Monday, 22 June, 2009

நிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று ஆசையில் சதாசிவம் தனது இரண்டு தங்கைகளின் மகள்களையே தன் மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார். மூத்தவனுக்கு திருமணம் செய்த பெண் கிராமத்தில் வளர்ந்தவள். இளையவனுக்கு திருமணம் செய்த பெண் பட்டினத்தில் வளர்ந்தவள். மூத்தவன் சேகருக்கு திருமணம் முடிந்ததுமே தனிக்குடித்தனம் வைத்துவிட்டார் சதாசிவம். 'ஏன்?' என்று அம்மா கேட்டபோது, 'மூத்தவனுக்கு இன்னும் குடும்ப பொறுப்புன்னா என்னன்னு தெரியலை. தனிக்குடித்தனம் இருந்தால்தான் அவனுக்கு புரியும்.' என்றார்.
இரண்டு வருடம் கழித்து இளைய மகன் குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். குமார் படித்தது குறைவுதான் என்றாலும் குடும்பத்திலும், கஷ்ட நஷ்டங்களிலும் அப்பாவுக்கு துணையாக நின்றான். அதனால் சதாசிவத்துக்கும் அவன்மீது தனிப்பட்ட பற்று இருந்தது. அதனால் அவனை தனிக்குடித்தனம் வைக்கவில்லை.
ஆனால் திருமணம் முடிந்து இரண்டு மாதம்கூட ஆகவில்லை. பட்டினத்தில் படித்து வளர்ந்த பெண்ணான வளர்மதிக்கு இந்த கிராமத்தின் பரபரப்பே இல்லாத வாழ்க்கை பிடிக்கவில்லை. அதை மெல்ல குமாரிடம் எடுத்து சொன்னாள். எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று முதலில் சொல்லி வந்தான். ஆனால் வளர்மதி விடாப்பிடியாக இருந்ததால் குமாருக்கு கோபம் வரத்தொடங்கியது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள். அதுகூட இன்னும் முடிய வில்லையே!
திருமணத்தின் போதே குமாரிடம் அவரின் மாமா 'அண்ணன் தனிக்குடித்தனம் போய்விட்டான். நீயாவது அம்மா, அப்பாகூட கடைசி வரைக்கும் இருந்து அவங்களை நல்லபடியா வைச்சுக்கணும்.' என்றார். அதற்கு குமாரும் அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க. அப்படி ஒரு நிலமை வந்தா, பெண்ணை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பிடுவேன தவிர, நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன்.' என்றான். அதை நினைத்துப் பார்த்த குமாருக்கு நாமும் அந்த தனிக்குடித்தனம் போகக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்று நினைத்தான். அந்த வருத்தத்தில் இருந்தவனின் நிலை புரியாமல் வளர்மதி மீண்டும் அவனிடம், "நாம கோயம்புத்தூருக்குக்கு போகலாங்க. இங்க உக்காந்து விவசாயிங்க கொண்டு வர்ற மோட்டரை நம்பி லேத் பட்டறை வச்சுக்கிட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு, கோயம்புத்தூர் நல்ல இன்டஸ்ட்ரியல் ஏரியா. உங்களுக்கு நல்ல ஸ்கோப் இருக்கும். நிறையவும் சம்பாதிக்கலாம். அம்மா, அப்பாவை உங்க அண்ணன்கூட இருக்க சொல்லிடலாம் என்ன சொல்றீங்க?" என்றாள்.
இதுவரை பொறுமையாக இருந்தவன் சட்டென்று எழுந்து கன்னத்தில் பட்டென்று அறைந்துவிட்டான். உடனே அவள் கத்த ஆரம்பித்தாள். "கத்தாதே! சத்தம் அப்பாவுக்கு கேட்டிச்சு. அப்புறம் நான் சும்மாயிருக்க மாட்டேன்." என்றான். ஆனால் அவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு "ஓங்கி அறைஞ்சிட்டு அழாதேன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றவள் அழுவதை மட்டும் நிறுத்தவில்லை.
சத்தம் கேட்டு அம்மா ஓடிவந்தாள்."என்னா குமாரு? ஏன் வளர்மதி அழறா?"
"ஒன்னுமில்லம்மா! நீ போ!" என்றான்.
"அவ அழறா, நீ ஒன்னுமில்லைன்னு சொல்றே! என்னாச்சு வளர்மதி?" என்று கேட்க, அவள் சட்டென்று அறைக்குள் ஓடி கதவைத் சாத்திக் கொண்டாள்.
"என்ன குமாரு? உங்களுக்குள்ளே என்னாச்சு? அவளை அடிச்சியா?" என்றாள் அம்மா.
"ஒன்னுமில்லேன்னு சொல்றேன்ல... நீ போம்மா!" சற்று கோபமாகவே சொன்னான் குமார்.
குழப்பத்துடன் அம்மா அங்கிருந்து விலகிச் சென்று அப்பா இருக்கும் அறைக்கு செல்வதை பார்த்தான். அப்பாவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். யார் யாரைப்பற்றி குறை சொன்னாலும் உடனே கூப்பிட்டு கேட்க மாட்டார். சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்வார். அதனால் தற்போது பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அறைக்கதவைத் தட்டினான். கதவைத் திறக்காமல் வீம்பாக இருந்தாள். "வளர்... கதவைத்திறக்கிறியா... இல்லையா?" என்றான் சற்று காட்டமாக.
அந்த அதட்டலுக்குப் பிறகே கதவை மெல்ல திறந்துவிட்டுவிட்டு கட்டிலில் போய் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள். அவளருகில் போய் உட்கார்ந்தான். அவளின் தலையில் கைவைத்து தலைமுடியை கோதியவாறு, "அப்பா, அம்மாவை விட்டு நான் எங்கயும் வரமுடியாது. அவங்களை அண்ணன்கூட இருங்கன்னு என்னால சொல்லமுடியாது. படிச்ச பொண்ணு நீ. நான் சொல்றதை புரிஞ்சிக்க. அம்மா வந்து திரும்பவும் ஏதாவது கேட்டா, எதுவும் சொல்லாதே. அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. நான் வேலைக்கு கிளம்புறேன். எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்குவோம்" என்றவாறு கிளம்பிச் சென்றுவிட்டான்.

