
ஆட்டோக்களின் பின்புறத்தில் பலரும் தங்களுக்கு பிடித்தமான பொன்மொழிகளையும், தத்துவங்களையும், கவிதைகளையும்கூட எழுதி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்தவரின் ஆட்டோ ஒன்றில் "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்று எழுதியிருந்தது.
"என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள்? பெண்கள் படித்தால் தப்பாக நினைக்க மாட்டார்களா?'' என்றேன்.
"இதில் தப்பாக நினைக்க ஒன்றுமில்லை. இது ஆண்களை எச்சரிக்கக்கூடிய, அர்த்தம் பொதிந்த வாசகம்'' என்று கூறினார்.
எனக்கு ஆர்வம் எல்லை மீறி போய்விட்டது. "கொஞ்சம் விளக்கமாகத்தான் கூறுங்கள்'' என்றேன்.
"சீறும் பாம்பை நம்பு! சாலையில் நண்பர்களுடன் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது பாம்பு ஒன்று குறுக்கிடுகிறது. நீங்கள் திகைத்து நிற்கிறீர்கள். தங்களைக் கண்டதும் பாம்பு படமெடுத்து சீறினால் அப்பாம்பு உங்களைக் கண்டு சீறவில்லை, உங்களுடன் வரும் உங்கள் நண்பரைக் கண்டுதான் சீறுகிறது என்று நீங்கள் சும்மா இருப்பீர்களா என்ன?
ஓட்டமாய் ஓடுவீர்கள். இல்லையென்றால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமில்லை! ஆக சீறும் பாம்பு யாரைப்பார்த்து சீறினாலும் தன்னைப் பார்த்து சீறியதாக நம்ப வேண்டும். அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும்.
அதே போல நண்பர்களுடன் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது கல்லூரிவிட்டு வந்த பெண்கள் அங்கு பஸ்ஸிற்காக நிற்கிறார்கள். அப்பெண்களில் ஒருத்தி உங்கள் பக்கமாக திரும்பி சிரிக்கிறாள். உடனே உங்களைப்பார்த்துதான் சிரிப்பதாக நீங்கள் நம்பிக்கைக் கொள்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் நம்புகிறார்கள். யாரைப்பார்த்து சிரித்தாள் என்று சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைதான். இப்போது புரிகிறதா, "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்பதன் அர்த்தம்'' என்றார் நண்பர்.