Sunday, 10 January, 2010

சுயபுராணம் பகுதி-2

சுயபுராணம் முதல் பகுதியில் தஞ்சையிலிருந்து குடந்தைக்கு வீடு மாறிச் செல்வது பற்றி எழுதியிருந்தேன். முதல் பகுதியில் தஞ்சாவூரைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று உங்களில் சிலர் நினைத்திருக்கலாம். அந்த வயதில் எனக்கு தெரிந்ததெல்லாம்- முன்பு சொன்னது போலவே தஞ்சை கோயிலும், சிவகங்கை பூங்கா, அரண்மனை போன்றவைதான். அதற்குப் பிறகு தஞ்சைப் பகுதிக்கும் எனக்குமான தொடர்பு விட்டுப் போயிற்றா என்றால் இல்லை. அங்கும் பல நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்களைப் பற்றி பிறகு காண்போம்.

இப்போது கும்பகோணம் பற்றி...
கும்பகோணத்தில் உள்ள பள்ளியொன்றில் என்னைச் சேர்த்தார்கள். அப்போது எங்கள் வகுப்பாசிரியராக இருந்தவர் சந்திரசேகர். அவர் பாதி நாள் வகுப்புக்கு வரமாட்டார். அவர் ரியல் எஸ்டேட் பிஸினஸை செய்து வருகிறார் என்பது பிற்பாடுதான் தெரிந்தது. ஏற்கெனவே தஞ்சையில் நான் படித்த பள்ளியில் என் படிப்பு சுமார் ரகமாகத்தான் இருந்தது. அதோடு அந்தப் பள்ளியில் அடிக்கடி திருமணம் போன்ற விழாக்கள் நடைபெறும். அதற்காக பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள். என் அப்பாவோட நண்பரின் மனைவிதான் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். அதனால் எனக்கு பல சலுகைகள். படிப்பு விசயத்தில் இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நான் படிக்கவே இல்லையென்றாலும் எனக்கு மதிப்பெண் போட்டு எனக்கு நல்லது செய்வதாக நினைத்து என் ஆரம்பப் படிப்புக்கு தடைக்கல்லாக இருந்துவிட்டார் அவர். அப்போது சிறு வயது என்பதால் எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. அதன் பாதிப்பு குடந்தைக்கு வந்தபிறகுதான் புரிந்தது. இப்போது எதற்கு இதை எழுதுகிறேன் என்றால் இதைப் படிக்கும் ஆசிரியர்கள் இப்படி ஒரு சலுகையை யாருக்கும் கொடுத்து, என்னைப் போன்ற இன்னொரு மாணவனின் வாழ்க்கையை கெடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

அடித்தளமே சரியில்லததால் குடந்தையில் படிப்பதற்கு நிறையவே சிரமப்பட்டேன். என் தந்தைக்கு பணி நேரம் முடிந்தாலும் அவர் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் வீட்டிற்கு வரும் நேரம் முன்பின்னாகத்தான் இருக்கும். என் அம்மா படிப்பு வாசனை அற்றவர். என் சகோதரனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். பின் என் படிப்பு எப்படி இருக்கும்?
எப்படியோ தத்தி தத்தி ஆறாம் வகுப்பு சென்றாயிற்று. அங்கு சென்றவுடன் பாடப்பிரிவுகளை பார்த்ததும் எனக்கு தலை சுற்றத் தொடங்கிவிட்டது. எங்களுக்கு கணக்கு வாத்தியாராக வந்தவர் முருகையன் என்பவர். அவர் பாடம் நடத்தும் போது கவனமாக கவனித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் எல்லாரும் அசட்டையாக இருப்பதையும் நான் கவனித்துக் கொண்டிருப்பதையும் கண்ட ஆசிரியர் என்னை எழுப்பி, இவனைப் பாருங்கள் எவ்வளவு கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறான் இவனைப்போல எல்லாரும் கவனமாக இருங்கள் என்றார். அந்த மாதம் வந்த முதல் திருப்புத் தேர்வு முடிந்து விடைத்தாளை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அவர்களின் மதிமப்பெண்களையும் கூறி வந்தார் கணக்கு வாத்தியார். என் முறையும் வந்தது. என் மதிப்பெண்ணை கண்டவர் உடனடியாக பிரம்பை எடுத்துக் கொண்டு என்னை விளாச ஆரம்பிக்க, வகுப்பில் சிரிப்பொ- ஆரம்பித்தது. இன்னமுமா உங்களுக்கு காரணம் தெரியவில்லை... கணக்குப் பாடத்தில் கீழே சிவப்பு கோடு கிழிக்கும் அளவுக்கு அய்யா அப்படி ஒரு மார்க் வாங்கியிருந்தேன்...

(தொடரும்)

6 comments:

நட்புடன் ஜமால் said...

பகுதியை இன்னும் கொஞ்சமேனும் நீட்டலாம்

---------------------

11ஆவதில் என்னை பெயிலாக்க மேனேஜ்மெண்ட் முடிவு செய்து என் இரண்டாம் தாய் என்று நான் சொல்லும் ஆசிரியை தான் என்னை பாஸாக்க வேண்டும் என்று சொல்லி ...

ஸ்ஸ்ஸ் --- இருங்க மூச்சிறைக்குது

--------------------

நீங்கள் சொல்லியிருப்பதும் சரியே ...

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
பகுதியை இன்னும் கொஞ்சமேனும் நீட்டலாம்//

அப்படியா... உங்களுக்கு போடித்துவிடப் போகிறது என்று நினைத்தேன்...

//11ஆவதில் என்னை பெயிலாக்க மேனேஜ்மெண்ட் முடிவு செய்து என் இரண்டாம் தாய் என்று நான் சொல்லும் ஆசிரியை தான் என்னை பாஸாக்க வேண்டும் என்று சொல்லி ...

ஸ்ஸ்ஸ் --- இருங்க மூச்சிறைக்குது//

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

க.பாலாசி said...

ஆனாலும் எல்லாருக்கும் கணக்குதான் இடிக்குது. அது ஏன்தான் தெரியல.

நம்ம ஊரு கலைச்செல்வங்களைப்பற்றியும் இடையிடையே சொருகிவிட்டீங்கன்னா நல்லாருக்கும்.

அம்பிகா said...

சுயபுராணம் நல்லாத்தான் இருக்கு. தொடருங்கள்.

குடந்தை அன்புமணி said...

//க.பாலாசி said...
ஆனாலும் எல்லாருக்கும் கணக்குதான் இடிக்குது. அது ஏன்தான் தெரியல.

நம்ம ஊரு கலைச்செல்வங்களைப்பற்றியும் இடையிடையே சொருகிவிட்டீங்கன்னா நல்லாருக்கும்.//

நிச்சயமா பாலாசி. சொல்லிடுவோம்.

குடந்தை அன்புமணி said...

//அம்பிகா said...
சுயபுராணம் நல்லாத்தான் இருக்கு. தொடருங்கள்.//

தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...