தற்குப்பிறகு இரண்டு நாட்களாக அவள் அதைப் பற்றி எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். அவள் பேசாமல் இருப்பது குமாருக்கும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அவனின் முகவாட்டத்தை சதாசிவமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் .
மூன்றாம் நாள் திடீரென்று பட்டறைக்கு போன் வந்தது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று. அலறி அடித்துக் கொண்டு ஓடினான். அம்மாவுக்கு 'லோ-பிரசர்' இருக்கிறது என்று டாக்டர் சொல்லி, மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து அனுப்பினார். வீட்டில் கொண்டு வந்துவிட்டுவிட்டு தன் அறைக்குச் சென்று சோர்வாக அமர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு அப்பா வந்தார்.
"பட்டறைக்கு போகலையா குமார்?"
"இல்லப்பா... வேலை எதுவும் தற்சமயம் இல்லை. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லாம இருக்குது... அதான்..."
"அவளைப் பற்றி நீ கவலைப்படாதே! அவ உடம்புக்கு நோய் வர்றதுக்கே காரணமே நீங்கதான். உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு. வீடுன்னா கலகலப்பா இருக்கணும். அதைவிட்டுட்டு எப்பப் பார்த்தாலும் அழுது வடிஞ்சிகிட்டு இருந்தா எப்படி இருக்கும்? நீ முதல்ல உன் பொண்டாட்டியை சந்தோஷமா வைச்சிக்கிறதுக்கு பாரு.'' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று போய்விட்டார்.
அப்பா இப்படி பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது. கோபத்துடன் வளர்மதியை கூப்பிட்டான். சமயலறையி-ருந்து வந்து மவுனமாக நின்றாள்.
"நீ எதுவும் அவங்ககிட்ட சொன்னியா?"
"இல்லையே! நான் பாட்டுக்கு பேசாம என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்."
""அதான் ஏன்னு கேட்கிறேன். நீ இப்படி மூஞ்சை தூக்கிவைச்சிக்கிட்டு இருந்ததாலதான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னது உன் காதில விழுந்திச்சா?''
"இங்க பாருங்க, என்னை சும்மா வம்புக்கிழுக்காதீங்க. நான் நம்ம நல்லதுக்காக சொன்னதை நீங்க கேட்கலேன்னு வருத்தத்தில இருக்கேன், அவ்வளவுதான். அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு நான் காரணம்னு சொல்றதெல்லாம் அபாண்டம். ஆமா மருத்துவ செலவுக்கு என்ன பண்ணீங்க?''
"நகையைத்தான் அடகு வைச்சேன்."
"இப்படியே செஞ்சிக்கிட்டு இருங்க. முன்னேற வழியைச் சொன்னா, பழியைத் தூக்கி என் மேலயே போடுறீங்க அப்பாவும் புள்ளையுமா. நல்லதுக்கே காலமில்லப்பா." என்றவாறு சமயலறைக்கு சென்றுவிட்டாள்.
"உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு" என்று அப்பா சொன்னது வலித்தது. கிடைக்கிற சொற்ப வருமானம் வேறு. அம்மாவுக்கும் மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று டாக்டர் சொன்னதும், அந்த மருந்துகள் வாங்க ஆகும் செலவும் மிரட்சியை உண்டு பண்ணியது.
வளர்மதி சொல்வதும் சரிதானோ... கோயம்புத்தூர் நல்ல ஊர்தான். பேசாமல் அங்கே சென்றுவிடலாம். அப்பா, அம்மாவையும் அழைத்துச் சென்றுவிடலாம். அப்படி சென்றுவிட்டால் வளர்மதியையும் சந்தோஷப்படுத்தியது மாதிரியாச்சு, அப்பா, அம்மாவையும் தனித்து விட வேண்டியதில்லை. இதுதான் சரி' என்று எண்ணிக் கொண்டு அப்பாவைப் பார்க்க கிளம்பினான்.
"அப்பா... ஒரு யோசனை..." 'என்ன?' என்பது போல் பார்த்தார். குமார் தொடர்ந்தான்.
"இங்க பிசினஸ் சரியாயில்லை. கோயம்புத்தூர்ல லேத் பட்டறைக்கு நல்ல வேலை இருக்கும்னு கேள்விப்பட்டேன். அதான் அங்க போயிடலாம்னு தோணுது. நாம எல்லாரும் அங்க போயிடலாம்பா..."
"உனக்கு சரின்னு பட்டா செய். நீங்க சந்தோசமா இருந்த அது போதும். ஆனா, எங்களை கூப்பிடாதே. எங்க கட்டை இங்கதான் வேகணும். நீங்க போறதால எங்களுக்கு வருத்தம் எதுவும் கிடையாது."
அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அதற்குப்பிறகு அதில் மாற்றம் செய்ய மாட்டார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அறைக்குத் திரும்பினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வளர்மதி, "அப்புறம் என்ன? மாமாவே சொல்-ட்டாங்க. இனிமே நீங்கதான் முடிவு எடுக்கணும்." என்றாள்.
"அவங்களை தனியே விட்டுட்டு எப்படி போறது வளர்..."
"ஏங்க வருத்தப்படுறீங்க. பக்கத்திலதான் உங்க அண்ணன் இருக்கார். பார்த்துக்க மாட்டாரா? நீங்க போய் பேசுங்க. உங்க நிலமையை சொல்லுங்க..."
அதன்படியே அண்ணனிடம் பேசிவிட்டு, அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் கிளம்பினார்கள்.

