மற்ற திருவிழாக்கள் போலி(த்தனமி)ல்லாமல் பொங்கல் திருவிழா தமிழர் திருநாள். இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாள். ஆமாம். மற்ற திருவிழாக்கள் சடங்குகளால் நிரம்பியது. ஆனால் பொங்கல் திருவிழா உழைப்புக்கும், உழைப்பிற்கு உதவிய விலங்கினங்களுக்கும் நன்றி சொல்லும் திருவிழா! கிராமங்கள் இந்தியாவின் இதயம். அந்த இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. தொழிற்சாலைகள் பெருகினாலும், நாகரீகம் மாறினாலும், நகரங்கள் பெருகினாலும் எண்சான் உடம்பிற்கு வயிறே பிரதானம்! அந்த வயிற்றுக்கு சோறிடுவது விவசாயிகள்தான். அந்த விவசாயிகளை நாம் மறந்துவிட்டதன் விளைவுதான் இன்று விலைவாசி விண்ணை முட்டி நிற்கின்றன.விளைநிலங்களை தொழிற்சாலைகள் ஆக்கிவிடுவதன் மூலம் சில பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்.விளைநிலங்களை அழிப்பதால் அத்துணை பேருக்கும் சோறில்லாமல் போகும்!தமிழனுக்கு எப்போதுமே தும்பைவிட்டு வாலை பிடிப்பது என்ற பழமொழிப்படி நடப்பதுதான் பிடிக்கும். ஆமாம்,முதலிலேயே யோசித்து முடிவெடுத்திருந்தால் சோழநாடு சோறுடைத்த நாடு என்ற முதியோர் கூறியது இன்று பொய்யாகுமா? தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை உணர்வுபூர்வமாக பலர் வரவேற்றாலும், பலர் இதிலும் அரசியல் ரீயாகவே பார்க்கின்றனர். சிலர் ஒரு விடுமுறைநாள் (ஏப்ரல் 14)இழக்கப்படுவதாக வருந்துகிறார்கள்.தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் வாக்கு! ஆடி மாதம் தன்னிடம் உள்ள கையிருப்பை எல்லாம் விளைநிலத்தில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் விவசாயி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநாள்தான் பொங்கல். நாம் பழமொழிகளை மறந்தாலும், முதுமொழிகளை மறந்தாலும் வழிவழியாக கொண்டாடப்படும் திருவிழாக்களை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் இந்த பொங்கலையும் கொண்டாடிவிட்டு போவோம்!
No comments:
Post a Comment