Saturday, 9 January 2010

பயணங்கள் தொடரும்...

பயணங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது நண்பர்களுடன் என்றாலும் சரி, தனியாக சென்றாலும் சரி. தனியாக சென்றால் போரடிக்காதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக எனக்கு அப்படி நேர்ந்ததில்லை. நண்பர்களுடன் செல்லும்போது அரட்டை, அமர்க்களம் என்று செல்லும் பயணம் ஒரு தனி மகிழ்ச்சிதான். அதுவே தனியாக செல்லும்போது என்னை நானே திரும்பிப் பார்த்துக் கொள்வதற்கும், எந்தவித தொந்தரவும் இல்லாமல் இயற்கை அழகை ரசிப்பதற்கும், புதிதாக கவிதைகள் எழுதுவதற்கும் அந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்வையே தரும்.

படிப்பு முடியும்வரை ரயில் பயணம் என்பதே அபூர்வமாக இருந்தது. விடுமுறைக்கு சென்னையில் உள்ள அக்கா வீட்டுக்கு வருவதற்கு மட்டுமே ரயில் பயணம் வாய்ப்பாக அமையும். ஆனால் இப்போது தினசரி வேலைக்கு செல்வதற்கு நம்பகமான, பாதுகாப்பான, நேரத்திற்கு செல்லக்கூடிய ஒரு பயணத்திற்கு ரயில் பயணத்தை விட்டால் வேறு வழியில்லை என்பது நிதர்சனம். பேருந்து பயணத்தைவிடவும் ரயில் பயணம் ஒருவிதத்தில் அலாதியானது. பேருந்தில் எல்லோரும் முன் பக்கம் பார்த்தபடி உட்கார்ந்தே ஆகவேண்டிய கட்டாயம். ஆனால் ரயில் பயணத்தில் எதிரே இருப்பவர்களை பார்த்தபடி அல்லது நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி செல்வதற்கும், அடுத்தவர்கள் படிக்கும் நாளிதழ்களை கடன் வாங்கியோ அல்லது எட்டிப்பார்த்தபடி படிப்பதற்கும் உகந்தது. அதோடு ஒரு கம்பார்ட்மெண்ட் முழுவதும் உள்ள மனிதர்களை கவனிக்க முடியும். அதில் பலதரப்பட்ட குணாம்சமுள்ள மனிதர்களை காணலாம்.

இன்றும் ஒரு மனிதரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. என் எதிரே உள்ள இருக்கையில் மூன்று பேர் அமைர்ந்திருந்தார்கள். அவர்கள் மூவருக்குமே வயது முப்பதுக்குள்தான் இருக்கும். இருக்கையின் முனையில் உட்கார்ந்திருந்தவர் ஜன்னல் கண்ணாடி இறக்கப் பட்டிருப்பதைக் கண்டதும் ஜன்னலோரம் அமர்ந்திருப்பவரிடம் அந்த கண்ணாடியை ஏற்றிவிடும்படி கூறினார். அதற்கு அந்த ஜன்னலோர இருக்கை வாசி நீங்களே திறந்து கொள்ளுங்கள் என்றார். அதை காதில் வாங்காத அந்த இளைஞர் மீண்டும் கண்ணாடியை ஏற்றிவிடும்படி சொல்ல, ஜன்னலோர இருக்கை இளைஞர் நீங்களே திறந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் கொஞ்சம் சப்தமாக கூறினார். உடனே அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே எழுந்து ஜன்னல் கண்ணாடியை திறந்துவிட்டு, அந்த ஜன்னலோர இருக்கை வாசியின் முதுகில் தட்டிவிட்டு அமர்ந்தார். அதற்கு அந்த ஜன்னலோர இருக்கைவாசி மேலே கைவக்கிற வேலை வைச்சிக்காத என்று கூற, அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே எங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே அமர்ந்துவிட்டார். அவ்வளவுதான் நடந்தது.

ஆனால் என் மனசுக்குள் அந்த இளைஞர் ஏன் அப்படி கூறினார்? ஜன்னல் கண்ணாடியை அவரே ஏற்றியிருந்தால் என்ன? அந்த நபர் வீட்டில் ஏதும் பிரச்னையாக இருக்குமோ? அல்லது அவரவர் வேலையை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாரா? இப்படியாக யோசித்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.
உங்களால் ஏதாவது யோசிக்க முடிகிறதா?

4 comments:

தேவன் மாயம் said...

ஆனால் என் மனசுக்குள் அந்த இளைஞர் ஏன் அப்படி கூறினார்? ஜன்னல் கண்ணாடியை அவரே ஏற்றியிருந்தால் என்ன? அந்த நபர் வீட்டில் ஏதும் பிரச்னையாக இருக்குமோ? அல்லது அவரவர் வேலையை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாரா? இப்படியாக யோசித்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.
உங்களால் ஏதாவது யோசிக்க முடிகிறதா///

எனக்கும் தெரியல!! புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று தெரிகிறது நண்பரே. அது அவருக்கு மட்டும் தான் தெரியும். நிறைய சிந்திக்கிறீர்கள் என்று தெரிகிறது. உளவியல் சம்பந்தமாக எதுவும் வாசிக்கிறீர்களா?
எனக்கு ஒரு தோழி இருந்தாள். இதே போலத்தான் அடிக்கடி கேள்வி கேட்பாள். ஒருநாள் தெருவில் நடந்து போய்
bread வாங்கி வந்தோம். பொலித்தின் உறையால் மூடியிருந்ததால் கையில் கொண்டு வந்தோம். எங்களைக் கடந்து போன பஸ் வண்டி எங்களருகே வந்தபோது, ஹோர்ன் பண்ணிவிட்டுப் போய்விட்டது. நாங்கள் பிளாட்பாரத்தில் தான் நடந்து கொண்டிருந்தோம். வேறு எவரும் தெருவில் இருக்கவில்லை. இதை அவதானித்த என் தோழி இந்த டிரைவர் எங்களுக்கு ஹோர்ன் பண்ணினானா? அல்லது எங்கள் கையில் இருந்த 'bread ' க்கு ஹோர்ன் பண்ணினானா? என்று கேட்டாள். எனக்கு இன்னும் தான் அந்தக் கேள்விக்குப் பதில் தெரியாது.

நட்புடன் ஜமால் said...

அவர்கள் இருவரும் ஊடலில் இருக்கும் நண்பர்கள் என நான் விளங்கி கொண்டேன்.

எனக்கும் இரயில் பயணம் தான் அலாதி ப்ரியம் ...

அன்புடன் அருணா said...

/நண்பர்களுடன் செல்லும்போது அரட்டை, அமர்க்களம் என்று செல்லும் பயணம் ஒரு தனி மகிழ்ச்சிதான். அதுவே தனியாக செல்லும்போது என்னை நானே திரும்பிப் பார்த்துக் கொள்வதற்கும், எந்தவித தொந்தரவும் இல்லாமல் இயற்கை அழகை ரசிப்பதற்கும், புதிதாக கவிதைகள் எழுதுவதற்கும் அந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்வையே தரும்/
நானும் அனுபவித்ததுண்டு.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...