"ஏங்க நம்மளையும்தான் கூப்பிட்டானே, ஏன் வேணாம்னு சொல்லிட்டீங்க?" என்ற மனைவியைப் பார்த்து சிரித்தார்.
"சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருக்கணும். நிறைய சம்பாரிக்கணும் நினைக்கிறாங்க. நாம வாழ்ந்து முடிச்சிட்டோம். அவங்க இனிமேதான் வாழ்க்கையைத் தொடங்கணும். நாம வாழ்ந்த காலகட்டம் வேற, இப்ப உள்ள கால கட்டத்தில போட்டிகள் நிறைஞ்சிருக்கு. அதில ஜெயிச்சு வர்றணும்னா நாம வழிகாட்டியா இருந்தா போதும். இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேன். அதான் பாசத்தை மனசுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு கொஞ்சம் கடுமையாவும் பேசிட்டேன். எல்லாம் அவன் நல்லதுக்குத்தான்." என்றார்.
தன் கணவன் எடுத்த முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்திருந்தவள் புன்னகைத்தாலும் விழியோரம் கண்ணீர் துளிகள் வழிவதை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

23 comments:

தண்டோரா said...

நல்லாயிருக்கு அன்பு..வாழ்த்துக்கள்...

டக்ளஸ்....... said...

