Monday 8 December, 2008

தமிழின் நவீன சூழலும் புதிய பாதைகளும்

இன்றைய சூழலில் தமிழோ தமிழ்க்கவிதையோ சாகவில்லை. கூர்மையான சிந்தனையும் மொழி வன்மையும் கொண்ட தாகமுள்ள இளைஞர்கள் தங்கள் மெய் வருத்தம் பாராமல் புதிய நவீன கவிதைகளை அயராமல் எழுதியும், பொருள் விளக்கம் பாராமல் பிரசுரித்தும் வருகிறார்கள்.ஒவ்வொரு நவீன கவிதையும் அதற்கே உரிய அனுபவங்களின் பலத்தையும் வெளிப்பாட்டு நியாயங்களையும் உள்ளமைத்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள நந்தவனப்பூக்கள் போல் மிக வித்தியாசமான திகைக்க வைக்கும் வண்ணக்கலைகளுடன் வகைப்படுத்த முடியாத ஏராளமான தனித்தன்மைகளுடன் இன்றைய இளைய நவீன கவிதைகள் வாசகனை எதிர்கொள்கின்றன.நாற்பது வருட காலங்களுக்கு முன்பாக்கத்தி-ருந்து வேறுபட்டு புதிய பார்வையை கவிதைக்கு தரவேண்டுமென்று நினைத்தவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். அவர் படைப்புகளும் ஒரு பொதுவான ஒரு மதிப்பீட்டுக்குள் அடக்கும் தன்மை படைத்ததாக வாழ்க்கையைப் பற்றி தத்துவ பார்வையில் ஒரு பொதுவான வேறுபாட்டை முன்வைப்பதாக அமைந்திருந்தன என்று நினைக்கிறேன்.இப்படிப்பட்ட பொதுவான ஒரு வேறுபாடு ஒரு பத்து இருபது ஆண்டுகள் கவிதை படைப்புகளின் ஒரு குறிப்பிட்ட லட்சணமான அடையாளம் கொண்டிருந்தன. தொண்ணூற்றுக்குப்பிறகு நவீன கவிதைகளின் உலகம் புரட்சிகரமான வித்தியாசங்களுடன் பரவிப் பெருகி வளர்ந்துக் கொண்டு வருகிறது.ஒன்றுக்கொன்று அடிப்படையாக வேறுபட்டு மிக சுதந்திரமான சுயத்தன்மையுடன் மொழியை அசாத்திய துணிச்சலுடன் கையாண்டு வருகிறது.இப்படிப் பொங்கிப் பெருகிவரும் உற்சாகமான சிருஷ்டி உணர்வுகளை தமிழ்க் கவிதைகளின் எல்லைகளை மிகத் துணிச்சலாக விரிவுப்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தரிகெட்ட வெள்ளம்போல் பரவும் இன்றைய நவீனக் கவிதை பற்றி பாரபட்சமற்ற ஒட்டுமொத்தமான கூர்மையான மதிப்பீடுகளும், அவைகளின் அடிநாதமாக தென்படக்கூடும் ஒரு அடிப்படையான வாழ்க்கைத் தத்துவம் உண்டா? இல்லையா? என்ற ஆய்வும் நமக்கு இன்று மிக அவசியம். கவிதையின் வயது பௌதீக வயதைச் சார்ந்ததல்ல. அருமையான கவிதைகளை சிறந்த கவிஞர்கள் அவர்களின் இளம் வயதிலேயே அநேகமாக எழுதி முடித்துவிடுகிறார்கள். ஆகையால் இளம் கவிஞர்களின் சங்கம கூட்டமும், பரஸ்பர கருத்தும் பரிமாற்றமும், அதற்கும் மேலாக அவர்களுக்கிடையே ஒரு உயர்வான மனிதநேசம் கொண்ட நட்பின் தொடக்கமும் இன்றைய ம-னமாகி சிதறுண்டது போல் தோற்றம் கொள்ளும் இலக்கிய நிலமைகளை சீராக்க உதவும் என்ற ஆசையுடன் நம்புகிறோம். அத்தகைய மலர்ச்சியையே நெகிழ்ச்சியுடன் விரும்புகிறேன்.
கட்டுரை: எஸ்.வைத்தீஸ்வரன்

No comments:

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...