Sunday, 1 February, 2009

பியுன் கோபால் (சிறுகதை)

அலுவலகம் நேரமான பத்துமணிக்கு முன்பாகவே எப்போதும் வந்துவிடும் வழக்கத்தை வைத்திருப்பவன் சுந்தர். அவனுக்கும் முன்பாக வந்துவிடுவார் பியுன் கோபால். இன்னும் சில மாதங்களில் ஓய்வுப் பெறப்போகிறவர். சுந்தருக்கு அவரின்மேல் அபாரமான மதிப்பு வைத்திருந்தான். வயதில் குறைந்தவர்கள்கூட அவரை 'கோபால்' என்றே அழைப்பார்கள். குமுதம், விகடன், டிபன், சாப்பாடு வாங்கச் சொல்வதி-ருந்து, சினிமா டிக்கெட் வரை அவரவரர்களின் சொந்த வேலையையும் வாங்கிவிடுவார்கள். இவன் மட்டும் "அய்யா' என்று மரியாதையாக அழைப்பான். எந்த வேலையையும் சொல்ல மாட்டான்.
அவரே பல சமயங்களில் இவனிடம் வந்து, "ஏதாவது வேணும்னா சொல்லு சார்...' என்பார்.ஆனாலும் எதுவும் வாங்கிவரச் சொல்ல மாட்டான். அதனாலேயே இவன்மீது அவருக்கும் ஒரு மரியாதை இருந்தது.
அப்படிப்பட்ட கோபால்மீது கடந்த சில நாட்களாகவே அலுவலக ஊழியர்கள் அனைவரும் குற்றப் பத்திரிகை வாசித்தார்கள். விஷயம் இதுதான்... யார் என்ன வேலை சொன்னாலும் செய்து வந்தவர் இப்போதெல்லாம் யார் என்ன வேலை சொன்னாலும் அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலை மட்டும் சொல்லுங்க. செய்யறேன். வேற எந்த வேலையும் செய்யமுடியாது என்று கட் அண்ட் ரைட்டாக சொல்ல ஆரமிபித்துவிட்டார் என்பதுதான் அது.
சுந்தருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் என்ன ஆச்சு இவருக்கு? நல்லாத்தானே இருந்தாரு? பணி ஒய்வுப் பெற இன்னும் சில மாதங்களே இருக்கையில் இப்படி கெட்டப் பேரை சம்பாதித்துக் கொள்ளலாமா? அவருக்கு நல்லவிதமாக விழா செய்து அனுப்பனும் என்று பேசிவந்தவர்கள்கூட, இவரின் அதிரடி நடவடிக்கையால் அப்படியே மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சுந்தரால் இதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. காரணம் என்னவென்று கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான். அவரை அழைத்து "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கேண்டின் பக்கம் வாங்க.'' என்று அழைத்தான்.அவரும் "சரி என்று தலையாட்டிவிட்டு நடந்தார்.அலுவலகத்திற்கருகில் உள்ள கேண்டினில் சொற்பமாய் கூட்டம் இருந்தது. அருகில் இருந்த வேப்பமரத்தடியில் போய்நின்றார்கள் இருவரும்.
"என்ன சார் பேசணும்?'' என்றார் கோபால்.
"நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது. என்ன ஆச்சு உங்களுக்கு... அலுவலகத்தில எல்லாருகிட்டயும் நல்லப் பேரை எடுத்திருந்தீங்க... இப்ப இப்படி... ஏன் மாறிட்டீங்க.... எனக்கே மனசு கஷ்டமா இருக்கு....'' என்றான் சுந்தர்.
"எனக்கும் கஷ்டமாதான் தம்பி இருக்கு. ஆனா வேற வழி தெரியல....'' என்றார்.
"நீங்க சொல்றது எனக்கு புரியல... ஒய்வுப் பெறப்போகும் சமயத்தில இப்படி ஒரு கெட்டப் பெயரோட போகலாமா...'' என்றான் சுந்தர்.
"ஓய்வுப் பெறப்போறதாலதான் தம்பி இப்படி நடந்துக்கிறேன்.'' என்று சொன்னவர், கண் கலங்கினார்."" என்ன சொல்றீங்க... ஏன் கண்கலங்கிறீங்க...?''
"தம்பி, உன்கிட்ட சொல்றதுக்கென்ன... நான் இந்த அலுவலகத்தில முப்பது வருமா வேலை செய்யுறேன். யார் என்ன வேலை சொன்னாலும் வயசு வித்தியாசம் பார்க்காம செய்வேன். இதோ எனக்கு வயசாயிடுச்சுன்னு அனுப்பப் போறாங்க... எனக்குப் பின்னாடி யார் வேலைக்கு வருவாங்கன்னு தெரியாது. அவரும் என்ன மாதிரியே யார் என்ன சொன்னாலும் செய்வாரான்னு தெரியாது. வர்றவன் அப்படி செய்யலான்னா... எப்பப் பார்த்தாலும் என் பேரைச் சொல்- அவரு அப்படியெல்லாம் வேலை செய்வாரு... நீ என்னன்னா இப்படி இருக்கியேன்னு வந்தவனை சதா குற்றம் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.... ஆனா நான் இப்படி நடந்திக்குறதால இப்ப எல்லாரும் என் மேல வெறுப்பா இருக்காங்க. புதுசா வர்றவன் சின்ன வேலை செய்தாலும் அவனை எல்லாரும் பாராட்டுவாங்க. அதனாலதான் தம்பி....'' என்றார்.
"நல்லாருக்கு நீங்க சொல்றது நல்லவா இருக்கு.... வர்றவன் நல்ல பேரு வாங்குறதுக்காக, நீங்க ஏன் கெட்ட பேரை எடுக்கிறீங்க...?''
"என்ன பத்தி எத்தனை நாள் பேசப் போறாங்க.... வர்றவன்தானே இந்த ஆபிஸ்ல நீடிச்சிருக்கப் போறான்... எந்த விஷயமா இருந்தாலும் என் மனசாட்சிப்படி நடந்துகிறேன். இந்த விஷயத்தில நான் உறுதியா இருக்கேன். தயவு செய்து இதைப் பத்தி சோம வேற பேசலாமே...'' என்றார் கோபால்.
சுந்தரால் என்ன சொல்வதென்றே தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றான்.

