Monday 27 June, 2011

குறைந்தபட்ச மனசாட்சியாவது வேண்டாமா?



"தானாய்க் கனிகிற கனி,
தடியால் எதற்கு அடிப்பானேன்?''

தடியால் அடித்தாலும் பரவாயில்லை. ஆனால், 'கல்'லால் அடிக்கும் கைங்கர்யத்தை என்னவென்று வொல்வது?
ஒரு வினைக்கான வேதிப்பொருளைப் பல்வினைக்கும் பயன்படுத்துவது மனிதப் புத்தியின் மகத்தான செயல்தான். ஆனால், அந்தச் செயல் மகத்தானவற்றுக்கென்றால், மனிதனை "மாண்புமிகு' என்று மார்தட்டிச் சொல்லலாம்.
என்ன விளங்கவில்லையா?
வீடு வந்த விருந்தாளிக்கு வெந்ததும் வேகாததுமாய் வடித்துக் கொட்டும் ஓர் இரைவேக்காட்டுக் கதியைப்போல் திகழ்கிறது இன்றைய வர்த்தக உலகம்.
'விளைந்தது வீ(தி)டு வந்து சேரும்' என்பது விவசாய விதி என்றால், பிஞ்சைப் பறித்து வெம்ப வைத்து விற்பனைக்கு விடுவதென்பது இன்றைய வியாபார உலகின் "விவேக' விதியோ?
உலகம் ஒரு வியாபாரச் சந்தைதான்; ஆனால், அதில் கொஞ்சமேனும் நேர்மை, நீதி அல்லது குறைந்தபட்சம் மனசாட்சியாவது வேண்டாமா?
ஒவ்வொரு பருவத்திலும் அந்தப் பருவத்துக்குத் தேவையான அல்லது அந்தப் பருவத்தில் இயற்கையாகவே கிடைக்கும் விளைபொருட்களைச் சந்தையில் விற்பது சகஜந்தான்.
குளிர்காலம் வரும் முன்பே குல்லா நெய்வது ஓர் உற்பத்தித் தர்மம்தான். ஆனால், புடவை உடுத்த வைப்பதற்காகச் சிறுமியைப் பருவக்காரியாக்குவது பாதகச் செயல் இல்லையா?
கோடைக்காலம் கொழுந்துவிடத் தொடங்கி விட்டாலே... மா, பலா, தர்ப்பூசணி போன்ற கனி வகைகள் கடைவீதிக்கு வந்து கண்களை ஈர்க்கின்றன. அவை பழுத்தவையா அல்லது பழுக்க வைக்கப்பட்டவை? என்பதே நமது கேள்வி.
உதாரணத்துக்கு, முக்கனியில் முதற்கனியான மாங்கனியை எடுத்துக் கொள்வோம். இவை கிளைகளிலேயே கனிந்தா கடைத்தெருவுக்கு வருகின்றன? இல்லை... இல்லை... சந்தைக்குச் சரக்காக்கும் அவசரத்தில் காய்களாகவே கொய்யப்பட்டு, பிறகு பெரிய பெரிய கிடங்குகளில்- "கார்பைடு' என்ற வேதியியல் கார்பைடுக் கற்களின் வெப்பத்தில் "குளிர்காய்ந்த' மாங்காய்களோ, தாம் பழுத்துவிட்டதாய்ப் பாவனை செய்கின்றன.
பிறகென்ன... ? தகதகக்கும் ஒரு தங்க நிறத்தோடு அவை கடைவீதிக்கு வந்து கண் சிமிட்டுகின்றன.
இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புவது இதைத்தான். நாம் மேற்சொன்ன "கார்பைடு' கல் என்பது என்ன? அது என்ன வேலை செய்கிறது?
உலோகத் தகடுகளை உருக்கி ஒட்டவைக்கும் ஒருவித எரிவாயுவைக் கருத்தரிப்பவைதான் இந்த கார்பைடுக் கற்கள்.
இரும்பையே எரித்து உருக்கும் இந்த வேதியியல் கற்களின் வெதுவெதுப்பில் கனிபவைதான் நாம் ஒவ்வொரு கோடையிலும் வாங்கி விழுங்கும் இந்த மாங்கனிகள் மன்னிக்கவும் "கார்பைடுக் கனிகள்!'
ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கார்பைடுக் கனிகள் விற்பனைக்கு வருவ தோ, அப்போது சமூக நல ஆர்வலர்கள் அதற்குக் கண்டனக் குரல் எழுப்புவதோ ஒன்றும் புதிதில்லைதான். ஆனால், வர்த்தக முதலைகள் சிலரோ, சம்பந்தப்பட்டவர்களையும் அரசு அதிகாரிகளையும் "சரிகட்டி' சரக்கை எப்படியோ சந்தைப்படுத்தி விடுகின்றன.
இந்தச் சரிகட்டும் காசில்- கார்பைடுக் கனிய வைத்தல் அல்லாத, வயிற்றுக்குள் வன்முறைச் சம்பவம் நிகழ்த்தாத மாற்று ஒன்றை இவர்கள் மலர்த்துவார்களேயானால், இந்தக் "குடல் காப்பாற்றிகளை' கும்மிட்டுத் தொலைக்கலாம்.
வாசனையற்று, வெறும் "விழி ஈர்ப்பு விசை'யாய் நிறங்காட்டும் சுவையற்ற இந்த கனிகளைச் சுவைத்தால், நுனி நாக்கில் நமச்சலெடுக்கும். பிறகு, அவை குடலுக்குள் குந்தி கும்மியடிக்கும்.
பிறகென்ன...?
மருத்துவர்; மருந்து; மாத்திரை; மனவேதனைதான். எனவே, இவை போன்றவற்றை உண்டுணர்ந்து குடல் நொந்து குமையாமல் கண்டுணர்ந்து புறந்தள்ளுவதே "மாண்புமிகு மக்கள்' பண்பாகும்.

