Wednesday, 27 January, 2010

விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் வீரியக்காரி கிருஷ்ணம்மாள்


வருடம் தோறும் ஜனவரி மாதம் சமூக தொண்டு செய்யும் சான்றோர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்கிறது. அதுபோல் இந்த வருடமும் திருவள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யன் திருவள்ளுவர் விருது -முனைவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது திரு. நக்கீரன் கோபாலுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது- திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது- முனைவர் திரு. அவ்வை நடராஜனுக்கும், பெருந்தலைவர் விருது- விருதுநகர் திரு. இரா. சொக்கர் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது- திரு. ந. இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது- கவிஞர் திரு. தமிழ்தாசன் அவர்களுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- திரு. அண்ணாமலை (எ) இமையம் அவர்களுக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவாநாதம் விருது- முனைவர் திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதில் அம்பேத்கர் விருது பெற்ற திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கொஞ்சம் வித்தியாசமானவர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யன் கோட்டை கிராமத்தில் வசித்து வந்த ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி- திருமதி நாகம்மாள் தம்பதியிருக்கு ஐந்தாவது குழந்தையாக 12.06.1926-ல் பிறந்தார். இவருக்கு ச. ஜெகநாதன் அவர்களுடன் 6.7.1950-ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் இருவரும் மக்கள் சேவையே மகசேனுக்கு செய்யும் தொண்டு என்பதற்கேற்ப கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்புரிந்து வருகிறார்கள்.
திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் காந்தியடிகளை பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். நாடு விடுதலைப் பெற்றபின் வினோபாஜியின் வழிகாட்டுத-ல் பீமிதான இயக்கத்ல் இணைந்து நாடு முழுவதும் பாதயாத்திரை மேற் கொண்டவர்.
நிலச்சுவான்தார்கள் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த அப்பாவி மக்களுக்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அரும்பணிகளை செய்து வருகிறார். 13,000 ஏக்கர் நிலங்களை பல போராட்டங்களினாலும், அரசின் உதவியாலும் பெற்று ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களுக்கு அளித்துள்ளார். அதிலும் மகளிர் பெயரிலேயே இந்நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாப்டி இயக்கத்தின் மூலம் கிராம பொருளாதரம், கிராம சுயாட்சி அடையும் நோக்கில் படித்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொழிற் பயிற்சி, பெண்களுக்கு கறவை மாடுகள், ஏழை மாணவர்- மாணவியர் தங்கி படிக்க விடுதிகள் அமைக்கவும் உதவி வருகிறார்.
சுவாமி பிரமானந்தா விருது, ஜமன்லால் பஜாஜ் விருது, பத்மஸ்ரீ விருது, பகவான் மகாவீர் விருது, காந்தி கிராமப் பல்கலைக்கழக விருது, உலகப் பெண்கள் விருது, சிறந்த பெண்மணி விருது, இந்திரா ரத்னா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். 2006-ல் நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006-ல் உலகின் சிறந்த 1,000 பெண்மணிகளில் ஒருவராக ஸ்விட்சர்லாந்து அமைதிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ல் வீரியக்காரி விருது, 2008-ல் அமெரிக்க நாட்டின் ஓபஸ் விருது, 2008-ல் ஸ்வீடன் நாட்டின் வாழ்வுரிமை விருது) மாற்று நோபல் பரிசு), 2009-ல் வாழ்நாள் சேவை விருதும் பெற்றவர் 2009-ஆம் ஆண்டிற்கான "அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றுள்ளார்.
இந்த விருது பெறும் நிகழ்ச்சியில் அவர் பேசும் போது "தமிழகத்தில் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க விற்க கூடிய வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டு அதையே மனுவாகவும் முதல்வரிடம் அளித்தார்.
அப்படி அவர் கூறியதற்குரிய பொருளை நம் முதல்வர் அறிந்திருப்பார். அத்தகை சட்ட திருத்த நடவடிக்கையை எடுப்பாரா ?

நமது வலைத்தளத்தில் ஏற்கெனவே திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களைப் பற்றி வந்த செய்திகளைப் படிக்க...

4 comments:

ராமலக்ஷ்மி said...

போற்றுதலுக்குரியவர் கிருஷ்ணம்மாள்.
விவசாய நிலங்கள் வாங்கப் பட்டு கட்டிடங்களாகவும் தொழிற்சாலைகளாகவும் மாறிவரும் அவலம் தவிர்க்கப் படும் அவர் அரசிடம் கொடுக்கப் பட்ட மனு பரிசீலிக்கப் பட்டால்.

நல்ல பகிர்வு அன்புமணி.

ஈரோடு கதிர் said...

வணக்கத்துக்குரியவர் கிருஷ்ணம்மாள் அம்மா...

பகிர்வுக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

அவர்களுக்கு வாழ்த்துகள்.

நல்லது நடக்க பிரார்த்தனைகள்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு நண்பரே...

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...