Wednesday, 29 April, 2009

தனிமரம் சிறுகதை - பாகம் -1

தினசரி நாட்காட்டியின் தாளைக் கிழிக்கும்போதுஅதிலிருக்கும் பொன்மொழிகளை படிப்பது என வழக்கம். அப்படி ஒருநாள் நான் படித்த பொன்மொழி எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் இந்தச் சிறுகதை. கதையின் முடிவில் அப்பொன்மொழி உங்கள் பார்வைக்கு...


மதிய உணவு இடைவேளையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மாலதி தன் அருகில் நிழல்விழ, நிமிர்ந்து பார்த்தாள், சேகர் நின்றிருந்தான்.
"வாங்க சார். நான் நேற்று உங்க வீட்டுக்கு வந்திருக்க கூடாது...சாரி...''
"மாலதி... சாரி கேட்கவேண்டியது நீங்க இல்லை... நான்தான்... பர்மிசனில் வீட்டுக்கு போன நான் ஆபிஸ் டிராயர் சாவியை மறந்து எடுத்துட்டுப் போனது எவ்வளவு பெரிய தப்பு. அதற்காக நீங்க வரப்போக, என் தங்கச்சி அதை தப்பா எடுத்துக்கிட்டு சே... நடந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதற்காகத்தான் நான் வந்தேன்.'' என்றான்.
சேகரின் தங்கை அநாகரிமாக நடந்து கொண்டது வருத்தம் அளித்தாலும், அதை மறைத்துக் கொண்டு, " சே... சே... அதை நேற்றே நான் மறந்துட்டேன். என் மேலதான தப்பு. ஆபிஸ் வேலைக்கு பியூன் இருக்கும்போது, உங்ககிட்ட ஆபிஸ் டிராயார் சாவி வாங்க உங்க வீட்டுக்கு நான் வந்திருக்க கூடாது. என் வீடும் அதே தெருவில இருந்ததால வந்தேன்.'' என்றாள்
"மாலதி. நீங்க பெருந்தன்மையா சொன்னாலும், என் தங்கச்சி நடந்தவிதம் எனக்கே புடிக்கலைங்க. என்னன்னு தெரியலை கொஞ்ச நாளாவே இப்படித்தான் நடந்துக்கிறா.''
"எல்லாம் வயசுதாங்க காரணம்.''
"என்னங்க சொல்றீங்க? உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதானே இருக்கும். உங்ககிட்ட உள்ள இந்த பக்குவமான பேச்சு அவகிட்ட இல்லையே...''
"பக்குவங்கிறது அனுபவம் சம்பந்தப்பட்டதுங்க. எனக்கும் உங்க மாதிரி ஒரு அண்ணன் இருந்தா... நானும் அப்படித்தான் நடந்துக்குவேனோ என்னவோ... இப்ப என் குடும்ப பொறுப்பு என்மேல இருக்கிறதால கல்யான ஆசைகளை தூர நிறுத்திவைச்சிருக்கேன். ஆனா உங்க தங்கச்சிக்கு அப்படி கிடையதில்லையா... அவளுக்கு அவ கனவுகள்தான் முக்கியமா இருக்கும்.''
"ம்... இதுக்குதான் பொம்பள மனசு பொம்பளைக்குத்தான் தெரியும்னு சொன்னாங்க போலிருக்கு... சரிங்க, மணியாகுது. நான் என் சீட்டுக்கு போறேன். மறுபடியும் உங்ககிட்ட ஸாரி கேட்டுக்கிறேன்.'' என்றவாறு சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. மனதுக்குள் சேகர் சொன்னது மீண்டும் ஒலித்தது... "உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதான்... உங்ககிட்ட இருக்கிற பக்குவம் அவகிட்ட இல்லியே...' மாலதி தன்னையும் அறியாமல் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.

