முதலாளி சொன்ன விசயத்தை வீ்ட்டில் சொல்ல, அம்மாவுக்கும், தங்கைக்கும் உற்சாகம் தாளமுடியவில்லை. அதைக்கண்ட சேகருக்கு மனது பிசைந்தது. மனதுக்குள் மாலதியின் முகம் வந்து வந்து போனது. அவ்வளவுதானா... என்ன மறந்துவிடுவீங்களா என்று கேட்பது போல தோன்றியது. முகம்வாடிப்போய் அமர்ந்தான்.
" என்னடா? ஏ்ன ஒரு மாதிரி இருககே?" என்றாள் அம்மா.
"எனக்கு முதலாளிப் பெண்ணை கல்யாணம் பண்ண விருப்பமில்லைம்மா..."
இதைக்கேட்ட தங்கை கோபமாக "ஏன் துரைக்கு பிடிக்கலையாம்?"
"பிடிக்கலைன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க" என்று குரலை உயர்த்தினான்.
"அந்த முதலாளிக்கு ஒரே பொண்ணு, கம்பெனி, வீடு, சொத்துன்னு ஏகப்பட்டது இருக்கு. நல்ல படிப்பு. அப்புறம் என்ன குறை? வலிய வர்ற சீதேவிய விரட்டி வி்ட்டுடு. நான் மூலையில மூதேவியா உட்கார்ந்திருக்கேன். என் கல்யாணத்தையும் எந்த செலவில்லாம செஞ்சி வைக்கிறேன்னு சொல்றாரு, இந்த மாதிரி நேரம் அமையறதே அபூர்வம். எல்லாம் என் தலையெழுத்து." என அழ ஆரம்பித்த தங்கையை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.
"சேகர் உனக்கு என்ன பிரச்சினை?" என்றாள் தாய்.
" சின்ன வயசிலேர்ந்து நான் ஆசைப்பட்டது என்னம்மா எனக்கு கிடைச்சிருக்கு? நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்பா இறந்துபோக குடும்ப சூழ்நிலையில வேலைக்கு போகும்படி ஆயிடுச்சு. எனக்கு பிடிச்ச பெண்ணாப்பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தானே என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்."
"இவ்வளவு பணம் உள்ள சம்மந்தத்தைவிட்டு்ட்டு. வேற எந்த இடத்தில் சம்மந்தம் வைச்சிக்கி்ட்டாலும் நீ சொல்ற நிம்மதி கிடைக்காதும. இந்த காலத்தில பணம் இல்லைன்னா ஏது நிம்மதி. பேசாம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க. என்ன மட்டும் உங்க ஓனர் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா உடனே ஓக்கேன்னு சொல்லிருப்பேன்." என்று கூறிய தங்கையை மிரட்சியுடன் பார்ததான் சேகர்.
வெறுப்புடன் தன்அறைக்கு சென்றான். தூக்கம் படிக்காமல் யோசனையாய் உங்கார்ந்திருந்தான். விளக்கு வெளிச்சம்பட்டு எழுந்து வந்தாள் அம்மா.
" சேகர் உன் தங்கையோட பேச்சை கேட்டியா... அவளுக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. நம்மாள அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க பணம் பற்றாக்குறை காரணமா தள்ளிப்போய்கிட்டே இருக்கு. நீ நல்லா யோசனை பண்ணு. நம்ம குடும்ம மானத்தைக் காப்பாத்துப்பா. அவ ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டா நான் உசிரோட இருக்க மாட்டேன். முதலாளிப் பெண்ணை நீ பார்த்ததில்லை. வெளிநாட்டுலேர்ந்து வந்தோன்ன பாரு. போட்டோலேயே அந்தப் பொண்ணு நல்லாத்தான் இருக்கா. வெளிநாட்ல படிச்சப் பொண்ணு. கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணுவா போலிருக்கு. எல்லாம் இங்க வந்தா சரியா போயிடும். சில விசயங்களை நாமதான் அனுசரிச்சி்ப் போகணும்" அம்மா பேசிக்கொண்டே போனாள். சேகருக்கு எதுவும் கேட்கவில்லை. மனம் முழுவதும் மாலதி... மாலதி... மாலதி...
எல்லோரும் வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தேறியது. கம்பெனி மேனேஜிங் டைரக்டராக சேகர் நியமிக்கப்பட்டான். தங்கைக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூர் போய்வி்ட்டாள்.
கல்யாணம் முடிந்த கையோடு சித்ரா (முதலாளிப் பெண்)சேகரிடம் 'நான் இன்னும் நிறைய படிக்கணும். அப்பாவோட வற்புறுத்தலாலதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்கதான் அப்பாக்கிட்டே பர்மிசன் வாங்கித்தரணும். என் பேச்சை விட உங்க பேச்சைத்தான் அப்பா கேட்டகிறாரு. அவ்வளவு தூரம் என்ன பண்ணுனீங்களோ...ஆனா நான் அமெரிக்கா போகணும். அதுக்கு அனுமதி வாங்குங்க. படிச்சிமுடிச்சி வர்றவரைக்கும் நமக்குள்ளே தாம்பத்தியம உறவு எதுவும் கிடையாது." என்றாள்.
சேகருக்கும் மனதிற்கு ஆறுதல் தேவைப்பட்டது. அதனால் முதலாளியிடம் போராடி சம்மதம் பெற்று சித்ராவை அமெரிக்கா அனுப்பிவைத்தான். தங்கைக்கு சந்தோசத்தைக் கொடுத்த இந்த பணம், தனக்கு நிம்மதியை தராததை எண்ணி கண் கலங்க அமர்ந்திருந்தான் சேகர்.
பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.
- ஸ்காட்லாந்து பழமொழி.