக்குகிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போதே நம்ம பதிவர் முத்துராமலிங்கம் போன்செய்து எனது வருகையை உறுதி செய்து கொண்டார். பதிவின் மூலம் மட்டுமேஅறிமுகமான அவரை சமீபத்தில்தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டுஇவ்விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தேன். எனது பதிவில் இருந்தபுகைப்படத்தை வைத்து, நான் அரங்கினுள் நுழைந்ததுமே என்னை அடையாளம்கண்டு என்னருகில் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். மிகவும் இளைமையானநண்பர். பழக இனிமையானவராகவும் இருக்கிறார்.
இந்நிகழ்வு பற்றி அவரும் பதிவிட்டிருக்கிறார்... விரிவாகவே...விடுபட்டவைமட்டும் இங்கே...


தமிழை வளர்க்க வேண்டியவர்கள் தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள் மட்டுமல்லாது அனைவரும் செய்ய வேண்டும். கவிதை எழுதுவதற்கு படிப்போ, பதவியோ முக்கியமல்ல, அனுபவமே போதும் பண்டைய காலத்தில் அரசர்கள்,அரசிகள், படைவீரர்கள், புலவர்கள், துறவிகள் வரை பலரும் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். அதைப்போலவே கணிப்பொறியியல் படைத்த அருணாசலசிவாவும் கவித்திறைன வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார் முகிலை ராசபாண்டியன்.

மரபு கவிதை, புதுக்கவிதை தொடர்ந்து அய்க்கூவில் கரைந்து கொண்டிருக்கிறேன் என்றார் ஓவியக்கவிஞர் அமுதபாரதி.( ஓவியமும், கவிதையும் படைக்கும் ஆற்றல் பெற்ற இவருக்கு ஓவியக்கவிஞர் என்ற பட்டம் அளித்தாராம் கவிஞர் கண்ணதாசன்.) மரபுக்கவிதை,புதுக்கவிதையைவிட அய்க்கூ நம்மை கற்பனையை விரிவடைய வைக்கும். அதனால் அய்க்கூமீது அதிக ஈடுபாடு கொள்கிறேன் என்றார். காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைகழகத்தை சேர்ந்த போதிதர்மா என்பவர் சீனாவுக்கு அய்க்கூ வடிவத்தை பரப்பினாராம். அவர்களுக்கு தமிழ் புரியாது என்பதால் தியானம் (அய்க்கூ கவிதை தியான நிலைக்கு நம்மை கொண்டு செல்வதால் அதை தியானம் என்று அழைத்தாராம் அவர்) என்பதை தியான் என்று சொல்ல, அவர்களிடமிருந்து எழுத்துருவை பெற்ற ஜப்பானியர்கள் அதை சென் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுவே அய்க்கூ என்று அழைக்கும்படி ஆயிற்று என்றார்.
கிரிஜா மணாளன். இவரை கவிஞர் என்றுதா்ன இதுவரை நினைத்திருந்தேன். இவர் ஒரு பதிவர் என்று இன்றுதான் அறிந்துகொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தோம். அவரின் வலை முகவரி...
smskavignarkal-world.blogspot.com
tiruchikavignkaral.tamilblogs.com
kavithaigal.tamilblogs.com


நாணற்காடன்: இவரின் கவிதையை ஏற்கனவே தங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இவரை வயதானவராக இதுவரை நினைத்திருந்தேன். முப்பது வயதுக்குள் தான் இருக்கும், இவர் இந்தி ஆசிரியராக சேலம் ராசிபுரத்தில் பணிபுரிகிறாராம். இந்தி ஆசிரியர் என்பதில் எனக்கு வேதனை ஏதுமில்லை. தமிழ் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகள் செய்கிறேன் என்றார்.

பொன் விசிறி தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு...
சுவரில் ஆணிகள்
சொல்லாமல் சொல்லும்
அடியின் வலி!

அரைஞான் கயிறு
அறுத்தெறியப்பட்டது
சிதையில் பிணம்!

மேஜைக்கடியில்
நீளும் கைகளில்
துப்பப்பட்டது எச்சில்!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...