-கோ. பாரதிமோகன். இவரின் சில கவிதைகளை எனது மற்றொரு வலைத்தளமான கவிதைகுரலில் படித்திருப்பீர்கள். திருச்சியிலிருந்து வெளிவரும் துடிப்பு மாத இதழில் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு... அவரின் அனுமதியோடு... 

7 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பலர் மனதுக்குள் கேட்கும் கேள்வியை பதிவிட்டுள்ளீர்கள் நண்பா.

டன் டன்னாக கொட்டி அழிக்கப்படும் மாம்பழங்கள் கெட்டுப்போன மனிதமனங்களையே காட்டுகின்றன

முனைவர் இரா.குணசீலன் said...

இப்போது மாப்பழங்களுக்குப் போட்டியாக பேங்களுரிலிருந்து மாதுளம்பழங்களை இறக்கியிருக்கிறார்கள்.


மலிவு விலையில் கிடைக்கும் மாதுளம் பழங்களுக்குப் பின்னால் என்ன வேதியல் மாற்றங்களும்,வியாபார நோக்கங்களும் உள்ளனவோ தெரியவில்லை.

ஷர்புதீன் said...

நேர்மைக்கும் மனசாட்சிக்கும் ஒத்தே வராதுங்க

குடந்தை அன்புமணி said...

//டன் டன்னாக கொட்டி அழிக்கப்படும் மாம்பழங்கள் கெட்டுப்போன மனிதமனங்களையே காட்டுகின்றன//

உண்மைதான் நண்பா...

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

இப்போது மாப்பழங்களுக்குப் போட்டியாக பேங்களுரிலிருந்து மாதுளம்பழங்களை இறக்கியிருக்கிறார்கள்.


மலிவு விலையில் கிடைக்கும் மாதுளம் பழங்களுக்குப் பின்னால் என்ன வேதியல் மாற்றங்களும்,வியாபார நோக்கங்களும் உள்ளனவோ தெரியவில்லை.//

இப்போ இதுவுமா... வரவர எதையும் யோசித்துதான் சாப்பிடணும் போலிருக்கு...

குடந்தை அன்புமணி said...

//ஷர்புதீன் said...

நேர்மைக்கும் மனசாட்சிக்கும் ஒத்தே வராதுங்க//

உங்க ஆதங்கம் புரிகிறது நண்பா...

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...