மாலைநேர கடையில் காப்பி குடித்துவிட்டு தம் அடித்துக் கொண்டிருந்த சேகரைக் கண்டதும், காப்பி வாங்க வந்த ப்யூன், "சேகர் சார்...'' என்றவாறு அருகில் வந்தான்.
"என்ன அய்யாதுரை, என்ன விஷயம்?'' என்றான் சேகர்.
"நம்ம அய்யா, ஏதாவது உங்ககிட்ட விசாரிச்சாரா?'' என்றான். அய்யா என்பது கம்பெனி முதலாளியை.
"ஏன்? என்ன விஷயம்?''
"இல்ல... மதியானம் நீங்களும் மாலதி அம்மாவிம் பேசிக்கிட்டிருக்கும்போது, அய்யா வந்திருப்பாரு போல... காதல் அது இதுன்னு ஏதாவது விசயமா அப்படின்னு கேட்டாரு... அதான் உங்களை நேரா விசாரிச்சாரான்னு கேட்டேன்...'' என்று சிரித்தான்.
"நம்ம அய்யாவா அப்படிக் கேட்டாரு...'' என்றவன் நடந்ததை ப்யூனிடம் விளக்கினான்.
"அப்படியா விஷயம்... சரி நான் வர்றேன் சார்'' என்றவாறு ப்யூன் செல்ல, முதலாளி நம்மைப்பற்றி எதுக்கு விசாரிக்கணும்? என்று யோசிக்க ஆரம்பித்தான். மாலதியை தன்னுடன் இணைத்து பார்த்த முதலாளிக்கு மானசீகமாக நன்றி சொன்னான். மனத்திரையில் மாலதியின் முகம் பளீரென்று மின்னியது.

சலவைக்கற்கள் ரெத்னா இல்லம் என்று பதிக்கப்பட்ட வாசகத்துடன் கம்பீரமாக காட்சியளித்த பங்களாவின் கேட்டை நெருங்கினான் சேகர். வாட்ச்மேன் சேகரைக் கண்டதும் சிரித்து, "அய்யா பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்திருக்கிறார். உங்கள அங்க வரச்சொன்னார்'' என்றான்.
சேகரின் மனதிற்குள் என்ன இவர் இரண்டு நாட்களாக வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்துக் கொண்டான். நேற்று பியூனிடம் விசாரித்தவர், ஞாயிற்றுக்கிழமையான இன்று வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறார்... இப்போது நேரிடையாக விசாரிக்கப் போகிறாரா? இதுவரையில் கம்பெனி ஆட்களை யாரையுமே வீட்டிற்கு வரச்சொன்னது இல்லை என்று ப்யூன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தவர், இவனைப் பார்த்ததும், "வாங்க சேகர், உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். உக்காருங்க.'' என்றார். ஆபிஸ் நேரங்களில் காட்டும் கண்டிப்பான குரல் இங்கு இல்லை. சேகர் அமர்ந்ததும், " என்ன சாப்பிடுறீங்க?'' என்றார்.
"ஒண்ணும் வேணாம் சார்... என்ன விசயமா வரச்சொன்னீங்கன்னு எனக்கு புரியவேயில்லை. ஒரே குழப்பமா இருக்கேன் சார்'' என்றான்.
"கல்யான வயசுப் பொண்ண வீட்ல வைச்சுருக்கிறது ரொம்ப கஷ்டமான விசயம் இல்லையா சேகர்?'' என்றார்.
பியூன் எல்லா விசயத்தையும் இவரிடம் வந்து சொல்லிட்டானா என்று யோசித்துக் கொண்டே, "ஆமா சார்... கால நேரத்தோட கல்யாணம் பண்ணிட்டா பிரச்சினை இல்லை'' என்றான்.
"உங்க தக்ச்சி கல்யாணத்தை ஏன் தள்ளிப் போடுறீங்க? சீக்கிரமா பார்த்து முடிக்க வேண்டியதுதானே?''
"இன்னும் அதுக்கு என்ன நான் தயார் பண்ணிக்கலை சார்..'' என்று இழுத்தான்.
"ஏன் ஏதாவது பணப்பிரச்சினையா?''
"சார்... அது வந்து...''
"சும்மா சொல்லுங்க சேகர்...''
" ஆமா சார்... எங்க அப்பா பார்த்த வேலையைத்தான் எனக்குக் கொடுத்திருக்கீங்க. எங்க அப்பா இறந்தப்போதான் நிறைய கடன் வாங்கி வைச்சிட்டு போயிருக்கிற விசயமே எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் இப்பதான் அடைச்சிட்டு வர்றேன். இனிமேதான் ஏற்பாடு பண்ணணும்.''
"உன் தங்கச்சி வயசுப் பொண்ணுகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிட்டதா கேள்விப்பட்டேன். அந்த விரக்கிதியிலதான் உன்ள தங்கச்சி, நம்ம ஸ்டாப் மாலதியை தப்பிதமா பேசினதா கேள்விப்பட்டேன். இந்த மாதிரி நேரத்தில நீங்க இன்னும் நாள் கடத்துறது சரியில்லைன்னு எம்மனசுக்குப்படுது'' என்றார்.
"என்னைப்பத்தி, என் குடும்பத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சி வைச்சிருக்கீங்க சார்''
"இதுக்குப் பின்னால என் சுயநலமும் இருக்கு சேகர்...''
"என்ன சொல்றீங்க சார்?''
"என் பொண்ணைப் பார்த்திருக்கீங்களா நீங்க?''
"இல்லை சார்... வெளிநாட்டில படிக்கிறதா கேள்விப்பட்டேன்....''
"ஆமா. படிட்பபு முடிஞ்சு, இப்ப ஊருக்கு வர்றா... வந்த உடனே அவளுக்கு கல்யாணம் பண்ணிடணும்னு முடிவெடுத்திருக்கேன். மாப்பிள்ளையை கூட தேர்வு பண்ணியாச்சு... அது... நீங்கதான்...''
"சார்.... நீங்க... '' அவர் குடுத்த அதிர்ச்சியிலும் மாலதி முகம் கண்முன் தெரிந்தது.
"யெஸ் சேகர். உங்க தங்கச்சி கல்யாணமும், உங்க கல்யாணமும் ஒரே நேரத்தில் வைச்சிக்கலாம். முழுச்செலவையும் நானே பார்த்துக்கிறேன். உங்களோட மூணு வருஷ சர்வீஸ்ல, உங்களுக்கே தெரியாம என் பார்வை உங்க மேலதான் இருந்திச்சு. என் மகளோட படிப்பு முடியட்டும்னு காத்திருந்தேன். இப்ப யோசிச்சு, நல்ல முடிவைச் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன். இப்ப போயிட்டு வாங்க'' என்றார்.
பதில் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல், வீடு நோக்கி கிளம்பினான்.