அன்பு அண்ணே,

அருமையான கதை. ஆனா, சதாசிவமா..? சாம்பசிவமா.?
முதல் வரியில் சாம்பசிவம்ன்னு இருக்கு, திருத்துங்கண்ணே.

வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

எதார்த்தமான வாழ்க்கையின் நிகழ்வுகள், கண் முன்னே அலையாடின(பேர் விடயங்களை கொஞ்சம் பாருங்கள்)

சொல்லரசன் said...

கால சூழலுக்கேற்ற மாற்றம் தேவை என்பதை அழகாக சொல்லியிருக்கிங்க.
நல்ல கதை வாழ்த்துகள்

ஆ.முத்துராமலிங்கம் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு அன்புமணி. ஆர்வத்துடன் படித்தேன்.

பெயர் குளப்பத்தை சரி செய்து விடுங்கள்.


வாழ்த்துக்கள்

Anoch said...

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

நசரேயன் said...

குடும்ப காவியம் நல்லா இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

எல்லா குடும்பங்களிலும் நடப்பதும், எதிர்ப்பார்ப்பதும்... நல்லா இருக்கு நண்பா வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

//தண்டோரா said...
நல்லாயிருக்கு அன்பு..வாழ்த்துக்கள்...//

நன்றி! தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்!

குடந்தை அன்புமணி said...

//டக்ளஸ்....... said...
அன்பு அண்ணே,

அருமையான கதை. ஆனா, சதாசிவமா..? சாம்பசிவமா.?
முதல் வரியில் சாம்பசிவம்ன்னு இருக்கு, திருத்துங்கண்ணே.

வாழ்த்துக்கள்...//

சுட்டடிக்காட்டியமைக்கு நன்றி நண்பா! மாற்றிவி்டடேன்.

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
எதார்த்தமான வாழ்க்கையின் நிகழ்வுகள், கண் முன்னே அலையாடின

(பேர் விடயங்களை கொஞ்சம் பாருங்கள்)//

மாற்றிவி்ட்டேன். தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டேன்.

குடந்தை அன்புமணி said...

//சொல்லரசன் said...
கால சூழலுக்கேற்ற மாற்றம் தேவை என்பதை அழகாக சொல்லியிருக்கிங்க.
நல்ல கதை வாழ்த்துகள்//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
கதை ரொம்ப நல்லா இருக்கு அன்புமணி. ஆர்வத்துடன் படித்தேன்.

பெயர் குளப்பத்தை சரி செய்து விடுங்கள்.


வாழ்த்துக்கள்//

பெயர் குழப்பம் மாற்றிவிட்டேன்! நன்றி!

குடந்தை அன்புமணி said...

// Anoch said...
Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System//

thank you|

குடந்தை அன்புமணி said...

//நசரேயன் said...
குடும்ப காவியம் நல்லா இருக்கு//

நன்றி நண்பரே!

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
எல்லா குடும்பங்களிலும் நடப்பதும், எதிர்ப்பார்ப்பதும்... நல்லா இருக்கு நண்பா வாழ்த்துகள்//

நன்றி நண்பரே!

thevanmayam said...

குடும்பக்கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!!!

பழமைபேசி said...

நல்லா இருக்கு.... But formatting is required buddy!

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

யதார்த்தமான கதை ... தெளிவான நடை .. அருமையான கதை .. வாழ்த்துக்கள் நண்பரே

செந்தழல் ரவி said...

நல்ல கதைக்கரு...எழுத்துப்பிழைகள் இல்லாத எழுத்து நடை.

ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

நீளத்தை குறைத்திருந்திருக்கலாம்..
வேறு ஏதாவது சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்...
இன்னும் சம்பவங்களில் அழுத்தம் இருந்திருக்கலாம்...

பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாதது குறை. அல்லது இருக்கும் ட்விஸ்ட்டை சொல்லிய விதத்தில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம்...

மற்றபடி நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால் நல்ல சிறுகதைகளை படைக்கமுடியும் என்பதில் அய்யமில்லை...

வேத்தியன் said...

வந்தேன்...
படித்து விட்டு வருகிறேன்...

வேத்தியன் said...

கலக்கலா இருக்கு அன்பு அண்ணா...

எளிய வசன நடையில டச்சிங்கா எழுதியிருக்கீங்க...

வாழ்த்துகள்...

" உழவன் " " Uzhavan " said...

நல்ல குடும்பக்கதை.. வாழ்த்துக்கள் நண்பரே

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...