9 comments:

இராகவன் நைஜிரியா said...

// "என்ன பத்தி எத்தனை நாள் பேசப் போறாங்க.... வர்றவன்தானே இந்த ஆபிஸ்ல நீடிச்சிருக்கப் போறான்... எந்த விஷயமா இருந்தாலும் என் மனசாட்சிப்படி நடந்துகிறேன். இந்த விஷயத்தில நான் உறுதியா இருக்கேன். தயவு செய்து இதைப் பத்தி சோம வேற பேசலாமே...'' என்றார் கோபால்.//

இதுமாதிரி உள்ள நல்லவர்களால்தான் உலகம் இன்றும் ஓடிக்கொண்டு இருக்கின்றது என நம்புகின்றேன்.

அன்புமணி said...

தங்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன், ராகவன் சார்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படி யோசிக்கறவங்களும் உலகத்துல உண்டா

அன்புமணி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
இப்படி யோசிக்கறவங்களும் உலகத்துல உண்டா//
நான் கண்ட ஒருவரின் கேரக்டரையே இக்கதையில் பயன்படுத்தியிருக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உணர்வுகளைத் தொடும் கதை.. இன்னும் இது போன்ற நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என்பதே மனதுக்கு சந்தோஷத்தைத் தருகிறது..

அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
உணர்வுகளைத் தொடும் கதை.. இன்னும் இது போன்ற நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என்பதே மனதுக்கு சந்தோஷத்தைத் தருகிறது..//

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

thevanmayam said...

அன்பின்
அன்புமணி,
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா..

ஆதவா said...

சிறந்த கதாசிரியர் நடை.. அழகான கரு.. மனதில் பதியும் வரிகள்...

பியூன் கோபால் போன்று அடுத்தவர் மனம் கோணாமல், அல்லது தன்னால் பாதிக்கப்படாமல் நடந்து கொள்ளும் வெகு சிலர் இருக்கையிலேதானே உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது....!!!

அந்த முதியவர் மனதில் ஏற்படும் பெருமிதம் போலவே படித்தவர் நெஞ்சில் புளங்காகிதம்

தொடருங்கள்

அன்புமணி said...

ஆதவன்!
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...