(தொடரும்)

21 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

கதை நல்லாருக்கு சார்.நீரோட்டமான நடை கதையை முழுமையாகப் படிக்கவைத்தது. என்ன ஒரு குறை மெகா சீரியல் போல தொடரும்னு முடிச்சுட்டீங்களே??????????????????

குடந்தைஅன்புமணி said...

தங்கள் வருகைக்கு நன்றி! இரண்டு பாகம் மட்டுமே... அடுத்த பாகத்தை படிக்க மறந்துடாதீங்க!

அ.மு.செய்யது said...

கதை நல்லா வந்துருக்குங்க...எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை.

//பக்குவங்கிறது அனுபவம் சம்பந்தப்பட்டதுங்க//

குறிப்பா இந்த வரிகள் எழுத்தில் ஒரு முதிர்ச்சியை காட்டுகிறது.

நானும் இப்போது தான் சிறுகதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உங்களிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய மிச்சமிருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.அடுத்த பாகம் வரை காத்திருப்போம்.

ஆ.முத்துராமலிங்கம் said...
This comment has been removed by the author.
ஆ.முத்துராமலிங்கம் said...

வாங்க.. வாங்க..அன்புமணி சார் வணக்கம்! எப்படி இருக்கீங்க,
கொஞ்ச நாளா நீங்க வலைப்பக்கம் வரல, அதிக வேலையோ அல்லது ஊருக்கு ஏதும் போயிருந்திருப்பீங்கனு நினைக்கிறேன்.
மீண்டும் தொடர்ச்சிக்கு மகிழ்ச்சி,
கதையை இன்னும் படிக்க வில்லை
இப்ப வேலை இருக்கு அப்புறமா படிச்சிடு வரேன்.
வாழ்த்துக்கள்.

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.நடையும் நல்லா இருக்கு. ஒரு வித சஸ்பென்ஸோடு நிறுத்தி விட்டீர்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க வாங்க நண்பா.. குபீர்னு கதையோட வந்து இருக்கீங்க.. நல்லா இருக்கு.. சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதுங்க.. கொஞ்ச நாள் நீங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம காணாம போய்டீங்க.. நேத்துத்தான் ஆதவா கிட்ட போன்ல பேசும்போது சொல்லிக்கிட்டு இருந்தேன்..ஆள் என்ன ஆனார்னு தெரியல.. போய் பார்க்கனும்னு.. இன்னைக்கு நீங்கள் வந்து நிக்கிறீங்க.. பரவாயில்ல.. உங்களுக்கு ஆயுசு நூறுதான்.. ஜமாயுங்க

குடந்தைஅன்புமணி said...

தங்களின் ஆதரவுக்குரல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பர்களே! தங்கையின் (சித்தப்பா மகள்) திருமணத்திற்கு ஊருக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தால், இன்டர்நெட் கனைக்சன் அற்றுப்போய் இருக்கிறது. வேலைப்பளுவும் சேர்ந்து கொண்டதால் உங்களையெல்லாம் சந்திக்க இயலவில்லை. பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது. இனி சந்திக்கலாம்!

Suresh Kumar said...

சார் சிறுகதை அருமையாக இருக்கிறது

ஆதவா said...

வெல்கம் பேக் அன்புமணி.. நேத்திக்கு உங்களைப் பத்தி கார்த்திகைப் பாண்டியரிடம் பேசிக்கிட்டு இருந்தேன்..

கதை இன்னும் படிக்கலை.. படிச்சுட்டு சொல்றேன்!!!

ஆதவா said...

ரொம்ப பிரமாதமா வந்திருக்கு,... இயல்பான கதை ஓட்டம்... இப்போவரைக்கும் மாலதிக்கு சேகர் குறித்து எந்த எண்ணமுமில்லை. அடுத்தபாகத்தில் தெரியவரலாம். சேகருக்கு மாலதி மேல் ஒரு கண்.... ஆனால் முதலாளி இப்படி சொல்லியிருக்கிறார்... கொஞ்சம் சிக்கலான கதை.. எப்படி முடிச்சவிழ்க்கிறீர்கள் என்று பார்ப்போம்..... அடுத்த பாகத்தை விரைவில் கொடுங்கள்...

" உழவன் " " Uzhavan " said...

கதையில் நல்ல எதார்த்தம் இருக்குதுங்க.. செய்யது அவர்கள் சொன்னதுபோல, அலுப்பு தட்டாம அதுவாட்டு போகுது.. அடுத்த பகுதியை எதிர் நோக்குகிறோம்.

ஆ.முத்துராமலிங்கம் said...

கதை பிடிச்சிருக்கங்க.
நல்லா எழுதியிருக்கீங்க.
கதையை விருவிருப்பான கட்டத்துல தொடரும் போட்டு இருக்கீங்க அடுத்து சேகர் என்ன செய்ரார்னு பாப்போம்.
அடுத்த தொடரை ஆர்வமா எதிற்பார்க்கரேன்.

இராகவன் நைஜிரியா said...

நீ...........ண்...........ட......... இடைவெளிக்கு பின் ஒரு நல்ல கதை உங்களிடம் இருந்து.

ஆரம்பமே கலக்கல். அடுத்த பகுதியை விரைவில் எதிர்ப்பாக்கின்றேன்

நசரேயன் said...

நல்லா இருக்கு அடுத்து எப்ப??

ராமலக்ஷ்மி said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! கதை ஓட்டம் இயல்பாக உள்ளது.

KADUVETTI said...

பெருகதை :))))))

வியா (Viyaa) said...

கதை ரொம்ப நல்ல இருக்கு அன்புமணி..
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

பழமைபேசி said...

அடிச்சு ஆடுங்க நண்பா.... ஆனா, இன்னும் கொஞ்சம் வரிசைப்படுத்தி(format), பத்தி பிரிச்சி எழுதினா இன்னும் நல்லா இருக்கும்.

Mrs.Menagasathia said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு,அடுத்த பாகம் எப்ப?

வெங்கிராஜா said...

இங்கு நானிடும் முதல் பின்னூட்டம் இது தானென்று நினைக்கிறேன்.. அடுத்த பாகத்தை கூடிய விரைவில் தரவும்! பழமொழியையும் சொல்ல கெடு விதிச்சிட்டீங்களே... நல்ல தொடக்கம்.. சுவாரசியமான முடிவை எதிர்நோக்குகிறேன்! நல்ல கதைக்கு நன்றி!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...